அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம்
‘வெண்முரசு’ – நூல்பதினெட்டு – ‘செந்நாவேங்கை’ – 44 துரியோதனனின் பானுமதி போருக்கு முந்தைய அரசுசூழ்தலில் தேவைப்படும் அரசியல் நடவடிக்கைகளை அரசாணைகளாக பிறப்பித்துகொண்டிருக்கிறாள் .அதன் ஒரு பகுதியாக போரில் கலந்துகொள்ளும் வீரர்களின் வீடுகளுக்கு அளிக்கவேண்டிய பொருட்கொடைகளை நிர்ணயித்தும், ஊர்காப்புபடைகள் இல்லாத சிற்றூர்களில் முதுமூதன்னையர் நியமன ஆணைகளையும் பிறப்பிக்கிறார். மகாபாரதத்தில் வரும் பேரரசியர் நிரையில் தேவயானி ,சத்தியவதி ,தமயந்தி ,குந்தி மற்றும் காந்தாரி ஆகிய அனைவரும் அன்னையென கனிவுடன் அரசுசூழ் நிகழ்வுகளில் அதிகாரம் செய்து ஆட்சிபுரிந்தனர், ஆண்களுக்கு நிகராக அரசியல் முடிவுகள் எடுக்கும் திறம் படைத்தவர்களாக விளங்கியதை வெண்முரசில் பல சந்தர்ப்பங்களில் காணலாம் .
குந்திதேவியார் மதுராவை மீட்க ஹஸ்தினாபுரியின் படைநகர்வுக்கு ஆணைகள் பிறப்பிப்பது ( வெண்முரசு - பிரயாகை ) மற்றும் ஜராசந்தன் பீமனால் வதம் செய்யப்பட்ட போது வெகுண்டெழுந்த துரியோதனன் இந்திரபிரஸ்தம் மீது போர் தொடுக்க ,பேரரசர் திருதராஷ்டிரர் சொல் மீறி செல்கையில் அவனை தடுத்து நிறுத்த ஆணையிட்டதுவும் காந்தாரியே .ஆம் அன்னையென ஆணையிடவும் அரசியென ஆளவும் திறம் கொண்டிருந்தனர் மஹாபாரத அரச மகளிர் .அந்த வரிசையில் பானுமதியும் அரசியின் ஆட்சியை அரசியல்களத்தில் முதிர்அன்னையென நிகழ்த்துகிறார். .வெண்முரசில் பானுமதிக்கு திருமணவாழ்த்து செய்தியை வாய்மொழியாக இளையயாதவர் மருகன் சாத்யகி மூலமாக நேரிடையாக திரௌபதி கூறும் சொல்லும் இதை குறித்து தான் .வெண்முரசு நூல்ஆறு – வெண் முகில்நகரம் – 76 "பெருஞ்சுழல் பெருக்கில் எதற்கும் பொருளில்லை என்று. எது நிகழ்ந்தாலும் இங்கு நிகழும் மொத்த மானுடவாழ்க்கையையும் முழுமையாக பொறுத்தருளி விண்மீள்பவளே மூதன்னையாகி குனிந்து இங்கு பிறந்து விழும் மைந்தரை வாழ்த்தமுடியும்.”
ஆம் திரௌபதியிடம் பானுமதி சொல்லிய இத்தகைய வாழ்த்து செய்தி இன்றைய நவீனகாலத்தில் மகளிர் அனைவருக்கும் இன்றியமையாத ஒன்றாகும் .ஆணாதிக்கம் நிறைந்த ,பாலியல் பாகுபாடுகள் மலிந்த சமுதாயத்தில் எதிர்நீச்சல் போடும் பெண்கள் அனைவரும் அலுவலகசூழல்களிலும் ,சிக்கலான உறவுகள் உள்ள குடும்ப சூழல்களிலும், சமூக அடுக்களிலும் உள்ள நெருக்கடிகளை எதிர்கொண்டு சவாலான வாழ்வை நாளும்பொழுதும் கடந்துசெல்ல வேண்டியுள்ளது .ஆம் .எத்தகைய நெருக்கடிகள் /இடர்கள் வந்தாலும் பொருளாதார மற்றும் சமுதாயத்தில் மேன்மை மற்றும் தன்னிறைவை தனது கொடிவழியினர் கண்டிட தினமும் உழைக்கும் மாந்தர் அனைவரும் பூமிதாயென பொறுமை காத்து நின்று மூதன்னையாக கனிந்திட வேண்டும் .
ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன் துணை இருக்கும் நிலையிலும் சரி ,இல்லாத நிலையிலும் சரி ( காந்தாரிமற்றும் குந்தி தேவி போன்று ) தனது மகன் /மகள்களின் வளமான வாழ்வுக்காக தன்னையே அர்ப்பணித்து விதிசமைப்பவர்களாக /வழிநடத்துபவர்களாக திகழும் பெண் மாந்தர் ஒருவர் கட்டாயம் இருக்கும் .அவர்கள் தான் அந்தகுடும்பங்களுக்கு அச்சாணி புள்ளியென திகழ்வர்.அத்தகைய மூதன்னையின் விழுதுகள் என இன்றைய தலைமுறைகள்வாழும் உச்ச வாழ்வுக்கு அந்த மூதன்னையரின் கண்துஞ்சா உழைப்பும் ,ஆக்கமும் பிரதி பலன் கருதா தியாகமனப்பான்மையுமே தான் காரணமாக இருக்கமுடியும் .
நன்றி ஜெயமோகன் அவர்களே
தி செந்தில்
ஸ்ரீவில்லிபுத்தூர்