அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
எழுதழல் 52 - அபிமன்யு கண்ணனின் பக்தன். பிரலம்பன் கண்ணனின் சீடன். எளிய காவலன் என்று அறிமுகம் ஆகும் பிரலம்பன் அபிமன்யுவை விட அதிகம் கண்ணனிடம் பெற்றுக்கொண்டான் என்று தோன்றுகிறது. அபிமன்யு கண்ணனின் புறத்தை, உலகு அவனுக்குத் தரும் மதிப்பை, கௌரவத்தை, புகழை, போற்றுதலை, வழிபாட்டை அதிகம் கருதுபவன், கண்ணன் மீது பேரன்பு கொண்டவன், கண்ணனின் உலகியல் உயர்வுக்கு சிறு இழுக்கு நேரும் என்றாலும் பொறுக்கமாட்டாதவன், அவனுக்கெனவே உயிரை அர்பணிப்பவன். எனினும் கண்ணனின் அகத்தை, உண்மையிலேயே கண்ணன் என்றால் என்னவோ அதை அவ்வாறே அணுக ஏதோ ஒரு தடை அவனுக்கு உள்ளது. குடிபிறப்போ, தந்தையர் பெருமையோ, வில்திறமோ அல்லது எதுவோ. பிரலம்பனுக்கு அவ்வாறான எதுவும் இல்லை. தடைகளும் எதுவும் இல்லை. தனக்கு இதுவெல்லாம் உண்டு இவற்றையெல்லாம் மொத்தமாக கண்ணனுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று சொல்வது அல்லாமல் தனக்கு என ஏதுமில்லை, அர்ப்பணிக்கிறேன் என்று சொல்லவும் அவசியம் இல்லை, அன்பும் அதன் உருக்கமும் கொண்டு கண்ணனின் அகத்தை தன்னுள் பேரருள் வெள்ளம் என பெருகச் செய்பவன் பிரலம்பன்.
"இப்புவியில் மானுடநாடகம் ஒழியாது நடக்கிறதென்றால் மானுடம் இறையிலிருந்து ஒவ்வொரு அளவில் ஒவ்வொரு விசையில் விலக்கம் கொள்கிறது என்பதனாலேயே. ஆனால் முற்றிலும் இறையிலிருந்து விலக்கம் கொள்ள இங்கு எந்த அணுத்துளியாலும் இயலாது. ஒவ்வொன்றும் அதை நோக்கியே உள்ளன, அதனால் ஆட்டுவிக்கப்படுகின்றன. அண்மையும் ஈர்ப்பும் மட்டுமல்ல சேய்மையும் விலக்கும்கூட அதன் விளையாட்டு மட்டுமே” என்கிறான் அவன்.
கண்ணன் என்னும் புத்தனுடன் பிரலம்பன் பொருந்திக்கொள்வான். புற உலகின் நிலை மாற்றங்களால் கண்ணன் இழக்கப்போவது ஒன்றுமில்லை என்று அவன் உணர்வான். அபிமன்யுவின் பக்தியில் இருக்கும் உலகியல் கவலைகள் பிரலம்பனின் பக்தியில் இல்லை.
ஒருவகையில் பக்தனைக் காட்டிலும் அத்வைதி மேம்பட்டவன் என்ற எண்ணம் தோன்றுகிறது. அத்வைதி பக்தனைக் காட்டிலும் பக்தன், உச்சபட்ச பக்தன். இறையிடம் இருந்து தன்னையும் உலகையும் பிரித்துக் காண கூட எண்ணாத பக்தன் அத்வைதி. உலகு தியாகம் என வியக்கும் செயல்களை சர்வசாதாரணமாக விளையாட்டாக செய்துவிட்டுச் செல்ல அவனால் முடியும்.
ஊழை உணர்ந்திருந்த போதும் நன்முயற்சியாக கண்ணன் மீதுள்ள பேரன்பின் காரணமாக தூது போகிறான் அபிமன்யு. கண்ணனும் ஊழை உணர்ந்தே பாண்டவர்க்காக தூது போகப்போகிறான். கண்ணனுடையது எப்போதுமே விளையாட்டு.
வானுயரும் பெருமையின் அருகிலேயே சிறுமையை பரப்பி வைக்கும் ஊழ் கண்டபோதே, அது விளையாட்டு என்று கண்டுகொண்டான் பிரலம்பன் என்று எண்ணுகிறேன். எல்லோரும் இறையுடன் ஒன்றி அவ்வாறே சென்றுவிட்டால் இப்புவியில் மானுடநாடகம் ஒழியாது நடப்பது எப்படி?. இருளும் ஒளியும் கண்ணனுக்கு ஒன்றுதான். இருமைகளை ஏற்றுக்கொண்டு அவற்றிக்கு அப்பால் இருப்பவன் கண்ணன். அவ்வாறே ஏற்றுக்கொள்ளும் தன்மை வாய்த்தால் அப்பால் தாவி அவனுள் விழுந்து கரைந்து ஒன்றுமில்லாமல் ஆவது ஆகுமோ என்னவோ?.
எப்படியோ எம் பெருங்காதலனும், உருக்குவித்து ஓட்டுவிக்கும் பேரன்பின் தலைவனும் ஆன சிவபெருமான், இங்கு கண்ணன் என்னும் பேர் சூடி ஆட்டுவித்துக் கொண்டு இருக்கிறான்.
சிவபக்தன் என்பதில் ஒரு சௌகரியம் இருக்கிறது. மிகுந்த அன்புடன் அவரைத் திட்ட முடியும், "வாடா எங்கடா இருக்க மரியாதையா வாடா" என்று அழைக்க முடியும். அவருக்கு சகிப்புத்தன்மை மிக அதிகம். ஒருவர் பஞ்சாட்சரம் ஜபிக்க பார்த்திருந்தேன். "ஓம் நம சிவாய" என்று துவங்கி ஜபித்துக் கொண்டு இருந்த அவர் நேரம் செல்லச் செல்ல "ஓம் நம ச்சீ வாயா" "வாயா ச்சீ ஓம் நம" என்று ஆக்கி, பின்னர் ஓம், நம இரண்டையும் விட்டுவிட்டு "வாயா வாயா வாயா ச்சீ வாயா" என்று மிரட்டி அழைக்க ஆரம்பித்து விட்டார். இதையெல்லாம் சொல்வதற்காக என்னை மன்னித்துவிடு சிவா. நீங்களும் என்னை மன்னித்துவிடுங்கள் அண்ணா.
அன்புடன்
விக்ரம்
கோவை