Sunday, March 25, 2018

மழைப்பாடல் உரை. த.துரைவேல்



புதுவைவெண்முரசு வாசகர் வட்டம் கூடுகை
(நூல் 2 - கூடுகை 2)  

( த.துரைவேல் உரை)


யாரை நம்புகிறோம் நாம்:


பீஷ்மர் புன்னகை செய்து “என்னை நீர் நம்பலாம்” என்றார். “நம்புகிறேன். ஆனால் அதைவிட நான் என்னையும் என் அறிவையும் நம்புவதல்லவா மேல்? உங்களை எனக்கு சற்றுமுன்னர்தான் தெரியும். என்னை நான் பிறந்தது முதலே தெரியும்” என்றான் வித்யுதத்தன். பீஷ்மர் சிரித்தார். (மழைப்பாடல் 11)

   
இது வேடிக்கை மொழி போல தோன்றினாலும் விதுயுதத்தன் சொல்வது முற்றிலும் சரியானது.  உண்மையில் நாம் யாரையும் நம்புவதில்லை. ஒரு குழந்தைகூட தன் பெற்றோரை ஏன் என்று கேள்வி கேட்கிறது.  யார் ஒருவர் சொல்வதையும் நாம் நம் அறிவென்ற தராசில் நிறுத்தே அதை ஏற்றுக்கொள்ளலாமா என்று முடிவெடுக்கிறோம்.  எப்படிப்பட்ட உயர்ந்தவர்கள் கூறியதாக இருந்தாலும் அறிவு ஏற்றுக்கொள்ளாத ஒன்றை நாம் ஏற்றுக்கொள்வது இல்லை. எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அதில் மெய்ப்பொருள் கான்பது நம் அறிவு மட்டுமே.   

நாம் செய்ய வேண்டியதெல்லாம் நம் அறிவின் குறைபாடுகளை முடிந்தவரை போக்கிக்கொள்ள முயல்வதுதான்.  அப்படியென்றால் யார் சொல்வதையும் நாம் நம்பக்கூடாதா   என்ற கேள்வி வருகிறது.  நம் அறிவினால்  ஆராய இயலாத போது யார் சொல்கிறார், எதைப்பற்றிச் சொல்கிறார்  அதற்கான அவர் தகுதியை நம் அறிவுகொண்டு உசாவியே  அவர் சொல்வதை நாம் நம்பவேண்டும்.


அரித்தழிக்கும் காலம் என்ற சிதல்.


ஒவ்வொரு புற்றும் கடலில் எழும் சிறு குமிழிபோலத்தான் என்றார்.” சிரித்தபடி “அஸ்தினாபுரி ஒரு குமிழி. மாளவமும் வேசரமும் குமிழிகள். அப்பால் திருவிடமும் தமிழகமும் குமிழிகள்” என்றார்.
  (மழைப்பாடல் 11)


 மனிதன் தான் உருவாக்கும் எதுவும் காலம் காலமாக நிலைத்து நிற்க வேண்டும் என்ற எண்ணத்தோடே செய்கிறான்.   ஒரு எளிய வீட்டைக் கட்டுகையில்கூட இது தன் காலத்திற்கு பிறகும் நிலைத்து நிற்க வேண்டும் என நினைக்கிறோம். இப்படியே நம் குடும்பம் வாழையடி வாழையாக வாழவேண்டும் என நினைக்கிறோம்.  ஒரு அரசு என்றும் வீழாமல் நிலைத்து நிற்கும் எண்ணத்துடனே நெறியமைத்து கட்டமைக்கப்படுகின்றன.  ஆனால் மனிதனின் இந்தக் கட்டுமானங்களை எல்லாம் காலம் சிதலென பெருகி அரித்து அழிக்கிறது. வரலாறெங்கும் இப்படி காலம் கரைத்தழித்த  மனிதக் கட்டுமானங்களின் எலும்புக் குவியலையே நாம் காண்கிறோம்.  

வெண்முரசு மழைப்பாடலில் இது பீஷ்மர் வாயிலாக நமக்கு  விவரிக்கப்படுகிறது.  சிந்துச் சமவெளி நாகரீகத்தை  ஒப்பிடவைக்கும் கட்டுமான எச்சங்களை பீஷ்மர் பார்வையிடுவதான விவரணை ஒன்று வருகிறது.  காலத்தின் ஒவ்வொரு கணமும்  சிதல்கள் என பெருகி அந்த நகர நாகரீகத்தை அழித்து மண்ணாக்கியிருக்கிறது.   அதே நேரத்தில்  சிதல்கள் உயிரற்றவையையே அழிக்க முடியும்.  இறந்து வீழ்ந்த பெருமரம்  அரிக்கப்பட்டு மண்ணாகிவிடலாம்.  ஆனால்  அதன் விதைகள் எங்கெங்கோ பரப்பப்பட்டு முளைத்தெழும்.

 அப்படியே மனித இனங்கள் தன் அடையாளம் இழந்து அழிந்தாலும் அவை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு இனங்களாக பெருகி வளர்ந்திருக்கின்றன.  அப்படி பீஷ்மர்  காலம் அழித்த நாகரீகத்தின் எச்சங்களாக இந்திய மனித இனங்கள் இருக்கலாம் எனக் கணிக்கிறார்.   இது அதீதக் கற்பனை இல்லை.    தர்க்கத்திற்கு உட்பட்டதாக இருப்பதாகவே நான் கருதுகிறேன்.


புவியில் எல்லைகளை உருவாக்கும் வரிகள்.   


ஆனால் இங்கே எல்லைகள் என ஏதும் இல்லை. ஏனென்றால் சுங்கம் இல்லை” என்றான் வித்யுதத்தன். 
(மழைப்பாடல் 11)


   
 புவிப்பரப்பின் மீது மனிதனால் வரையப்பட்ட பல்வேறு எல்லைக்கோடுகள் இருக்கின்றன.     மனிதன் புவியின் பாகம் ஒன்றை  தன் உடமையென்று கருதி  ஒருவன் அல்லது ஒரு குழுவினர் வகுத்துக்கொள்வதனால் உருவானவை.  அவற்றை சொந்தம் கொண்டாடும் அவன் தன் எல்லைக்குள் வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கின்றான்.  இந்தக் கட்டுப்பாடுகளே ஒரு தேசத்தை இன்னொரு தேசத்திடமிருந்து பிரிக்கின்றன. சுங்கம் விதிப்பது என்பது   அக்கட்டுப்பாடுகளில்  முக்கியமானது.  ஆகவே தேசத்தின் எல்லைகளை  இந்தக் கட்டுப்பாடுகளே நிர்ணயிக்கின்றன. 


வாழ்வெனும் பாலையை சோலையாக்கும் இலக்கியம்.  
 (மழைப்பாடல் 12)
   

பீஷ்மர் பாலைநிலப் பரப்பில் நடக்கும்  பயணம் சூதர்கள் வழிகாட்டுதலையும் அவர்கள் பயணத்தை களைப்புறாமல் காப்பதாக அவர்கள் பாடல்கள் இருப்பதையும் கூறுகிறார். அதை நாம் இப்படியும் ஒப்பிட்டுக்கொள்ளலாம்.   தம் சிந்தையை பெருக்கிகொண்டவர்களுக்கு வாழ்க்கை என்பது  காலம் என்ற பாலை நிலத்தில் செல்லும் பயணம் என்று அமைந்துவிடுகிறது.  பெரிதான அனுபவங்கள் ஏதுமற்ற வறட்சியான் ஒன்றாக  வாழ்வை அவர்கள் உணர்கிறார்கள்.  அந்த வாழ்வெனும் பயணத்தில் செல்லும் வழிகளில் அரிதாக  குளிரூற்று கொண்ட சோலைகள் , நிழல் தரும் கனி மரங்கள்   தென்படுகின்றன.  


ஆனால் அது கூட அனைவருக்கும்  அமைவதல்ல. சிலர் தன் பயணம் முழுவதும் வெற்று  பாலை நிலத்தையே காண்கின்றனர்.    இலக்கியம் ஒருவன் வாழ்வில் காணும் போதமைகளை இட்டு நிறப்புகிறது இலக்கியத்தின் வாயிலாக பல சிலிர்ப்பூட்டும் அனுபவங்களை கொண்டமைந்த  பலவகையான வாழ்க்கைகளை வாழ்ந்த நிறைவை இலக்கியங்கள் ஒருவனுக்கு அளிக்கின்றன.  ஆகவே இலக்கியங்கள்  இந்த பாலைவைழிச் சூதர்களைப்போல  செயல்பட்டு  ஒருவரின்  வாழ்க்கைப்பயணத்தை சரியாக வழிப்படுத்திக்கொள்வதற்கும் இனிமையாக்கிக்கொள்வதற்கும் பயன்படுகின்றன என்று நாம் கூறலாம்.         


சகுனியின் தன்னறம்:  (மழைப்பாடல் 13)


நாக சூதன் கதை வழியாக சகுனி தனக்கான தன்னறத்தை கண்டுகொள்கிறான். தான்   நோக்கமென ஒன்றைக்கொண்டால் அது  நிறைவேறும்பொருட்டு எதைச் செய்தாலும் அறம்தான் என அவன் கொள்கிறான்.  நாகசூதன் சொல்லும் கதை அவனுக்கு அதைத்தான் குறிக்கிறது.  உயிர்வாழ்தல் என்பது  மட்டுமே நோக்கமென என ஆகிவிடும் அந்தக் பெருங்குழியில் வாழ நேர்ந்தவர்களுக்கு  உயிருள்ள  மனிதர்களின் தசையினை அறுத்து உண்பது தவறல்ல எனக்  கொள்கின்றனர். 

 சகுனியும் வசுமதியும்சேர்ந்து பாரதக் கண்டத்தை தன்ம் குடைக்கீழ் ஆளும் பெருங்கனவை கொண்டிருக்கின்றனர். அதையே  நோக்கமென சகுனி கொள்கின்றான்.  அந்த நோக்கத்தை அடைவதற்காக எதைச் செய்தாலும் சரியே என்ற உளப்பாங்கை அவன் அக்கதையிலிருந்து பெற்றுக்கொண்டிருக்கலாம் எனக் கருதுகிறேன். அவன் தனதுடைய தன்னறம் என்பது பரத கண்டத்தில் ஒரு பேரரசு ஒன்றை  தன் குருதிவழியினருக்கு உரித்தாக ஆக்குவது என்பதென ஆகிவிடுகின்றது.    


விதிவழி ஓடும் வாழ்க்கை.     


ஏதோ எண்ணத்தில் அதை நோக்கிக்கொண்டிருந்த சகுனி தன் வில்லை வளைத்து நாணில் அம்பேற்றி அதைக் குறிவைத்து எய்தான். வானில் நிலையழிந்து சிறகடித்த பருந்து கீழிறங்கி மேலும் சிறகடித்து பின் காற்றால் அள்ளப்பட்டு கிழக்காகக் கொண்டுசெல்லப்பட்டு வான் வளைவில் சரிந்து மறைந்தது. 
(மழைப்பாடல் 14)    



மனிதன் ஒவ்வொன்றையும் சிந்தித்து ஆராய்ந்து பலருடன் உசாவியே ஒன்றைச் செய்கிறான்.  ஆனால் மனித சமூகத்தில் நடந்த பெரும் நிகழ்வுகள்  எல்லாம் பெரும்பாலும் தற்செயலாக நடந்தவைகளாக இருப்பதைக்  காணலாம்.  சகுனி தன் மனதிற்குள் ஆயிரம் கணக்குகளைப்போட்டு எடுக்கும் முடிவை சிறு தற்செயல் நிகழ்வு கலைத்துப்போட்டுவிடுகிறது.  தன் அரசியல் கனவை நிறைவேற்றிக்கொள்ள தான் பெரிதும் எதிர்பார்க்கும் மகதத்துடனான மணவுறவை அவன் கை அம்பாலேயே ஊழ் சிதறடிக்கிறது.  வானில் எத்தனையோ பருந்துகள் பிறக்கின்றன ஆனால் மணத்தூதுடன் வந்திருந்த அந்தப் பருந்தை அவன் காண்பதும் அதை வீழ்த்த வேன்டும் என நினப்பதும் வெறும் தற்செயல். ஊழ் தன் பாதையை இப்படி தற்செயல் நிகழ்வுகளாலேயே வகுத்தமைத்துக்கொள்கிறது எனத் தோன்றுகிறது. 


பீஷ்மப் பிதாமகர்:


“அவர் நம்மை அவரது மைந்தர்களாக உணரச்செய்கிறார். அவரது அமைச்சர் அஸ்தினபுரியில் அவரை படைவீரர்களும் பிதாமகரே என்றுதான் அழைக்கிறார்கள் என்றார்” என்ற விருஷகன் சற்றே சிரித்து “அவரது தந்தையேகூட அவரை அப்படித்தான் உணர்ந்ததாக சூதர்கள் பாடுகிறார்கள்” என்றான். 
(மழைப்பாடல் 14)  



ஒருவர் தந்தையென ஆவது அவர்கொண்டிருக்கும் பயன் கருதாது பொழியும் அளவற்ற கனிவால்,  தான் அறிந்ததையெல்லாம் தனக்கென மட்டுமென  எதையும் கொள்ளமல்  அனைத்தையும்   கற்றுத்தர நினைக்கும் பெருங் கருணையால்  தன்னை சொற்களினாலும் பாவனைகளினாலும் மறைத்துக்கொள்ளாது வெளிப்படுத்திகொள்ளும் நேர்மையினால்.  இந்த குணங்களுடன் உள்ள   ஆளுமையை யார் ஒருவரிடம் காணும்போதும் நாம் அவரிடம் தந்தமையை உணர்கிறோம்.   இந்த ஆளுமையை இயல்பாகவே தன்னுள் கொண்டிருக்கும் பீஷ்மரை பிதாமகர் என்று சொல்வது மிகப்பொருத்தமானது.  சிந்தித்துப்பாருங்கள் யாருக்குமே தந்தையென ஆக இயலாதபடி விரதம் பூண்ட ஒருவர் அனைவராலும் தந்தையென அழைக்கப்படுகிறார். இல்லமென ஒன்று இல்லாதவனுக்கும் இந்தப்பெருவெளியே இல்லமென ஆவதைப்போல காணும் அனைவரியும் தம் மக்களென கொள்கிறது அவர் மனம்.


பீஷ்மரின் சொற்திறன்.  


அவன் கேட்டவற்றிலேயே மிகநுணுக்கமான அரசியல் சூழ்மொழி அது. அச்சொற்களை அவர் திறமையாக அருகருகே அமைத்தாரா என்ற எண்ணம் எழுந்தது. எளிய மலைக்கங்கரால் அவ்வாறு மொழியை கையாள முடியுமா என்ன? ஒருவேளை அவரது இயல்பான மொழியே அவ்வாறானதாக இருக்கலாம். 
(மழைப்பாடல் 14)  


அவருக்கு சொல்தெரிதலே தேவையில்லை. அனைத்துச் சொற்களும் அவருடைய நெஞ்சிலிருந்து நேரடியாகவே வருகின்றன. ஆனால் அதற்குக் காரணம் அவர் உள்ளும் புறமும் ஒன்றேயானவர் என்பதுதான்.  
(மழைப்பாடல் 16) 


அனைவரையும் தன் மதி நுட்பத்தால் வென்றுவிலாம் என்ற சகுனி கர்வம் கொண்டவன். ஆனால் அவன் பீஷ்மர் முன்பு செயலற்று நின்றுவிடுகிறான்.  அவனை அவர் எவ்வித சூழ்ச்சி நிறந்த சொற்களால்  எதிர்கொள்ளவில்லை. அவர் அவனை வெல்ல அவர் சொற்களில் கைகொள்ளும் ஆயுதங்கள் உண்மை, ஒளிவு மறைவில்லாமை, எதிர்நின்று பேசுபன் நலன்மீதும் காட்டும் அக்கறை போன்றவையாகும். இது அவர் வலிந்து கைகொள்ளவில்லை.  அதை அவரின் இயல்பென இருக்கிறது.   பீஷ்மர் விழியிழந்த திருதராஷ்டிரனுக்கு  பெண் கேட்க வந்திருக்கிறார்.  சகுனியின் அரசியல் பேராவலை அறிந்திருக்கிறார். அவர் சொல்வது திருதராஷ்டிரனுக்கு நலம் செய்வதாகவும் சகுனியின் நோக்கத்திற்கு உகந்ததாகவும் அமைவது அவருடைய மதிநுட்பத்தால அள்ள. மற்றவர் உணர்வுகளை அறிந்து அதற்கு மதிப்பளைக்கும் கருணையினால் என்றே கருதுகிறேன்.   இதையே சகுனி முதலான காந்தார நாட்டு இளவரசர்களும் உணர்கிறார்கள்.    


சொலல் வல்லவனாய் இருத்தல்  அனைவருக்கும் வாய்ப்பதல்ல. அதே நேரத்தில் சொலல் வல்லவனாய் இருத்தல் ஒன்றும் பெரிய காரியமும் இல்லை. நாம் நேர்மையுடன் இருப்பவர்களானால்  நம் சொல் அனைத்தையும் வென்றெடுக்கும்.  அந்த நேர்மையே நம் சொற்களின் தர்க்கமாக அமையும். அதுவே நம் பேச்சின் வாளாகவும்,  கேடயமாகவும் அமையும்.  நேர்மை தவறிய ஒன்றைப்பற்றி  பேசுவதற்குத்தான் ஒருவருக்கு சூழ்ச்சியான சொற்கள் தேவைப்படுகின்றன.  அவர் வென்றுவிட்டதைப்போல தோன்றும். அப்படி வென்று அவர் பெறுவது அற்பமானதாக இருக்கும். ஆனால் அதற்காக அவர் எதை இழக்கிறார்கள் என்பதை அவர்கள் அறியாது இருக்கிறார். 


ஆனால் நேர்மையாக பேசுபவர்கள் தன் சொற்களில் உள்ள உண்மை ஒன்றினாலேயே திறன் பெறுகிறார்கள். மேலும் அவர்கள் எதிர்நின்று பேசுபவரிடமும் கருணை கொண்டவராக இருப்பின் அவர்கள் சொல் அனைவராலும் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றாக அமைந்துவிடுகிறது.   இதைப்போன்று  நேர்மையினால் சொலல்வல்லவனாக இருந்தவர்  நம் காந்தி.  அவர் பேச்சாற்றல் மிக்கவர் என்று யாரும் சொன்னதில்லை. ஆனால் பாரத நாட்டு மக்கள் அனைவரும் அவர் பேசுவதை உளம்கொடுத்து கேட்டார்கள்.   தன்னை எதிர்ப்பவர்களையெல்லாம் தன் பேச்சினாலேயே வென்றெடுத்தவர். அவருடைய தர்க்கம் என்பது உண்மையாகவும் எதிர் நின்று பேசுபவரிடத்தில்  எதையும் மறைத்துக்கொள்ளாததாகவும் இருக்கும்.  இத்தகைய சொற்கள் எவ்வித சூழ்ச்சிகள் இல்லாமலேயே வெல்லக்கூடியவை.


சொல்லப்பட்டதால் உறுதியாகிவிடும் கருத்துக்கள்: 

    

 “பொதுவாக சொற்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில்லை. அவைதான் உணர்ச்சிகளையே உருவாக்குகின்றன. நாம் ஒன்றைச் சொன்ன பின்னரே அவற்றை உணரத்தொடங்குகிறோம். அதைச் சொல்லிவிட்டதனாலேயே அதை நம்பவும் அதில் நீடிக்கவும் தொடங்குகிறோம். பெரும்பாலான பகைமைகளும் சினங்களும் சொல்லிவிட்ட சொல்லைத் தொடர்ந்து செல்லும் உள்ளங்களால் உருவாக்கப்படுபவை.”  (மழைப்பாடல் 16)


நாம் கொண்டிருக்கும் ஒரு கருத்தினால் ஒன்றை சொல்லுகிறோம்.   ஆனால் பலசமயம் நாம்  ஒன்றை  சொல்லிவிட்டோம் என்பதற்காகவே ஒரு கருத்தை உருவாக்கிக்கொள்வதும் நடக்கிறது.  ஒரு கருத்து சொல்லாக மாறாமால் நம்முள்ளே இருக்குமானால் பின்னர் நம் கருத்தை மாற்றிக்கொள்வது எளிது. ஆனால் இதுதான் என் கருத்து என வெளியே சொல்லிவிட்டால் அதற்கு பின் அக்கருத்தை மாற்றிக்கொள்வதை நம் அகங்காரம் எளிதாக ஏற்றுக்கொள்வதில்லை.  நம் மனதில் ஒன்றைப்பறிய கருத்து ஒரே தருணத்தில் உருவாகிவிடுவதில்லை. நம் உள்ளத்தில் அதைப்பற்றிய ஒரு தர்க்கம் நிகழ்ந்து நாம் ஒரு முடிவுக்கு வருவோம். 


சில சமயம் சிறு ஐயங்களோடோ அல்லது சரியான ஆதரங்கள்  இன்றியோ நாம் தற்காலிகமாக ஒரு கருத்தை கொண்டிருப்போம்.  அதனால்  நாம் கொண்டிருக்கும் கருத்தை முற்றிலுமாக மாற்றிக்கொள்ளவேண்டியதாக இருக்கும். நாம்  நம் கருத்தை முன்னரே சொல்லிவிட்டிருந்தோமானால், பின்னர் அதை மாற்றிக்கொள்வது நமக்கு எளிதாக இருக்காது நம் சொன்னதை உறுதிப்படுத்தவே நம் சிந்தை முயலும்.  மேலும் நாம் சொன்னதற்கு  எதிரான தகவல்களை கவனிக்காமல அலட்சியம் செய்துவிடுவோம்.      ஆகவே  அவசியமின்றி சொற்களை வெளிப்படுத்துவது நம் சிந்தையின் சுதந்திரத்தை நாமே கட்டுப்படுத்திக்கொள்வதாகும்.

விழியற்ற மன்னர்கள்:


   “அனைத்து ஷத்ரியர்களும் விழியற்றவர்கள்தான் தந்தையே” என்றாள். 
(மழைப்பாடல் 16)


அழகை, அன்பை, ஆனந்தத்தை அனுபவிக்க  பெரு விழைவுகள் ஏதுமற்ற வஞ்சம் துளியும் கலக்காத தூய உள்ளம் வேண்டும். ஆனால் ஷத்திரியர் உள்ளம் பெரு விழைவுகளைக்கொண்டது. அதன் காரணமான வஞ்சங்களால் நிரம்பியது.   அதற்கு  ஒரு அழகை ஆராதிக்க, அன்பில்  தோய்ந்துபோக,   ஆனந்தத்தில் லயித்திருக்க முடிவதில்லை.  அழகான மனைவி என்பது அவன் அரண்மனைப் பொக்கிஷத்தில் இன்னொரு உயர் மதிப்பிலான  மணியைப்போன்றதுதான்.   அவன் அவளை ஏறெடுத்துப்பார்ப்பது அரிதாகவே இருக்கும். அப்படிப்பட்டவனை  ஒரு பெண் விழியற்றவன் என்றுதானே உணர்வாள்.


விழியிழந்தவரின் மன சஞ்சலம்:

   

திருதராஷ்டிரன் “இங்கே யார் இருக்கிறார்கள்? யாருடைய குரல்கள் அவை?” என்றான். “அவர்கள் காந்தார நாட்டு வீரர்கள் அரசே” என்றான் விதுரன். “ஏன் இத்தனை சத்தம்?” “அவர்கள் நம்மை உபசரிக்கிறார்கள்.” “என்ன ஓசை அது, வண்டிகளா?” என்றான் திருதராஷ்டிரன். (மழைப்பாடல் 19)



விழியிழந்தவர்கள் தம் உலகை செவிகளால், தம் தொடுகைகளால் பார்க்கிறார்கள்.    விழிகொண்டுப் பார்ப்பதனால வரும் அதே தெளிவை அவர்கள் முழுமையாக அடைய முடியாது. தம் சூழலின் மனச்சித்திரத்தை அவர்கள் பழகிப் பழகித்தான் அறியமுடியும். அது நாட்கணக்காகலாம். மேலும் அதற்கு விழிகொண்ட மற்றவரின் உதவி தேவைப்படும்.   திருதராஷ்டிரன் முதன்முதலாக தம் அரண்மணைவிட்டு,  நாடுவிட்டு இப்போது காந்தாரம் வருகிறன். அவன் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சூழலும் புதியது.  அதனால்  அவன் மனம் இயல்பாக பதட்டத்தை அடைகிறது.  ஓசைகளால் அந்தச் சூழல்களை அனுமாணிக்கமுயல்கிறான்.  அதற்கான விதுரனிடம்  ஓயாது கேள்விகளைக் கேட்கிறான்.  அத்துடன் தனக்கென புதிய உறவு ஏற்படப்போவதின் படபடப்பும் சேர்ந்துகொள்கிறது. அந்த உளநிலையை வெண்முரசு நமக்கு அழகாக காட்சிப்படுத்துகிறது.  


இலக்கிய வாழ்வு


இலக்கியம் படிப்பவர்கள் மற்றவர்களைவிட அதிக வாழ்க்கைகளை வாழ்கிறார்கள்.  அந்த அனுபவப் பரவசத்தின் காரணமாகவே  நாமெல்லாம் ஒரு வகையில் பித்தர்களாக மற்றவர்கள் கண்களுக்கு தென்படுகிறோம்.  அவர்கள் அறிவதில்லை அவர்கள் அடையும் அதே இன்ப துன்பங்களை நாம் பல மடங்கு பலவிதங்களில் பல்வேறு முறை நாம் இலக்கியங்கள் வாயிலாக அனுபவித்தறிகிறோம்.  இந்த இலக்கிய வாழ்வில் துன்பங்கள் கூட ஒரு வகை இன்ப அனுபவங்களாக ஆகிவிடுகின்றன. இந்த இலக்கிய அனுபவம் உண்மையானது இல்லை என்று கூறலாம். ஆனல் இறப்பு என்ற ஒன்று ஒருவன் தன் வாழ்வில் அடையும் அனைத்து அனுபங்களையும் பொய்யென்றல்லாவா ஆக்கிப்போகிறது.  அதனால் இந்த இருவித அனுபவங்களுக்கும்  இடையில் பெரிதான வேறுபாடுகள் இல்லை என்று நான் கருதுகிறேன்.  இந்த இலக்கியம் தரும் அனுபவத்தைப்பற்றி விதுரனின் சொற்கள் வாயிலாக வெண்முரசு சிறப்பாக கூறுகிறது.  


விதுரன்:  "ஏடுகளில் நான் இன்னொரு முறை வாழ்கிறேன். அங்கே இருப்பது அறிவு. ஆனால் அவ்வறிவு திரும்ப என்னுள் அனுபவங்களாக ஆகிவிடுகிறது. காவியங்களில்தான் நான் மானுட உணர்வுகளையே அடைகிறேன் அரசே. வெளியே உள்ள உணர்வுகள் சிதறிப்பரந்த ஒளி போன்றவை. காவியங்களின் உணர்வுகள் படிகக்குமிழால் தொகுக்கப்பட்டு கூர்மை கொண்டவை. பிற எவரும் அறியாத உணர்வின் உச்சங்களை நான் அடைந்திருக்கிறேன். பலநூறுமுறை காதல் கொண்டிருக்கிறேன். காதலை வென்று களித்திருக்கிறேன், இழந்து கலுழ்ந்திருக்கிறேன். இறந்திருக்கிறேன். இறப்பின் இழப்பில் உடைந்திருக்கிறேன். கைகளில் மகவுகளைப் பெற்று மார்போடணைத்து தந்தையும் தாதையும் முதுதாதையுமாக வாழ்ந்திருக்கிறேன்.”  (மழைப்பாடல் 19)


சுவைப்பதின் முழுமை:


விதுரன் புன்னகைசெய்து “அரசே, ஒரு கனியை உண்ணும்போது அந்த முழுமரத்தையும் சுவைக்கத்தெரியாதவன் உணவை அறியாதவன்” என்றான்.  
(மழைப்பாடல் 19)


ஒன்றை அனுபவிக்கையில் பெரும்பாலும் அதின் ஒரு கூறைத்தான் அனுபவிக்கிறோம்.  நிஜ வாழ்வின் இன்பதுன்பங்கள் காலம் என்ற விரைந்தோடும் காட்டாற்றில் அடித்துக்கொண்டு செல்லப்படுகின்றன. அதில் நாம் நம் சிறு கைகளில் அள்ளி எடுப்பவை மிகக்குறைவு.  ஒரு சூரிய உதயத்தைக்கூட நாம் முழுமையாக பார்க்க முடியாது. அதில் சூரியன் மேகங்களுடன் நடத்தும் ஒளி நாடகத்தின் எதாவது ஒரு ப பகுதியை பார்க்காது விட்டிருப்போம். அல்லது அப்போது பறந்து சென்ற ஒரு சிறுவண்ணப் பறவையை கவனிக்காமல் போயிருப்போம்.  சில்லென்ற அடித்த தென்றலை உணராதுபோயிருக்கலாம். ஆனால் ஒரு இலக்கியம் இந்த அனுபவங்களை காலத்தில் கரைந்தோடிவிடாமல் தன் சட்டங்களில் அடித்து ஒரு நிரந்தரமாக பதிந்து வைத்திருக்கிறது. ஆகவே இலக்கியம் அளிக்கும் அனுபவத்தை நாம் முழுமையாக உள்வாங்கிக்கொள்ளமுடியும்.


விதுரனின் அச்சம்:
    

ஆயினும் நான் சூதன். எங்கோ அந்த அவமதிப்பு எனக்கு நிகழும் என்று என் அகம் அஞ்சிக்கொண்டுதான் இருக்கிறது.” (மழைப்பாடல் 19)


மனிதனுக்கு வாழ்வில அச்சப்படுவதற்கான காரணங்கள் பல இருக்கின்றன. அது பெரும்பாலும் தன் உயிருக்கு ஏற்படும் ஆபத்துக்களைப்பற்றிய அச்சமே. அது அனைத்து விலங்கினங்களுக்கும் இயல்பானது. ஆனால் மனிதர்களுக்கென தனித்திருக்கும் அச்சம் தம் அகங்காரத்திற்கு ஏற்பதும் இழிவைப்பற்றியதாகும். அதன் காரணமாக ஒரு மேடையில் தம் கருத்தைப் பேச அஞ்சுகிறோம். நம் ஆடையைப் மிகக் கவனமாக தேர்ந்தெடுக்கிறோம், அணிகிறோம். பிறருடன் பேசுகையில் நம் வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுகிறோம்.  நம்மை பிறர் அவமதித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் நாம்  முந்திக்கொண்டு பிறரை அவமதிக்கிறோம். மனிதனின் உள்ளுறையும் அந்த நான் என்ற அகங்காரம் இருக்கும் வரை இந்த அச்சமும் அவனிடத்தில் இருந்துகொண்டே இருக்கிறது.  விதுரனுக்கு இருக்கும் இந்த அச்சம் எதிர்பார்க்கக்கூடியது.  மகாபாரதத்தில் விதுரன் துரியோதனன், மற்றும் சகுனி போன்றோரால் எப்போதும் இந்தச் சொற்களால் அவமதிக்கப்படுபவனாக இருக்கிறான். ஆனால் வெண்முரசின் விதுரன் திருதராஷ்டிரனின் பெருங்கைகளின் அரவணைப்பில் என்றும் இருப்பவனாக உள்ளான். அதை திருதரஷ்டிரனின் சொற்கள் இப்பகுதியில் உறுதிப்படுத்துகின்றன.


செல்வங்களைக் கொண்டிருப்பதன் அநீதி


“ஆம், அவளை நான் மணப்பது நீதியே அல்ல. ஆனால் அப்படி நான் எண்ணப்புகுந்தால் என்னால் உயிர்வாழவே முடியாது. அதை சிறியவயதிலேயே அறிந்துகொண்டேன். முன்பொருமுறை தோன்றியது. நாளெல்லாம் வெறுமே அமர்ந்திருக்கும் எனக்கு எதற்கு உணவு என்று. சிலகணங்களிலேயே கண்டுகொண்டேன். அந்தச்சிந்தனையின் எல்லை ஒன்றே ஒன்றுதான். நான் உயிர்வாழ்வதே தேவையற்றது. ஆகவே இங்கே நான் உண்ணும் ஒவ்வொரு துளி நீரும் ஒவ்வொரு துண்டு உணவும் தேவையான எவருக்கோ உரியது. ஆகவே நான் அவற்றை உண்பதே அநீதியானது.” 
(மழைப்பாடல் 19)


  திருதராஷ்டிரனின் இந்தக் கூற்று அவன்  விழியிழந்தவன் என்பதால் கூறப்படுகிறது.  ஆனால் உண்மையில் இது அனைவருக்கும் பொருந்தக்கூடுவதுதான். ஏதோ ஒரு விவசாயி நான் நாளை உண்ணப்போகும் உணவுக்கான பயிர்களை விதைத்து வளர்த்து  பாதுகாத்து உழைத்துவருகிறான். அவனுடைய அந்த உழைப்புக்கு நான் தகுதியானவன்தானா?  யாரோ ஒருவர் எனக்கான ஆடையை நெய்துகொண்டிருக்கிறார்கள். நான் ஆற்றும் சிறு பணிக்காக நான் அடையும் வசதிகள் பொருத்தமானவைதானா என்று கேட்டால் இல்லை என்றுதான் தோன்றுகிறது. 

 இதை உணரும் ஒருவனால் எப்படி ஆடம்பரமான வாழ்வை வாழ இயலும்?  பெரும் ஞானிகள் எல்லாம் இதன் காரணமாகத்தான் மிக எளிய வாழ்வை வாழ்கிறார்கள்.  அதுவும் தன் கையாலேயே தனக்கானவற்றை இயற்றிக்கொள்கிறார்கள். காந்தி, இரமணர் போன்ற பெரும் மகான்களை நான் நினைவு கூர்கிறேன். நான் வாழும் இப்போதைய வசதி நிறைந்த வாழ்வுக்கு வெட்கி நாணுகிறேன்.  குறைந்தது அந்த குற்ற உணர்வாவது எனக்கு இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். 


திருதராஷ்டிரனின் ஆண்மையும் காந்தாரியின் பெண்மையும்  அடையும் நிறைவு: (மழைப்பாடல் 20)



ஒரு மனிதன் எப்போது நிறைவடைகிறான் என்று கேட்பது அவ்வளவு சரியான கேள்வியல்ல.  ஏனென்றால் ஒருவர்  ஒரு தந்தையென அல்லது தாயென, ஒரு மகனெனெ,  ஒரு நாட்டின் குடிமகனென,   எப்போது நிறைவடைகிறார்கள் என்று தனிப்பட்ட முறையில் தான் நாம் உசாவ முடியும்.  அப்படிப்பார்த்தால் ஒரு மனிதன் ஆண் என எப்போது நிறைவடைகிறான் என்று எண்ணிப்பார்க்கிறேன். தான் ஒரு பெண்ணின் மனதை கவர்ந்து தன்னுடன் இணை சேர்ந்து  வாழ அவள் மனமொப்பி  இணக்கம் தெரிவிக்கையில்தான் அவன் தன்னை ஆண் என எண்ணி பெருமிதம்கொள்ளுதம் தருணமாக இருக்கும்.  அதுபோல ஒரு பெண்ணுக்கு தன்னை அடைவதற்காக எதிர்வரும் அத்தனைத்  தடைகளையும் உடைத்து தேவைப்பட்டால் தன் உயிரைக்கூட பணயம் வைத்து ஒரு ஆண்மகன் முயன்று வெல்கையில்தான் அவள் பெண்மை பெருமிதம் கொள்ளும் எனத் தெரிகிறது.    இப்படி அவர்கள் அடையும் நிறைவு என்பது அவர்கள் குருதி வழியாக பரம்பரை பரம்பரையாகத் தொடரும் பண்பாகும்.   



  திருதராஷ்டிரன் பிறவியிலேயே விழி இழந்தவன் என்பதால் ஒவ்வொன்றுக்கும் பிறர் உதவியை எதிர்பார்த்து வாழ்பவன். இது அவன் உள ஆளுமையை பெரிதளவு பாதித்திருக்கும். அதன் காரணமான தாழ்வு மனப்பான்மையினாலேயே தன்னை   மூர்க்கத்தனம் கொண்டவனாக காட்டிக்கொள்கிறான்.  அவன் உடல் பலத்தைக்கொண்டு தன் இயலாமையை ஈடு செய்துகொள்ள முயல்கிறான்.  பீஷ்மர் அவன் மூர்க்கத்தனத்தை போக்கி, அவன்  ஓரளவுக்கு சுயமாக நடந்துகொள்ள கற்பித்து அவனுக்கு தன்னம்பிக்கையை ஊட்டியிருக்கிறார்.   இப்போது அவன் திருமணத்தை பீஷ்மரும் சத்தியவதியும் நிச்சயித்து மணம் பேசி முடித்திருக்கின்றனர்.   இந்தத் திருமணம் எவ்வித தடையுமின்றி நடந்திருந்தால்  திருதராஷ்ட்டிரன் இப்போதுபோன்று  நிறைவடைந்திருப்பானா என்பது ஐயமே.  தான் பேரரசன் என்ற காரணத்தினாலேயே  விழியிழந்திருந்தவனாக இருந்தாலும் காந்தாரி திருமணம் செய்து கொண்டிருக்கிறாள்  என்ற எண்ணம் அவன் மனதை உறுத்திக்கொண்டே இருந்திருக்கும்.  அவள் வாழ்வை நாம் கெடுத்துவிட்டோமோ என்ற குற்ற உணர்வு அவன் வாட்டியிருக்கும்.  


ஆனால் வெண்முரசின் திருதராஷ்டிரன் அவனை தன்  திருமணத்தில் பெருமிதமும் நிறைவும் கொண்டவனாக  வாழ வைக்கிறது.  அவன் திருமணத்தை எதிர்ப்பவர்களை அடித்து நொறுக்கி காந்தாரியின் மனதைக் கவர்ந்து தன் தோளில் தூக்கிக்கொண்டு வரும் அவனிடத்தில் ஆண்மை ஒளிர்கிறது. அப்போது அவன் ஒரு சிறந்த ஆண்மகன் என தன்னை தனக்குத்தானே நிரூப்பித்துக்கொள்கிறான். 


  அதைப்போல இத்திருமணம் சாதாரணமாக நடந்திருந்தால் காந்தாரி தன் திருமணம் ஒரு அரசியல் சூழ்ந்தல் என ஆகி தான் அதில் பகடைக்காயென தான் ஆக்கப்பட்டதாக உணர்ந்திருப்பாள். அவளே அந்த அரசியல் நோக்கை விரும்பியிருந்தாலும் அவளுக்குள் இருக்கும் பெண்மை அதை ஒரு அவமதிப்பாகத்தான் கொண்டிருக்கும்.   ஆனால் தனக்காக பலரின் கூரிய அம்புகளை உடலில் தாங்கி போரிட்டு ஒர் மத வேழம் போல கதவுகளை தகர்த்துக்கொண்டு வருபவனைக் காண்கையில் அவள் பெண்ணென முழுமையாக நிறைவடைந்துவிடுகிறாள்.  அப்படி  அவள் அடைந்த பெரு நிறைவின் காரணமாகவே அவள்  தன் கண்களைக் கட்டிக்கொள்வதினால் ஏற்படும் குறை அவளளவில்  மிகவும் சிறுத்துபோகிறது.

மனைவியின் தாய்மை:
ஒரு சிறு குழவிக்கு தாய் அமுதுட்டுவது ஒரு பெரும் பணி என்றாலும் அக்குழவியை எவ்வித ஆபத்தும் வராமல் காத்துவருவது அதற்கிணையான பெரும்பணி. இவ்விரண்டும் சேர்ந்தே தாய்மையை நிறைவு செய்கின்றன.   இல்லறத்தில் மனைவி தன் கணவனுக்கு உணவு சமைத்து அளிப்பதையும் அவன் அதை சரியாக உண்கிறானா எனக் கவனிப்பதிலும் தாய்க்கு நிகரென ஆகிறாள்.  அத்துடன் அவள் கண்கள் தன் கணவனின் நலனை   காணத்தவறுவதில்லை. அவன் நலத்தில் அவள் காட்டும் அக்கறையிலும் அவள் தாய்க்கு நிகராகிறாள்.  ஒரு மனைவியென ஒரு பெண் முழுமையடைவது  தன் கணவன்மேல் அவள்  தாய்மை பெருகுகையில்தான் என்று சொல்லாம்.   அதைப்போன்றே ஒரு முழுமையான  கணவன் என்பவன் தன் மனைவிக்கு  தந்தைமையை நினைவூட்டுபவனாக இருக்க வேண்டும்.   இங்கு திருதராஷ்டிரனுடன் மணற்புயலில் இருக்கும் நிகழ்வு சொல்லப்படுகிறது.



முதல்முறையாக சிலகணங்களுக்குள் அவள் திருதராஷ்டிரனை நினைத்தாள். அவனுக்குப்பழக்கமில்லாத புயல் அவனை அச்சுறுத்துமோ என்ற எண்ணம் வந்ததும் அவள் மெல்ல கைகளை நீட்டி அவன் இடக்கையைப் பிடித்துக்கொண்டாள். (மழைப்பாடல் 21) 
 
அப்போது  அவள் மனைவியென  முழுமையடைந்ததை நாம் அறிந்துகொள்கிறோம்.

ஒன்றெனக் கலத்தல்.


  இரு பொருட்கள் ஒன்றாதல் என்பது எப்போதாவது நடக்கிறதா?  எப்படிக்கலந்தாலும்  இரண்டுக்குள் இருக்கும் வேறுபாடுகள் முற்றிலுமாக களைந்துவிடுவதில்லை. அவை ஒன்றாக சேர்த்துவைத்த பின்னும் அந்த வேறுபாடுகள் ஒன்றை ஒன்று பிரித்துக்காண வைத்துவிடுகிறன. அப்படியே இருவர் உள்ளங்கள் ஒன்றென ஆகி ஒன்றுபோல் சிந்திப்பதில்லை.  கணவனும் மனைவியும் இணைந்து வாழும் இல்லற வாழ்க்கையில்  ஒருவரையொருவர்  நிறைத்துக்கொள்பவகளாக இருக்கிறார்கள். அதனால் இருவர் குணங்களின் வேறுபாடுகள் அதிகரிக்கவே செய்கின்றன. ஒரு துணை  அதிகம் சிக்கனம் பிடிப்பவராக இருந்தால் அவர் துணை    சற்று செலவாளியாகிவிடுகிறார்.  ஒருவர் கலைகளில் இலக்கியங்களில் அதிக ஆர்வம் காட்டினால் அவர் இணை அதிக உலக வாழ்க்கை சிக்கல்களில் கவனம் கொள்கிறார்.   


ஆனால் சிலர் தன் துணையுடன் முழுமையாக ஒன்றிவிட வேண்டுமென நினைக்கின்றனர். இருவரும் ஒரே சிந்தனை கொண்டவராக  இருக்கவேண்டும் என காதலில் கரைந்துவிட விரும்புகின்றனர். காந்தாரி அந்த நிலையை வேண்டுகிறாள். திருதராஷ்ட்டிரனைப்போன்றே உள்ளதில் ஒன்றிட வேண்டுமென்றால் அவன் உலகத்தில் அவள் செல்ல வேண்டும். அவன் இருப்பது விழியிழந்தவர்களின் உலகம். அவனை தன் ஒளியுலகுக்கு அழைத்துவர முடியாது எனும்போது அவள் அவனுலகத்தில் சென்றுவிட விரும்புகிறாள்.   அதற்காக அவள் தன் விழிகளை மூடிக்கொள்கிறாள். இப்போது அவர்கள் இருவரும் இருப்பது ஒரே உலகம். 


“நான் அவருடன் அவர் வாழும் உலகில் வாழ விரும்புகிறேன். பிறர் உலகில் எனக்கு ஏதும் தேவையில்லை” என்று சொன்னபோது அந்த உணர்ச்சிகளை அங்கிருந்த ஒவ்வொரு பெண்ணும் உடனே புரிந்துகொண்டனர்.    (மழைப்பாடல் 22)


வெண்முரசின்  வரிகள் பல்வேறு  கருத்துப்பெட்டகங்களை  பொதிந்து வைத்திருப்பதாக உள்ளன. என் சிற்றறிவில் ஒரு சிலவற்றைத்தான் என்னால் கண்டறிய முடிகிறது.  நாம் இப்படி அனைவரும் கலந்துரையாடுவதன் மூலம்  மேலும் மேலும் பல கருத்துக்களை அறிந்துகொள்ள முடிகிறது.  தாமரைக்கண்ணன் தன் உரையில், இதுவரை காணாதுவிட்டிருந்த  மிக நுண்ணிய விவரங்களை இசை, வரலாறு,  புவியியல் செய்திகள் வெண்முரசில் விவரிக்கிடப்பதை எடுத்துக்கூறியது என்னைப் பரவசப்படுத்துவதாக இருந்தது.    

இக்கூடுகையை  முன்னெடுத்து வழி நடத்தும் அரிகிருஷ்ணன்,  அவ்ரின் பெருந்துணையாக இருக்கும் மணிமாறன் ஆகியோருக்கும் தவறாமல் தொடர்ந்து பங்கேற்று தன் சொற்களால் சிறப்பு சேர்க்கும் பேராசிரியர் நாகராஜன் முதலிய அனைவருக்கும் ஆசானின் மறுவடிவாக வீற்றிருந்து ஒவ்வொரு கூடுகையின் முடிவில் வெண்முரசின் பின்னணியில்  சட்டகங்கள், அரசியல், தத்துவங்களைப்பற்றி தொகுத்து உரைக்கும்  கடலூர் சீனுவிற்கும் என்  நன்றிகளை உரித்தாக்குகிறேன்.