Saturday, July 28, 2018

மைந்தர் துயர்



அன்புள்ள ஆசிரியருக்கு...

இன்று காலையில் கூட நினைத்தேன். இன்னும் அரவான் வரவேயில்லையே என்று. ஒருவேளை அது பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட கதையாக இருக்கலாமோ என்று ஓர் எண்ணமும் வந்தது. ஆனால் எங்கேனும் ஒரு துளி இல்லாமல் புத்தம் புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்காது என்றும் தோன்றியது.

இதோ, இன்று அழகிய இளைஞனாக வந்து நின்று விட்டான். கடைசியில் அவனது புன்னகையைப் படித்ததும், கண்ணீர். இதற்கு காரணம் நீங்கள் தான்.

இத்தனை நாட்களாகப் படித்து வருகையில் தொடக்கத்தில் அறிமுகமான பீஷ்மனும், விதுரனும், திருதராஷ்டிரனும் பீஷ்மராகவும் விதுரராகவும் திருதராஷ்டிரராகவும் மூத்துப் போய் விட்டனர். எளிதாக அவர்களை விட்டு அடுத்த தலைமுறைக்கு மனம் நகர்ந்து விட்டது. ஆனால் இத்தனை வயதான பின்பும் பீமன் அடுமனைக்குப் போனான், அர்ஜூனன் அம்பு எய்தான், கர்ணன் மதுவருந்தினான் என்றே எழுதுகிறீர்கள். பீமர், அர்ஜூனர், கர்ணர் என்றே இல்லை.

எனவே மனம் இவர்களுடனேயே ஒப்பி ஒட்டிக் கொண்டு விட்டது. இன்று அவர்களுடைய மகன்களைக் காண்கையில், அவர்கள் என் வயதே ஆயினும் அவர்களை என் மகன்களாகவே, வேந்தன் கோல் நீட்டித் தேர்ந்தெடுத்த சிறுபையன்களாகவே உணர முடிகின்றது. இந்தக் குழந்தைகள் எந்த வஞ்சமும் இல்லாமல் சாகப் போகிறார்கள் என்பதை எத்தனை எண்ணினாலும் ஆற்ற முடியவில்லை. 

மைந்தர் துயர் பாண்டவர்களுக்கு மட்டும் என்று இல்லை.

நன்றிகள்,
இரா.வசந்த குமார்.