Thursday, March 22, 2018

காளை




அன்புள்ள ஜெ,

சுதர்சனை காணும் துரியனின் காளை நிழலுருவத் தோற்றம் படித்த போதே புஷ்கரனைத் தவிர வேறு எதையோ ஆழ்மனம் நிரடிக் கொண்டிருந்தது. கட்புலனுக்குத் தெரியாத மாற்றுருவை நிழலில் காண்பது வெண்முரசில் முன்னரும் வந்திருக்கிறது. சத்யபாமையின் நிழலில் சிசுபாலனுக்கு வராகி உருவம் தோன்றுவது நினைவில் எழுகிறது.

இன்று காடன் விளி குறித்த வாசகர் கடிதம் சரியான ஒரு தருணத்தில் வெண்முரசோடு இணைந்து வந்ததாகத் தோன்றியது. Call of the wild என்று காடன் விளி பொருள் மயக்கம் கொண்டு இன்று தோன்றுகிறது. கலி, இருள், ரஜஸ், ஆசுரம் எத்துனை பெயரிட்டாலும் இதன் முடிவற்ற அழைப்பின் மறுமுகமாகவே ஒளி திகழ்கிறது.  

கலிங்கத்தில் மணத்தன்னேற்புக்கு முன்னர் 
சுதர்சனை சுப்ரியையிடம் கூறுகிறாள்   - "வாளின் நிழலைக் கண்டு உளம்கொண்டு பின் தவமிருந்து அத்தலைவனை அடைந்த இளவரசியின் கதைகள் முதிரா இளமையில் கேட்க இனிதானவை."

எனில் நிழலைக் கண்டு காதல் கொண்டவளாக சுதர்சனையே இருக்கிறாள். ஒளி ஊடுருவிச் செல்ல முடியாத நிலையே நிழல் எனில், சுதர்சனை அவளது தன்விழைவுகளால் உருவாக்கிக் கொண்ட அகத்தை வேறு எதுவும் ஊடுருவிப் பயணிக்க முடியாத நிலையில்  அவள் அகம் கொண்ட நிழலென வந்தவன் துரியன். அதுவே அவன் தோற்றத்தின் மேல் அவள் கொண்ட தோற்ற மயக்கம். 

அவனது கலி ஆட்கொண்ட மாற்றுருவை அவளது ஆழுள்ளம் உணர்கையில் காட்சிப்பிழை கலைகிறது, சித்தம் பிறழ்கிறது. எதுவும் தன்னிலையிலிருந்து திரிவதை பிறழ்வென்றே மானுடர் கருதுகின்றனர். சுப்ரியை தன் வஞ்சமும் சிறுமதியும் இன்றி இருப்பதும் சபரிக்குப் பிறழ்வெனவே தெரிகிறது அல்லவா?

எனில் இத்தனை காலம்
சுப்ரியை இன்னொரு முனையில் சூரியனை நோக்கி நிற்கிறாள். நாளவனை முகம் நோக்க நிழல் தெரிவதில்லை. அவள் விறலி சமீரை முன்வரவு அறிவித்தது போல முட்டைக்குள் சிறகு வளர்த்து கதிர் எழும் வானை எண்ணியே வளரும் புறா. முட்டையை உடைத்து வெளிவரவே அத்தனை காலம் அத்தனை விசையும் வஞ்சமும்.

வைரம் துளையிடமுடியாது முற்றிலும் இறுகிய நிலையில் ஒளியை முற்றிலும் ஊடுருவிச் செல்ல அனுமதிக்கிறது. இது 
சுப்ரியை; கருகமணியை துளையிடலாம் எனில் ஒளி ஊடுருவுவதில்லை. இது சுதர்சனை என்று தோன்றுகிறது.
 
சுனிதை-சுனந்தை எனும் கலிங்கச் சகோதரிகள் போல இருள் ஒளி என இரு முகம் காட்டும் கலிங்க மகளிர். அந்த மூதன்னையர் நிகழ்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

//தெய்வங்களில் இருளென, ஒளியென வேறுபாடு இல்லை. முடிவின்மையே அவற்றின் இயல்பு. அங்கு இரண்டின்மையே உள்ளது//  இதை இருபாலினத்தவராகிய சூஷ்மை சொல்வதில் அழகு உள்ளது.  

ஒளியும் நிழலும் பின்னும் ஊடுபாவுகளாய்த்தான் மனம் உணர்ந்து கொள்கிறது. இன்னும் அறுதியாய்க் காட்சி தெளியவில்லை.


மிக்க அன்புடன்,
சுபா