Friday, February 8, 2019

சாவின் களம்



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

அத்தியாயம் 35-36.  பகதத்தர் வீரமரணம் அடைகிறார்.  சுப்ரதீகம் கொல்லப்படுகிறது.  பெரும்புகழ் அர்ஜுனன் உயிர்க்கொடை பெற்று இழிவென்று வருந்துகிறான்.   முன்னவர் இழிவில் குறுகி நின்று பின் பேருரு கொண்டு எழுந்தவர்.  பின்னவர் பெரும்புகழ் கொண்டு தாழ்வடைந்ததாக கருதுகிறார்.  முன் வஜ்ரனும் ஜ்வாலனும் பேசிக் கொண்டார்கள்.  ஜ்வாலன் தன் வீரம் பின்னாளில் போற்றப்பட வேண்டும் என்று விருப்பியவன்.  அவர்கள் தாங்கள் மறக்கப்படுவது நன்று என்று கூறுகின்றனர்.   துரியோதனனை கர்ணன் கைவிடல் என்பதில் - "ஆம் செஞ்சோற்றுக்கடன்.  சோற்றை பெற்ற உடலை இங்கு அழியத் தருகிறேன்.  உன் கடன் அதுவரைதான்  அதற்கு மேல் இல்லை" என்ற தொனி,  துரியோதனனும் கூட கொடுத்தவற்றிக்கு அதிகவிலை  கேட்கிறோம் எண்ணம் இருப்பதாக தோன்றுகிறது.  அவனுக்கு ஏமாற்றம் தான் ஆனால் ஏமாற்றம் இல்லை.  கார்கடல் கொந்தளிக்கிறது.  தாழ்வில் இருந்து உயர்வு, புகழின் சரிவு.  ஆசைப்பட்டது கிடைக்காமை, வசைகள், வன்மங்கள், ஏக்கங்கள், செத்துத்தொலை, எடுத்துத்தொலை, எல்லாவற்றையும் நீயே தின்னு, என் குழந்தைடா, என் குருதி, பெண்பழி, ஒழிப்பேன், என்னைக் கொன்றுவிடு, முற்றாக மறந்துவிடு, கடமை செய், ஏன் இவையெல்லாம், நீங்கள்  உதைத்து விளையாடும் பந்துகளா நாங்கள் அயோக்கிய தெய்வங்களே. கண்ணன் காப்பாற்றினான்.  மனிதரின் இத்தனைக்கும் பின்னால் இருப்பது ஒன்றேதான் - நான்.  கொந்தளிப்புகள் நடுவே ஒருவன் மட்டும் புன்னகைத்து எதனாலும் தொடப்படாமல் திரிகிறான் -இளையயாதவன்.  மனிதர் நான் என்று தருக்கி மிகைப்பவை முதல் தாழ்வென்று குறுகி நெளிவை வரை என எல்லாவற்றையும் சாதாரணம் என்று காணும் அசாதாரணன்.  

அன்புடன்
விக்ரம்
கோவை