அன்புள்ள ஜெ. வணக்கம்.
கண்ணன் அர்ஜுனனுக்கு வயிறுமுழுவதும் பாற்கலம்கொண்ட அன்னை. கண்ணன் அபிமன்யூவிற்கு குருதிசுவைத்தேடிவந்து கொன்று தின்று பல்தெரிய சிரிக்கும் சீயம்.
பிரலம்பன் யார்? உலகில் உள்ள உயிர்களின் ஒரு துளி சாட்சி. கண்னன் பிரலம்பனுக்கு யார்? விண்ணில் பீலிகாட்டி, மண்ணில் பாதம் காட்டி உள்ளில் சேரும் அமுது. அருகில் இருக்கும் மானிடன். கண்ணன் ஏன் அன்னையாகின்றான், கண்ணன் ஏன் சிம்மம் ஆகின்றான். எந்த ஆராட்சிக்கும் அவன் போவதில்லை. போகவேண்டிய தேவையும் இல்லை.
குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் சொல்வார் “ஒரு டம்ளர் கள்ளில் உனக்கு போதை வரும் என்றால், குடத்தில் எவ்வளவு கல் இருக்கிறது என்று ஏன் ஆராய்கின்றாய்“
பிரலம்பனுக்கு கண்ணனின் ஒரு பார்வை ஒரு புன்னகை ஒரு தொடுதல் ஒரு அருகு அமைதல் போதும். அவன் பிறந்ததன் பயனை அடைந்துவிடுவான். அதற்குமேல் அவனுக்கு ஏன் ஆராட்சி.
பிரலம்பன் போல துவாரகையின் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் கண்ணன் தன்னை ஊட்டி பசிநீக்குகின்றான். அதற்குமேல் அவர்களுக்கு என்ன வேண்டும். அவர்கள் கண்ணீர் அதற்கு சான்று சொல்லும்.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.-என்கின்றார் வள்ளுவர்.
புன்கணீர் பூசல் தரும்.-என்கின்றார் வள்ளுவர்.
அவன் யாரோ? எவரோ? இவர்கள் அறியவேண்டியதில்லை. இவர்கள்மீது அவன் அன்பு வைத்திருக்கிறான். அவன்மீது இவர்கள் அன்பு வைத்திருக்கிறார்கள். அன்பும் சிவமும் இரண்டு அல்ல இவர்களுக்கு. அன்புதான் சிவம். சிவம்தான் அன்பு. அன்பானவர்கள். அன்புக்கு ஏங்குபவர்கள். அன்பை பெறுபவர்கள். அன்பை கொடுப்பவர்கள். கண்ணனின் சிறு புன்னகையில் அருகுநிற்கவைப்பதில் பிரலம்பன் முழுமை அடைகின்றான்.
பிரலம்பன் போன்றவர்கள் அல்ல கண்ணனின் மனைவியர். அவர்கள் கள்குடிப்பவர்கள் அல்ல கடலைக்குடித்தவர்கள். கடலைக்குடித்த பெருமை இருக்கும் ஆனால் நாவில் உப்புக்கறிப்பும் இருக்கும். கண்ணனின் மனைவியர் எண்மரும் சிறுஅகல்கள் அல்ல ஒரு தீக்குச்சியில் ஏற்றி ஒளிசெய்ய, பெரும் நிலாக்கள். சூரியன் தான் அவர்களின் ஒளியும், சூரியன்தான் அவர்களின் இருளும். கண்ணன் முன்பு அவர்கள் தன்னையே ஒப்படைத்து நிற்கின்றார்கள் என்பதுபோல் இன்று தோன்றுகின்றது இல்லை உண்மையில் கண்ணன் அவர்களுக்கு தன்னேயே முழுமையாக கொடுத்து உள்ளான். அதற்கு முன்பு அவர்கள் செயல் ஒழிந்து துவண்டு கண்ணீர்விடுகி்ன்றார்கள். அதை கண்ணனின் விளையாட்டு.
இது இங்கு இருக்க. சத்தியபாமையையும்,ருக்மிணியையு ம் நீங்கள் படைத்திருக்கும் விதத்தில் வியந்து நிற்கின்றேன். அற்புதமான படைப்பு.
கண்ணனை சந்திக்கும் சத்தியபாமையின் முதல் வசனத்தையம், ருக்மிணியின் முதல்வசனத்தையும் அளந்து அர்த்தப்படுததி அவர்களின் அகம் புறம் விளங்க வெளிப்படுத்தி உள்ளீர்கள்.
சத்தியபாமை கண்ணனுக்கு செங்குழம்பு திலகமிட்டு ““தங்கள் நகர் மீண்டும் ஒளிகொள்கிறது, அரசே. அடிபணியும் குடிகளை வாழ்த்தியருள வேண்டும்” என்றாள்.
ருக்மிணி மஞ்சள் கலந்த நீரை கண்ணனின் பாதத்திற்கு பூசைசெய்து அதன் துளியை தனது நெற்றி வகிட்டில் சூடி ““இவ்வரண்மனை பொலிவு கொள்கிறது. உங்கள் மைந்தர்கள் மீண்டும் வாழ்த்தப்படுகிறார்கள்” என்றாள்.
எந்த கணத்திலும் எந்த இடத்திலும் தன்னை ராணி என்றே வைத்திருக்கும் சத்தியபாமையின் ரஜோகுணம் விளங்கும் வார்த்தையும் நெஞ்சமும் வெளிப்பட காட்டி உள்ளீர்கள். எந்த கூட்டத்திலும் எந்த வாய்ப்பிலும் தன்னை அன்னை என்று வைத்திருக்கும் ருக்மிணியின் சத்துவகுணத்தை விளக்கி காட்டி உள்ளீர்கள். அருமையான எண்ண ஓட்டங்கள், அருமையான அகவடிவங்கள். மனிதர்கள் உடம்பால் ஆனவர்கள் அல்ல, அவர்களின் எண்ணத்தால் குணத்தால் ஆனவர்கள் என்பதை அருகிருந்து காணமுடிகின்றது.
ஓஷோ பெண்களை அறியவேண்டும் என்றால் அவர்களின் வாய்வார்த்தையை ஆராய்ந்துக்கொண்டு இருக்காதே. அவர்களின் செயல்களை கவனி என்பார். முன்னாடி இருந்தும் முதன்மையாக இருந்தும் சத்தியபாமையிடம் இல்லாத ருக்மிணியின் பக்தி அவள் செயலில் தானாகவே பூத்துவந்து மணக்கிறது.
சத்தியபாமை ருக்மிணியின் எண்ண ஓட்டத்தை தாண்டி கண்ணனிடம் மீண்டும் செல்வோம். கூட்டத்தில் கூட்டமாகி கரைந்து கூட்டத்தின் ஒரு துளியாக சென்றுவிட்ட பிரலம்பனை கண்ணன் அழைத்து தன்னுடன் தேரில் ஏற்றிக்கொள்கின்றான். பிரலம்பன் அது அரசதேர் என்பதால் ஏற தயங்குகின்றான். கண்ணன் புன்னகையுடன் அரசதேர்தான் ஏறிக்கொள் என்கிறான். ஏறிக்கொண்ட பிரலம்பன் “இன்’று முழுமைப்பெற்றேன்“ என்கிறான்.
முழுமைப்பெற்றேன் என்று சொல்லும் பிரலம்பனிடம் கண்ணன் சொல்கிறான். “பிரம்மம் தன்னில் ஒரு குறையை உருவாக்கிக் கொண்டது. அதுவே ஜீவாத்மாக்களாக ஆகியது” என்றார். முழுமையானாலும் புரிய ஒன்று எப்போதும் இறைவன் இ்டம் இருக்கும் அது பக்தனுக்கு புரியவேண்டிய தேவை இல்லை. அவனுக்கு எப்படிப்புரிகின்றதோ அப்படி புரிந்துக்கொண்டால் போதும் என்பதுபோல் கண்ணன் தன் கால்வடுவைக்காட்டிசெல்கின்றான்.
ஊஞ்சலில் உட்கார்ந்து இருக்கும் கண்ணனை மயூரிக்காணவருகின்றாள். கண்ணன் எழுந்து சென்று வாரி அனைத்துக்கொள்ளவில்லை. அவள் வரும்வரை காத்திருந்து வந்தபின்பு இழுத்து அனைத்து அழவிடுகின்றான். மயூரிக்கு ஒரு பெயரும் தருகின்றாள் அது ராதை. அதன் அர்த்தம் ஆராதிப்பவள். அவள் பக்தை. பக்தர்கள் இறைவனின் வடிவாக திகழ்கிறார்கள். இறைவனை காணும்போது அஞ்சி பின்வாங்குகின்றார்கள். குருமுந்தித்தள்ள இறைவனிடம் சென்று ஒன்றிவிடுகின்றார்கள். ஆனந்தகண்ணீரில் இறைவனை மூழ்கடிக்கிறார்கள். இங்கு மயூரியாக பிறந்து ராதையாக மாறும் பத்தர்களை கண்ணன் காண்கின்றான். அது மட்டும் கண்ணனுக்கு போதவில்லை. அது முழுமை இல்லை. அது அவன் புகழுக்கு உயர்வு இல்லை. இவன் தேடி போகவேண்டிய ஒரு ஜீவன் இருக்கிறது. அதை நோக்கி இவன் ’ஓடுகின்றான். அதை அடையும்போதுதான் இவன் முழுமைக்கொள்கின்றான்.
ராதைபெண் இளையவள் இருந்தும் எழுந்துப்போகத கண்ணன், முரளியை கண்டதும் அமர்ந்து இருந்த கண்ணன் எழுந்து சென்று அள்ளிக்கொள்கிறான் முத்தமிடுகின்றான். அவன் எச்சிலில் தன் முகத்தை பதியம் செய்கிறான்.முரளிப்பார்க்கமாட் டான் கேட்கமாட்டான் சுவைக்கமாட்டான் உணரமாட்டான் நுகரமாட்டான் அறியமாட்டான் ஆனாலும் கண்ணன் அவனுக்காக குழல் இசைக்கிறான்.
ராதைகள் கண்ணனுக்காக மண்ணில் பிறக்கிறார்கள். கண்ணன்கள் முரளிக்காக .மண்ணில் பிறக்கிறான்.
இப்பொழுதுதான் பிரலம்பனிடம் கண்ணன் சொன்னதன் அர்த்தம் வெளிப்படுகின்றது. “பிரம்மம் தன்னில் ஒரு குறையை உருவாக்கிக் கொண்டது. அதுவே ஜீவாத்மாக்களாக ஆகியது“
ஜீவாத்மாக்கள் ஜீவாத்மாக்களை அறியமுடிவதில்லை. பிரம்மம் ஜீவாத்மாவை அறிகின்றது. ஜீவாத்மா தன்னில் இருந்து வந்ததான்தான் என்று தன்னோடு இணைத்துக்காட்டுகின்றது.
இ்ந்த இடத்தில் இருந்து ஜெ தாங்கள் செய்த ஆழமற்ற நதி- http://www.jeyamohan.in/ 102252#.WfrYT49L_IU சிறுகதையின் கதிரை நினைத்துப்பார்க்கின்றேன். கதிர் என்னும் ஜீவாத்மாவை அறியும் ஒரு பிரமமும் அங்’கு இல்லை. காரணம் அங்கு இருப்பது எல்லாம் எல்லா குறைகளும் உடைய ஜீவாத்மாக்கள் மட்டும்தான். ஜீவாத்மாக்கள் ஜீவாத்மாக்களை அறியமுடியாது கரையேற்ற முடியாது. அவைகள் தான் தப்பித்தால் போதும் என்று ஓடிப்போய் கரையேறி நின்று பயப்பட்டு்ப்பார்க்கும். ஏன் ஏன்றால் அவைகள் ஆழமற்ற நதிகள். அதற்குள் ஒரு ஜீவன் மூழ்கிவிடமுடியாது. பிரமம் ஆழமுள்ள நதி அதுநினைத்தால் எத்தனை ஜீவன்களை மூழ்கடித்து புனிதபடுத்திவிடமுடியும். கண்ணன் ஆழமுள்ள நதி. அவனால் முடியும் முரளியை மூழ்ககடிக்க. தன் இசை என்னும் வெள்ளத்தில் மூழ்கடித்து அந்த ஜீவனை கரையேற்றுகின்றார்.
மிக மிக அற்புதமாக செய்து உள்ளீர்கள் ஜெ. எளிய வாழ்க்கையும் சம்பவங்களும் அதன் தத்துவ உச்சத்தில் ஏறி கனியும் கணத்தை காட்டி கனிச்சாறு பருகசெய்கின்றீர்கள்.
மாணிக்கவாசக சுவாமிகள் அம்பலக்கூத்தனை எண்ணி உருகும் உருக்கத்தை எண்ணி கண்ணன் முன்நிற்கின்றேன்.
மாறிலாத மாக்கருணை வெள்ளமே வந்து முந்திநின் மலர்கொள் தாளிணை
வேறி லாப்பதப் பரிசு பெற்றநின் மெய்ம்மை அன்பர்உன் மெய்ம்மை மேவினார்
ஈறி லாதநீ எளியை யாகிவந் தொளிசெய் மானுட மாக நோக்கியுங்
கீறி லாதநெஞ் சுடைய நாயினேன் கடையன் ஆயினேன் பட்ட கீழ்மையே
வேறி லாப்பதப் பரிசு பெற்றநின் மெய்ம்மை அன்பர்உன் மெய்ம்மை மேவினார்
ஈறி லாதநீ எளியை யாகிவந் தொளிசெய் மானுட மாக நோக்கியுங்
கீறி லாதநெஞ் சுடைய நாயினேன் கடையன் ஆயினேன் பட்ட கீழ்மையே
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.