Thursday, November 16, 2017

காண்டீபம்






அன்புள்ள ஆசானுக்கு ,  
      

நலம் தானே , நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு கடிதம். இப்போது  தான்  காண்டீபம்    படித்து  முடித்தேன். அர்ஜுனனின்  புற  பயணத்தின் வாயிலாக  அவனின்  அகத்தின்   எல்லையை அவன் மீறி  சென்று  தன்னை  கண்டடைந்துகொள்கிறான். ஒவ்வொரு மணங்களின்  மூலமாகவும்  தன்  எல்லையை  அவன்  தாண்டிய  படியே உள்ளான். குந்தியிடம்  தனக்கு கிடைக்காத  ஒன்றை பிற பெண்களிடம்  தேடுகிறான். 
        
உலூபியிடம்  தன்  ஆண்மையின்   எல்லையை கடந்து  நிற்கிறான் .  தன்னுள்  உறையும் பெண்மையையும் அவன் தீண்டி விட்டான் . அதன்  எல்லையையும்  அவன்  கடக்க என்னுகிறான். அதை  சித்ராங்கதனிடம்  கண்டு கடக்கிறான். 
   
      
 உலூபியும்  சித்ராங்கதையும்  இரு வேறு  நிலைகள் இருவரிடமும்  தன் உள்ளம்  ஆணாகவும் பெண்ணாகவும்  மாறி மாறி நடித்து  தன்னை நிறைத்து கொள்கிறான் . 
      
இதே  போல தன்  ஆணவத்தை  சுபத்திரையிடம்   மட்டுமே          மண்டியிட  வைக்கிறான். திரௌபதிக்கு நேர்  எதிர்  நிலையில்  அவளை அவன்  பார்கிறான். திரௌபதியிடம்  தன்  ஆணவத்தை  காட்டி  அவளை  வெற்றி கொள்கிறான். ஆனால் சுபத்திரையிடம்  தன் ஆணவத்தை   மண்ணாக்கி அவளை  வெற்றி  கொள்கிறான்.சுபகை அவன்  அடைந்த  பிற பெண்களின் முகமாக இங்கு வருகிறாள். ஒவ்வொரு பெண்ணிளும் தன்  எல்லையை  கடந்தே  அவன்  முன்  செல்கிறான். 
    
இதில்  அருகர் நேறி குறித்த இடங்களும்  சரி , அரிஷ்டநேமி  குறித்த இடங்களிளும் போர்  பற்றியும்  உயிர் கொலை  குறித்தும்  படிப்பவர்  அகத்தையே  மாற்றிவிட  கூடியது . பார்த்தன்  அந்த  இடத்தில்  தன்னையும் ஒரு  யோகியின்  நிலையில் நிறுத்தி  பார்க்கிறான் ,ஆனால்  இன்னும்  அந்த நிலையை அடையவில்லை ,அந்த  எல்லையை  கடந்து  சென்று  கர்மயோகியாக  அவன்  ஆக இது  ஒரு முதல்  தொடக்கம் . இதுவே  காண்டீபத்தில்  நான்  கண்டடைந்தது. 


   
   இப்படிக்கு ,
உங்கள் மாணவன் ,
பா. சுகதேவ்.
மேட்டூர்.