அன்பின் ஜெ,
வணக்கம்!
வெய்யோனில் சிந்துநாட்டு பட்டத்தரசியாக ஜயத்ரதனின்
மகவை கைக்கண்டு அஸ்தினபுரி நுழையும் துச்சளை, அங்கனையும் அழைத்துக்கொண்டு புஷ்பகோஷ்டத்து மாளிகையில் காந்தாரியை சந்திக்கிறாள்.
ஜயத்ரதனின் குழந்தையை பார்த்து
"அழகன்" என்று கர்ணன் சொல்கிறான்.
"அழகனெல்லாம் இல்லை. நான் நன்றாக தொட்டுப்பார்த்துவிட்டேன். உனக்கு உன்னைப்போல மைந்தன் பிறந்தால்தான் எனக்கு அழகிய பெயரன் அமையப்போகிறான்” என்று பதிலுறைக்கிறாள் காந்தாரி.
தலைச்சன் பேரனாக லெட்சுமணன் இருந்தாலும், ஆசைமகளின் சிறு மகவு கையில் இருந்தாலும், அங்கனின் வாரிசே அழகனென அமைவானென எதிர்பார்க்கிறாள் காந்தாரி.
இதோ, பண்பாளனாகவும் பரிமளிக்கிறான் அவ்வழகன்
எழுதழலில். மொத்தகுடிகளும் பிறிதொன்றை ஒருகணம் எண்ணி அமைந்திருக்க,வீதியுலா சென்று திரும்பும் உற்சவரை ஆலயம் சேர்க்கும் பக்தியுடன் மின்கதிரை தரையிறக்கி தம்பியருடன் தாள்பணியும் விருஷசேனன்...
வெண்முரசில் அங்கனுக்கு
ஈடாக யாதொரு மாந்தரும் இதுகாறும் என்மனதில் தோன்றியதில்லை. துலாத்தட்டில் விருஷசேனனை விரும்பி ஏற்கிறேன்.
நட்புடன்,
யோகேஸ்வரன் ராமநாதன்.