அன்புள்ள
ஜெ,
குண்டாசியுடன்
துரியோதனன் நிகழ்த்தும் உரையாடல் டாஸ்டயேவ்ஸ்கியின் கிரேட் இன்கிவிஸ்டர் பகுதியைப்போல
மானுட மனதை கிழித்துக்கிழித்து உள்ளே செல்வதாக உள்ளது. மனித இயல்பு என்பது ஒரு பக்கம்
பாசம் அன்பு பெருந்தன்மை போன்ற உயர்ந்த நிலைகளாலும் மறுபக்கம் கோபம் ஆசை கசப்பு போன்ற
தாழ்ந்த நிலைகளாலும் எதிரும் புதிருமாக நூல் ஓட்டி நெசவு செய்யப்பட்ட்தாக உள்ளது என்பதைக்
காட்டும் பகுதி அது. நாம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொன்றாக நடந்துகொள்கிறோம்.
அதன்பின் நம் நடத்தைகளைத் தர்க்கபூர்வமாகத் தொகுத்துக் கொள்கிறோம் என்று குண்டாசி சொல்கிறான்.
மனிதர்களைப்பற்றிய மிகச்சரியான ஒரு கருத்து அது என்று சொல்லலாம். ஒவ்வொருவரின் உள்ளே
இருந்தும் அவன் பலவீனங்களையும் கணக்குகளையும் கீறி எடுத்து வெளியே போடுகிறான். அவனுடைய
கீழ்மைகளும் வெளியே வந்து விழுகின்றன
அருண்