அன்பு ஜெமோ சார்,
எழுதழல் தூது நாவலாகவே எழுந்து வருகிறது.அபிமன்யு இளையயாதவனை அழைக்க குந்தியால் சப்தபலத்திற்கு தூது அனுப்ப படுகிறான்.அங்கிருந்து ஸ்ரீதமரால் பாணரிடம் சோணிதபுரிக்குத் தூது செல்கிறான்.இடையில் சிருங்கபிந்துவை அவன் கைப்பற்றும் பொழுது குடிப்பாடகர் பாணரிடமிருந்து அவனிடம் தூது வருகிறார்.அவர் பாடும் கதையில் சித்ரலேகை அநிருத்தனிடம் உஷைக்காக தூது செல்கிறாள்.
காம்பில்யத்திற்கு இளையயாதவரிடமிருந்து சாத்யகி தூது வருகிறார். கூர்மபங்கத்தில் துரியனின் தூதுவனான அஸ்வத்தாமன் சல்யரை சந்தித்து அஸ்தினாபுரம் கூட்டிச் செல்கையில், குக்கிடபுரியில் பாண்டவர்களின் தூதர்களாக வரும் சுதசோமனும் சுருதகீர்த்தியும் சந்திக்கின்றனர். ஆழத்தில் புதைந்திருந்த மார்த்திகாவதி குந்தியின் சுயம்வரத்தை மறைமுகமாக தொட்டெடுக்கும் துரியன் சல்லியரைத் தன்பக்கம் வென்றெடுக்கிறான். யெளதேயனும், சர்வதனும் மூத்த யாதவரிடம் தூது செல்கின்றனர்.
ஆக சிகரமாக இளையயாதவர் அஸ்தினாபுரத்திற்கு பாண்டவருக்காக செல்லும் தூது அமையப்போகிறது .
இரா.சிவமீனாட்சிசெல்லையா.