ஜெ
குண்டாசிகொள்ளும் அந்த அமைதி நிறைவளிக்கிறது. அந்த இனிமையி அவன் முதலில் காந்தாரியின் மடியில் அடைகிறான். அந்த கணம் அவனுக்கு அர்த்தம் உள்ளதாகத் தோன்றுகிறது. அதன்பின் தன் ஆழத்தை ரத்தத்துடன் பிடுங்கி துரியோதனன் முன்னால் இட்டபின்னர் அவன் நிறைவை அடைகிறான். அந்த இனிமை மீண்டும் கிடைக்கிறது. கடைசியாக அரண்மனையிலிருந்துகிளம்பி குருக்ஷேத்திரத்துக்குச் செல்லும்போதும் அவன் மனம் அமைதியையும் சந்தோஷத்தையும் அடைகிறது.
உயிருடனிருப்பதே தித்திப்பானதென்றும், சூழ்ந்திருக்கும் ஒவ்வொரு பொருளும் இனிதென்றும் தோன்றும். சற்றே அசைந்தால்கூட அவ்வினிமை கலைந்துவிடும் என்று அஞ்சியவன்போல அவன் படுத்திருப்பான். அதே இனிமை அப்போது ஒரு பழைய நினைவுபோல தோன்றியது. மறுகணமே வந்து சூழ்ந்துகொண்டது. ஆனால் இருத்தலின் தித்திப்பாக அது இல்லை. இழந்த ஒன்றை நினைவுகூர்வதன் துயர் கலந்த இனிமை. அது உவகைதானா? கொப்பளித்து எழாது அசையாக் குமிழியென்று நிற்கும் உவகை ஒன்று உண்டா என்ன? அவன் உளம் கரைந்து விழிநீர் வடிக்கத் தொடங்கினான். ஏன் அழுகிறோம் என்று உள்ளூர ஒரு தன்னிலை வியந்தது. அவ்வாறு அழுவதே இனிதாக இருந்தது.
என்ற அவனுடைய அந்த மன எழுச்சி வெண்முரசின் அழகான இடங்களில் ஒன்று. அவன் அடைந்தது என்ன என்பது முழுக்கமுழுக்க வாசகர்களின் அனுபவத்துக்கே விடப்பட்டுள்ளது
மகேஷ்