Tuesday, March 27, 2018

மீச்சிறு பொழுது (இமைக்கணம் -1)



எல்லைகளற்று அகன்று விரிந்த வான்பெருவெளியில்
எவ்வொரு பரப்பும்   மீச்சிறு அளவே.
 முடிவிலி வெளியோ சிறு கோளமென  உருண்டோடுவது 
முதல் கடையற்ற காலமெனும்  நீள் பெருஞ்சாலை.
காலவழியின் இடைவெளி  எதுவும்  மீச்சிறுபொழுதே.  
இறந்த காலம் இமைப்பொழுதில் ஓடியது.
நிகழும் காலமும் இமைப்பொழுதில் மறைகிறது.
எதிர்வரும் காலம் இமைப்பொழுதில் கடந்தோடும். 
கணங்களை நினைவென நிறுத்தப் பார்க்கிறது  மனம்.
மழலைக் கையேந்திய நீர்போல வழிந்தோடுகிறது அது.
காலத்தை பிடிக்கவிரித்து கிழிந்து கிடக்கிறது வரலாறு. 
எழுத்தச்சனின் எழுத்தாணியால் அறைந்து நிற்கிறது  காலம்.
அவன் காகிதத்தடாகங்களில் தேங்கி நிற்கிறது கணப் பொழுதுகள் 
அங்கு முப்பரிமாணம் கொள்கிறது காலம் 
முன்னும் பின்னும் உள்ளும் புறமுமென அதில் 
நீந்தி திளைக்கின்றனர் வாசகர்கள் 
வெண்முரசு எனும் காலநீர்ப் பெருந்தேக்கம்


இமைக்கணம் என இன்னும் விரிகிறது. 
அதனுள் குதித்து மூழ்கியென் சிற்றறிவால் 
துழாவி அறிய விழைகிறது எனதகம்.

தண்டபாணி துரைவேல்