வண்ணக்கடல் ஏன் இவ்வாறு தொடங்குகிறது? ஹஸ்தினாபுரிக்குள் சத்யவதி நுழைவதில் துவங்கி,பாண்டு மரணத்துக்குப்பின்னர் கானேகுவதுவரை நிகழ்ந்த உணர்வுக்கோர்வையை அப்படியே உதறி வெளியேறி, எங்கோ கடல் கொண்ட தென்னாட்டு நிலம் ஒன்றின், அரசவைக்குள் துவங்குகிறது? அது இந்தியப் பண்பாடுக் கூறு ஒன்றின் இலக்கிய வெளிப்பாடு என்பதே முதல் பதில். இந்தியப்பண்பாட்டு அசைவின் இலக்கிய சாட்சியம் வெண்முரசு.
இந்த சொற்றொடரின் பின்புலத்தை உள்வாங்கிக்கொள்ள, எளிமைப்படுத்தப்பட்ட சற்றே விரிவான பகைபுலம் ஒன்றனில் வெண்முரசு நாவலை பொருத்திப் பார்க்க வேண்டிய தேவை எழுகிறது. உலக இலக்கியம் எனும் கருதுகோள், திசைகள் அனைத்தும் போக்கு வரத்து, அச்சுக்கலை இந்த இரண்டும் உலக அளவில் பொதுமைகண்டு, ஓருலகம் எனும் கனவை லட்சியவாதிகளும்,தத்துவர்களும், கலைஞர்களும் கண்ட பிறகே உருவாகிறது. அதற்கு முன்பாக மேலை மரபு, கீழை மரபு எனும் மெல்லிய ஆனால் மிக முக்கிய பிரிவினை தொழில்பட்டிருந்தது.
மேலை மரபில் கலைகளின் துவக்கம் வழமைபோல பழங்குடிப் பண்பாட்டில்தான். அதிலிருந்து வீரகதைப் பாடல்கள், அதன் பிறகு மத ஆதிக்க காலக்கட்டம். அதன் பிறகு புத்தெழுச்சி காலக்கட்டம். அதன் பிறகு அறிவொளிக் காலம்.அதன் பிறகு நவீன காலம், தொடர்ந்து 'இன்றைய காலம் இது' என வரையறை கருதுகோள்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய பின்நவீனத்துவ காலம். மேலை மரபில் பல தெய்வ வழிபாடு கொண்ட பாகன் மதங்களை அழித்து, தன்னை அங்கே நிறுவிக் கொண்டது அபிரகாமிய மதம். இந்த மதம் செலுத்தும் அதிகாரத்தின் தளையில் இருந்து விடுபட, தத்துவவாதிகளும் கலைஞர்களும் கண்ட கனவின் செய்த களப்பணிகளின் சாட்சியமே மறுமலர்ச்சி காலக்கட்டம். அதை பரோக் எனும் வகைமை கொண்டு எதிர் கொண்டது மதத்தின் கட்டுமானம். இந்த எதிர்ப்பை வலிமை கொண்டு தாக்கியது அறிவொளிக் காலக்கட்டம். அறிவு மகிழ்ச்சியையும், அறிவியல் சுதந்திரத்தையும், சிந்திக்கும் பகுத்தறிவு கொண்ட தனி மனிதன் ஜனநாயகத்தையும் கொண்டு வருவார்கள் என்றது இந்தக் காலம். இந்தக் காலத்தின் மீது விழுந்து அதை முடித்து வைத்தது லிட்டில் பாய். கடவுளாலும், அறிவாலும் கைவிடப்பட்ட, விழைவுகளால் மட்டுமே அலைக்கழிவதை வாழ்வாக கொண்ட நவீன மனிதனின் இருத்தலியல் துயரின் காலம் துவங்கியது. உலகமயமாக்கல், டிஜிடல் யுகத்தை முடுக்கி விட, சுயம் உட்பட,அனைத்து அடையாளங்களையும் இழந்த, பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களை, நுகர்வோனாக மட்டுமே இந்த உலக வாழ்வை,வாழ்ந்து முடித்து செல்லும் பின்நவீனத்துவ மனிதனின் காலம் துவங்கியது.
முறையே இலியட், டிவைன் காமடி, வேஸ்ட் லான்ட், யூலிசிஸ் என ஒவ்வொரு காலக்கட்டத்தின் விளை கனியாக திரண்டு வந்தன மேற்கண்ட இலக்கியப் பனுவல்கள் . இவற்றுக்குக்ப் பின்னே இந்த ஒவ்வொரு காலக்கட்டத்துக்கும் வளமான தத்துவவாதிகளின் உரையாடல் பங்களிப்பு இந்த ஒவ்வொரு இலக்கியப் பனுவலின் பின்புலத்திலும் உண்டு. இந்த ஒவ்வொரு காலக்கட்டத்துக்கும் இந்த இலக்கியப் பிரதி வழியே ஒரு தொடர் உரையாடல் உண்டு. குலப் பாடல்களை திரட்டி,தொகுத்து வீரம் புகழ் எனும் விழுமியங்களை ஊட்டி, ஹோமர் தனது ஒடிசி காவியத்தை இயற்றினார். போர்களின் நாயகன் அலெக்சாண்டர் அதை எப்போதும் தனது ஆதர்சமாக கொண்டிருந்தான். வேறொரு போர் சூழலில் எழுதப்படுகிறது டிவைன் காமடி. இலியட்டின் தொடர்ச்சி அல்லது தொடர் உரையாடல். ருஷ்ய புரட்சி தொட்டு வேறு பல போர் சூழலில், ஆன்மா இழந்து தவிக்கும் மானுடம் குறித்து எழுதப்பட்ட பனுவலான பாழ்நிலம்.
வேத காலம்,இதிகாச காலம், பேரரசுக் காலம், படையெடுப்புக் காலம், பக்திக் காலம், மறுமலர்ச்சிக்காலம், நவீன காலம்,பின் நவீன காலம் என பாரத நிலத்துக்கும் கலை இலக்கிய வளர்ச்சி காலக்கட்டங்கள் உண்டு. அன்றைய வியாசன் எழுதிய ஜெயம் முதல், இன்று எஸ்ராவின் உபபாண்டவம், பைரப்பாவின் பர்வா,பி கே பாலக்ரிஷ்ணனின் இனி நான் உறங்கலாமா வரை அவற்றுக்கு இடையே உரையாடல் தொடர்ச்சியும் உண்டு. அதே சமயம் மேலை மரபில் கீழை மரபுக்கு இல்லாத ஒரு அடிப்படை சிக்கல் உண்டு. அந்த சிக்கல்,அந்த தனித்தன்மை அதிலிருந்தே அங்கே கலைகளும்,இலக்கியமும்,தத்துவமு ம் முகிழ்ந்தன.
முதல் சிக்கல் மேலைப் பண்பாட்டில் பழங்குடிப் பரப்பில் இருந்த தரிசனமின்மை. அங்கே காக்கும் கடவுள், தண்டிக்கும் கடவுள், இந்த இருமை மட்டுமே கொண்ட கடவுளர்களால் நிரப்பிய,அவர்களிடையே எந்த இணக்கமும் அற்ற சூழல் கொண்ட தரிசனம் அற்ற, பாகனீய மதங்களை அழித்து, அங்கே தன்னை நிறுவிக் கொண்டது சர்வ வல்லமை கொண்ட ஒரே காக்கும் ,தண்டிக்கும் தந்தை கடவுளை கொண்ட அபிரகாமிய மதம். அந்த மதத்தின் பிடியில் இருந்து வெளியேற முயன்ற, மறுமலர்ச்சி காலக்கட்டம் கிட்டத்தட்ட தந்தையை விட்டு நீங்கும் தனையனின் ஆளுமைகள் கொண்டு,தனி மனித சிந்தனைகள் மட்டுமே வளர்த்து எடுத்ததது. கடவுளை காலாவதி ஆக்கும் இடத்தை, அறிவும் சமத்துவமும் எடுத்துக் கொண்டது. அறிவு அதன் அதிகாரம் கொண்டு வந்த அழிவின் விளைகனியே தத்துவவாதி நீட்ஷேவும், இலக்கியவாதி எலியட்டும்.
மாறாக பாரத நிலத்தின் பண்பாட்டை முதலில் கட்டி எழுப்பிய, சுருதி, புராணங்கள், இதிகாசங்கள், அனைத்தயும் அதன் ஆழ் நீரோட்டமாக அதற்குள் ஓடி, அனைத்தயும் தொடுக்கும் பட்டு நூலாக செயல்பட்டது, ஏகம் சத், விப்ரா பஹூதா வதந்த்தி எனும் தரிசனம். அதுவே ஆக்கும் சக்தி,அழிக்கும் சக்தி இரண்டும் ஒன்றின், [பயந்து அல்ல] பணிந்து வணங்க வேண்டிய ஒன்றின், இரு வேறு முகங்களே, எனும் உண்மையை இங்கே திகழும் முரண்களுக்கு இடையே விதைத்தது. அங்கே பாகனீய மதங்களுக்கு நிகழாமல் போன, பாரத நிலத்துக்கு மட்டுமே சொந்தமான நற்பேறு. மேலை மரபில் ஒன்றை முற்றிலும் அழித்து,பிரிதொன்று நிலைபெற, இங்கே பாரத நிலத்தில், ஒன்றை ஒன்று கலந்து,கொண்டும் கொடுத்தும் அமைந்தது.
உலக இலக்கியம் எனும் மறுமலர்ச்சி கால, போதம் பாரத நிலத்தில் முகிழும் போது,அது பாரத நிலம் முழுமைக்கும் ஒன்றாகவும், தமிழ் நிலத்துக்கு மட்டும் வேறொன்றாகவும் அமைந்தது. உதாரணமாக மண்ணும் மனிதரும் எனும் செவ்வியல் பனுவலை கொடுத்த, சிவராம காரத் தான், நவீனத்துவத்தின் துவக்கம் என்று கருதத் தக்க அழிந்த பிறகு நாவலையும் கொடுத்தார். இப்படி,வங்கம் ,கன்னடம்,மலையாளம் என பாரத நிலத்தின் ஒவ்வொரு மொழிப் பகுதிக்கும், செவ்வியல் மறபொன்றின் தொடர்ச்சியாகவே நவீனத்துவ இலக்கியம் வளர்ந்தது. மாறாக தமிழ் நிலத்தில் நிலவரம் நேர் தலைகீழ். 1850-1950 வரையிலான காலம் தமிழ் நிலத்தின்,தமிழ் சார்ந்த அடிப்படைகள் மறுமலர்ச்சி பெற்ற காலம், சங்க இலக்கியங்கள் அச்சேறுவது முதல் கலைக்களஞ்சியம்,அகராதிகள் என ஒரு நிலத்துக்கான,மொழிக்கான அனைத்தும் இந்த நூறு ஆண்டுகளில் உருவாக்கப்பட்டன. உடன் நிகழ்வாக மதத்துடன் தொடர்புகளை துண்டித்துக் கொண்ட தனித் தமிழ் போக்கும் உயர , இந்த பின்புலத்தில் தமிழனின் வீரம் ,ஈகை இவற்றை போற்றும் பொன்னியின் செல்வன் போல ஒரு பனுவல்தான் தமிழுக்கு கிடைத்தே தவிர, பிற மொழிகளை போல செவ்வியல் தொடக்கம் ஏதும் தமிழுக்கு கிடையாது.
இரண்டாவதாக பாரத நிலத்தில் மறுமலர்ச்சி யுகத்தை முன்னெடுத்த தத்துவவாதிகளை கலைஞர்களை தொடர்ந்து, இந்திய நவீன காலத்தின் சிக்கலில் உழன்ற தத்துவாதிகள் என எவரும் இல்லை. பாரத நவீனத்துவ இலக்கியம், இத்தகு தத்துவவாதிகள் இன்மையால்,அவர்களுடன் உரையாடல் இன்றி, மேலை தத்துவ உரையாடல்களை சார வேண்டிய சிக்கலில் விழுந்தது. மேலை சிந்தனை மரபுடன் உரையாடி கூர்மையான, இந்திய நிலத்துக்கு சொந்தமான நவீனத்துவ வாழ்வின் துயரை முன்வைத்தவர் ஒ விஜயன். தமிழில் தத்துவத்துடன் பரிச்சயம் அற்ற அசோக மித்திரன், சுந்தர ராமசாமி நாவல்களை காட்டிலும் ஒ விஜயனின் கசாக்கின் இதிகாசம் கூர்மையும் ஆழமும் கொண்டிருப்பது, அவர் தத்துவாதிகளுடன் கொண்ட உறவே. பாழ் நிலம் பிரதியால் பாதிக்கப்பட்டு, நா பிச்சமூர்த்தி முதல் தேவதேவன் வரை கவி புனைந்தோர் இங்கே தமிழ் நிலத்தில் உண்டு. இவரில் எவரும் அக் காலக்கட்ட நவீனத்துவ, இருத்தலியல் துயரை,கையாண்ட தத்துவவாதிகளுடன் உரையாடல் தொடர்பில் இல்லை.
மூன்றாவதாக மரபை உதறி நிற்றல். ஒரு படைப்பாளியாக தன்னை துயருறச் செய்யும் ஒன்றுக்கு விடை மரபில் அதில் பயின்று வந்த தத்துவத்தில் இருக்கிறதா எனும் அறிவார்ந்த சவாலை எதிர் கொள்ளாமல்,அதை 'தத்துவ பாரம்' எனும் ஒற்றை சொல்லில் உதறி வெளியேறியமை. மரபு என்பது,நில உடமை சாதி அமைப்புடனும், சாதி நேரடியாக மதத்துடன் கட்டப்பட்டது, மதம் அத்வைத்த நோக்கால், அன் நோக்கு பிராமணீய சதியால் கட்டப்பட்டது எனும் எளிய சமன்பாட்டை சொல்லி அறிவார்ந்த சவால் ஒன்றை உதறி நின்றமை.
இந்த வரையறையின் பின் புலத்தில் வைத்தே, வெண் முரசின் இலக்கிய இடம், இலக்கியம் எனும் கலை வழியே அது இங்கே நிகழ்த்த வந்தது என்ன என்பதை வகுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகே வெண்முரசின் பல அலகுகள் பிடி கிடைக்கும். மேற் சொன்ன வரையறைக்குள் உலக இலக்கியம் எனும் அளவில் ஹோமர் எவ்வாறு செயல்படுகிறார்? தன்னை நோக்கி வந்த குலப்பாடல்களை தொகுத்து விழுமியங்களை இணைத்து இலியட் இயற்றுகிறார். இங்கே வெண் முரசில் வியாசர் அதைத்தான் செய்கிறார். ஒரு மெல்லிய வேறு பாடு இங்கே விழுமியங்களை பரிசீலனை செய்கிறார். அங்கே டிவைன் காமடி யில் நாயகனின் பயணத்தையும், இங்கே வெண் முரசில் காண்டீபம், கிராதம் இரண்டு நாவலில் அர்ஜுனனின் பயணத்தையும் உலக இலக்கிய விமர்சகர் எவரேனும் ஒப்பு நோக்கினால், வெண் முரசின் வழியே ஜெயமோகன் உலக இலக்கியப் பரப்பில் எந்த எந்த புனைவுகளுடன்,அது பேசிய சிக்கல்களுடன் எந்த வகையில் உரையாடுகிறார் என்பது விளங்கும். நேற்றைய மார்க்வெஸ் அந்த மகாபாரதத்துடன் உரையாடி அதில் கொஞ்சத்தை ஒரு நூற்றாண்டுத் தனிமையில் முயன்று பார்த்தார்,நாளைய மார்க்வெஸ் யாரோ அவருக்கான களம் இங்கே வெண்முரசு வழியே உருவாகிறது. ஜெயமோகனின் முதல் சவால் அங்கே.
இந்திய அளவில் என எடுத்துக் கொண்டாலும் வெண்முரசு எதிர்கொள்ளும் சவால் தனித்துவமானது. வேத காலத்தில் நாக்கு வேதம் என தொகுக்கப்பட்ட ஸ்ருதிகள், எவற்றை 'நீக்கி' தொகுக்கப்பட்டருக்கும்? நாக வேதம்,அசுர வேதம் போல அந்த 'நீக்கப்பட்ட' பண்பாடு துவங்கி, சங்க இலக்கியத்தின் அகப்பாடல்களின் பின்புலத்தை உருவாகிய, சமூக சூழல் மொத்ததையும் கடல் கொண்ட நிலத்தில் உருவாக்கிக் காட்டுகிறார். மேலிருந்து கீழே வந்த காஷ்மீர சைவம் தொட்டு,கீழிருந்து மேலே சென்ற பக்தி மரபு வரை, பல்வேறு கலாச்சாரக் கண்ணிகளால் மேலும் கீழுமாக ஊடும் பாவுமாக பல்வேறு ஆளுமைகளும் ,பின்னி உருவாகியதே இந்த இரண்டாயிரத்து இருபதில் நாம் காணும் பாரதப் பண்பாடு. அந்த பண்பாட்டு அசைவின் கூறில் துவங்குவதே வண்ணக்கடல்.
இந்தியவேதாந்த உரையாடல்களில் கனவு எப்படி எல்லாம் பயின்று வந்திருக்கிறது என்று கண்டால், வெண் முரசு தனது வடிவத்தில் கனவுகள் எனும் அழகியலை எத்தகு தத்துவார்த்தப் பின்புலத்தில் பயன்படுத்துகிறது என்பது விளங்கும். மொத்த வெண் முரசே ஆழ்ந்த தவத்தில் வியாசர் காணும் கனவு, என்றொரு நோக்கும் வெண்முரசு நாவலுக்குள் உண்டு. பின்நவீனத்துவ அழகியல் இந்த இந்திய அழகியலின் மொத்த சட்டகத்துக்கு உள்ளேதான் தொழில்படுகிறது என்பதை ஒரு வாசகன் காணலாம். நாவல் முழுதுமே தொகுக்கபட்ட சூதர்களின் பாடல்கள்தான். குந்தி கர்ணன் வசம் சொல்கிறாள்.இனி காவிய கர்த்தர்கள் காலம். அவர்கள் உன்னை பாட மாட்டார்கள்.உன்னைப் பாடும் சூதர்கள் காலம் முடிந்தது என்கிறாள். வெண்முரசு காலத்தில் மறைந்து போன சூதர்கள் நாவில் துலங்கிய பாரத கதையையே மையம் கொள்கிறது. இந்தியப் பண்பாட்டில் வலிமையாக எழுந்து, பிற கூறுகளால் உட்செரிக்கப்பட்ட அளவே,ஒடுக்கப்பட்டது சாக்த மரபு, குறிப்பாக பக்தி இயக்க எழுச்சி காலக் கட்டத்தில். பாரத காலத்திலேயே கூட, ஜெய எனும் நூலுக்குள் பெண்களுக்கு முகம் இல்லை, த்ரோனத்தில் பிறந்ததால் துரோணர். தாய் தெய்வ மரபை வியாசன் ஒரு கிண்ணியைக் கொண்டு இடம் பெயர்த்திருக்கிறார். இப்படி விளிம்பு நிலையில் நிற்கும், அல்லது மறைந்து போன நமது பண்பாட்டு விருட்சத்தின் ஆணி வேர் முதல் சல்லி வேர்கள் வரை அனைத்துக்கும் கற்பனையில் ஒளியும் நீரும் பாய்ச்சுகிறது வெண் முரசு. இந்திப் பண்பாட்டின் ஆத்மீக சாரத்துக்கு வளம் சேர்த்த பல நூறு, வேத ,உபநிஷத் ரிஷிகளை,அவர்களின் ஆத்மீக தவிப்புகளுக்கு, அவர்களுக்கு, முகமும், உயிரும் உணர்வும் கொடுத்து உலவ விட்ட ஒரே இந்தயப் பனுவல் வெண்முரசு மட்டுமே.
தமிழ் நிலம் என எடுத்துக்கொண்டால், தமிழ் மொழி இதுவரை கண்டடைந்த செல்வங்களில் தலையாய செல்வங்கள் வெண்முரசில்தான் இருக்கிறது. தனித் தமிழ் இயக்கம் எதை தவிர்த்து இழிந்ததோ, அதை வெற்றிகரமாக சமூக மனத்தில் விதைத்து,அதன் வழியே உயர்கிறது வெண்முரசு. அனைத்துக்கும் மேலாக 1950 முதல் தமிழ் இலக்கியம் இழந்திருந்த மரபின் தொடர்பை, தத்துவத்தின் செழுமையை, செறிவாக,வலிமையாக தமிழ் இலக்கியவெளியில் புதுப்பிக்கிறது வெண்முரசு.
இன்றும் என்றும் உலக இலக்கியப்பரப்பில் பாரத நிலத்தின் பண்பாட்டின் கலைப் பிரதிநிதியாக நின்று உரையாடப் போகும் வெண் முரசு, இந்திய அளவில், கனி எனத் தோற்றம் தரும் பண்பாட்டுப் பின்புலத்தை, அதைத் தாங்கி நிற்கும் பெரும் விருட்சத்தை, வேர் முனை முதல்,கிளை நுனி வரை அது என்னவாக இருக்கிறதோ,அதன் விஸ்வரூப தரிசனத்தை புனைந்து காட்டுகிறது.
வாருங்கள் இளநாகன் அழைக்கிறான்.பின்தொடர்வோம்.
[ இனிய ஜெயம்,
இங்கே எழுதி உள்ளவற்றின் பாதி , ஜனவரி மாத,புதுவை வெண்முரசு கூடுகை துவங்கும் முன்பும், கூடுகையின் இறுதி உரையாடலாகவும், கூடலுக்கு வெளியேவும் நண்பர்களுடனான அரட்டையாக பேசியவை. மீதி கேட்க யாருமில்லாமல் எனக்கு நானே பெசிக்கொண்டவை :) ]
கடலூர் சீனு