Saturday, March 24, 2018

சொல்லவை குறிப்புகள் - 5 (குருதிச்சாரல் - 78)


கிருஷ்ணரின் முடிவுரை:
  • அளவை நெறியென்பது உயிரை உள்ளடக்கி வைத்திருக்கும் விதை போன்றது. அதனுள்ளிருக்கும் உயிர்  அழிந்துவிடாமல் காத்து வரும் ஒப்பற்ற பணியை விதை செய்வது போல வேத மெய்மைகள் அழிந்துவிடாமல் காத்துவரும் பெரும்பணியை  அளவை நெறி ஆற்றிவருகிறது. ஆனாலும் விதையினுள் இருக்கும் உயிர் முளைத்தெழுந்து வருகையில் அதைத் தடுப்பதாக அது அமைந்துவிடக்கூடாது.   வேள்விகள், சடங்குகள் போன்றவைகளைத் தாண்டி  வேத மெய்மை கிளைத்தெழுந்து பரவவேண்டும். 
  •  வேள்வி என்பது யோகமென மாறவேண்டும். மண்ணிலிருந்து மணம் எழுவதைப்போல தீயிலிருந்து ஒளி எழுவதைப்போல வாழ்வனவற்றின் உடலில் உயிராற்றல் வெளிப்படுவதைப்போல, தவம் செய்பவருக்கு  ஞானம் எழுவதைப்போல,  இந்த வேள்வியில் இருந்து மெய்மை எழ வேண்டும். 
  • ஒருவனுள்ளுறையும் அந்த முழுமையிலிருந்தே அவன் காமம் சினம் விழைவு போன்ற உணர்வுகளைப் பெறுகிறான் என்றாலும் அவை அல்ல அந்த முழுமை.
  • அந்த மெய்மையை எவ்வகை என கொண்டு வழிபடப்படுகிறதோ அவ்வகையில் எழுந்தொளிர்கிறது.  முழுமைகொண்ட  அந்த மெய்மையை மட்டும் இலக்கெனக் கொண்டு முயல்பவர்களே அதை அடைகிறார்கள்.  
கௌதம சிரகாரி:  உங்களை யார் என நான் அறிந்துகொள்ள வேண்டும்?



கிருஷ்ணர்:  முழுமையை அறிந்து அனைத்துயிரையும் தான் என்றுகொண்டு நிற்பதால் நான் என்றும் மற்றவர்களால்  அறியப்படாததாக இருப்பதால் அது வென்றும் சொல்வது வேத முடிபின் மரபாக் இருக்கிறது. .   
      
புருஷ மேத வேள்விக்கு முன்பான சொல்லவையின் அறிவு உசாவல்  நிறைவு பெறுகிறது.  

தொகுப்பு:
   

 கிருஷ்ணர் தனி ஒரு ஆளாக வேத முடிபுக் கொள்கைளின் முதன்மையை  முன்வைத்துப் பேச கௌதம் சிரகாரி மற்றும் மற்ற வேத வல்லுனர்கள்  அளவை நெறியின் மாற்றமில்லாமையை வலியுறுத்துகின்றனர்.  வேத முடிபு மெய்மையின் அடிப்படையில் கிருஷ்ணர் ஷத்திரியர்கள் பிறப்புரிமையாக கொண்டு மற்ற இனத்தவர்கள் மீது செலுத்தும் ஆதிக்கத்தை கேள்விகேட்கிறார்.  அவர்களுக்கு அந்த உரிமையைத் தரும் அளவை நெறியை கேள்விக்குட்படுத்துகிறார். வேத முடிபு மெய்மையை மையமாகக்கொண்டு அளவை நெறி காலத்திற்கேற்ப  மாற்றத்துக்கு உள்ளாகவேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார். அதற்கான அனைத்து தர்க்கங்களையும் முன் வைக்கிறார்.  நால் வேதங்கள்கூட உலக மக்கள் அனைவருக்கும் பொதுவாக இல்லாததையும் அப்படி இருக்க முடியாததையும், இவற்றை கணக்கில் கொண்டு வேள்விகள் சடங்குகள் போன்றவற்றில் சில கழிக்கப்பட வேண்டியதும் புதிதாக  சிலவற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டியதின் இன்றியமையாமையும்  உலகின் அறிவுத்துறைகள் எல்லாம் ஒருங்கிணைத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தையும் தன் தர்க்கத்தின் மூலம் அவர் நிறுவுகிறார்.   முதலில் அளவை நெறியினர் தம் தத்துவத்தின் இன்றியமையாமையும், அது அனைத்து மக்களும்  பின்பற்றத்தக்கதாய் இருப்பதாக வாதிடுகின்றனர்.   கௌதம் சிரகாரி முதலானோர் நால் வேதங்களே அனைத்திலும் முதன்மையானது அதன் கூற்றுக்கள் அதன் வழிகாட்டலின் படி நடக்கும் வேள்விகள் சடங்குகள், மனிதருக்குள் அது எற்படுத்தியிருக்கும் பிறப்புக்கடமைகள் சிறிதளவும் மாற்றிக்கொள்ளமுடியாதவை என்று வாதிடுகின்றனர்.  ஒரு கட்டத்தில்  கௌதம சிரகாரி தர்க்கத்தை கைவிட்டுவிட்டு   எங்கள் பிறவிக்கடன்  இப்படி வேதங்கள் சொல்லும் நெறிகளை மீறாது இருத்தலும் அந்த நெறிகள்  மாறாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுதலும்தான் என்றும்,   இவற்றை உசாவுதலுக்கான, வேதக்கருத்துக்களை மீறி சிந்திப்பதற்கான  தகுதியோ உரிமையோ எங்களுக்கு இல்லை என்றும் கூறுகின்றார்.  இப்போது  அவர்கள்  தம் செவிகளை அடைத்துக்கொண்டுவிட்டனர் என்றுதான் சொல்லவேண்டும். கிருஷ்ணர் அதனால் தன் தர்க்கத்தை முடித்துக்கொள்கிறார்.  
    

அதே நேரத்தில் இவ்விவாதத்தின் மூலம் நம்மால்  அளவை நெறியின் இன்றியமையாமையை விளங்கிக்கொள்ள முடிகிறது. அத்துடன் அதன் போதாமைகளும் நமக்கு உணர்த்தப்படுகின்றன. தத்துவத்தில் வேதமுடிபின் உச்சம்பற்றிக் கூறப்பட்டாலும் அது சொல்லவரும் மெய்மை தரிசனம் என்னவென்று இங்கு விளக்கப்படவில்லை. அதற்கான களம் பின்னர் அமையும் என்று நினைக்கிறேன்.   வெண்முரசு ஒரு ஆசானாக உரு கொண்டு எழுந்து நமக்கு ஞானம் போதிக்கும் தருணங்களில் ஒன்றென இந்தச் சொல்லவை அறிவுசாவல் திகழ்கிறது.

தண்டபாணி துரைவேல்