ஜெ,
பலராமரின் கதாபாத்திரம்
மூலபாரதத்திலேயே பெருங்கோபமும் கருணையும் கள்ளமற்றதன்மையும் கொண்டதாகவேஉள்ளது. அதை
நீங்கள் நாடகீயமாக விரித்திருக்கிறீர்கள். அதை வாசிக்கையில் பலவகையான பெரிய கதாபாத்திரங்கள்
நடுவே அர்த்தமில்லாமல் வந்து சென்ற கதாபாத்திரம் என்று பலராமரை நினைத்துவிட்டோமோ என்ற
ஐயம் ஏற்படுகிறது. அதோடு அவர் கௌரவர்தரப்பில் நின்றார் என்பதை சின்னவயசில் எப்போதோ
கதைகளில் கேட்டிருக்கிறேன். அதிலிருந்தே அவரை பீஷ்மர் துரோணர் வரிசையிலே மனம் வைத்துவிட்டது.
அவரை ஒரு பெரிய கதாபாத்திரமாக எண்ண முடியவில்லை.
அவர் எல்லா சொற்களையும்
மனப்பாடம் செய்துகொள்வதும் கணிகர் சொன்ன ஒரு சிறுமை அதை உணராமல் சொன்ன கௌரவர்கள் வாய்
வழியாக வந்தபோது அனைத்தையும் மறந்து மூர்க்கம் கொள்வதும் அபாரமான ஒரு சித்தரிப்பு.
அவருக்கும் யௌதேயனுக்குமான உரையாடலே அருமை. அவர் யௌதேயன் சொன்ன எதையும் புரிந்துகொள்ளவில்லை.
ஆனால் நம் மைந்தன் இப்படி எல்லாம் பேசுகிறானே என்று மகிழ்ச்சி அடைகிறார்.
பெருந்தன்மை ஒரு
அரிய குணம்தான். ஆனால் பெருந்தன்மையைப்புரிந்துகொள்வதும் அதன் முன்னால் கருணையுடன்
கசிந்து உருகி அதைவிடப்பெருந்தன்மையை வெளிப்படுத்துவதும்தான் மேலும் பெரியாரள் செய்யும்
செயல். அதை அவர் செய்கிறார். அந்த உயர்வு விழிகளில் நீரை வரவழைத்தது
ஜெயராமன்