Saturday, February 2, 2019

குறை



அன்புள்ள ஜெயமோகன் சார்,

வெண்முரசில் நிறைய பேர் குறைபிரசவங்களாக பிறந்து பிறகு திமிறி எழுந்து அரக்கர்களாக இல்லை காட்டாளர்களாக எழுந்து வந்த சித்திரம் இருக்கிறது. அதே போல் தொலைந்து போனவர்களின் கதையும் இருக்கிறது. எனது துறையில் ராட்சசர்களாக இருக்கும் பலர் தாங்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் அல்லது சீக்கிரம் மரித்துவிடுவார்கள் என பிறப்பின்போது மருத்துவர்களால் கூறப்பட்டவர்கள் என அவர்கள் பொதுவில் கூறும்போது எனக்கு ஆச்சரியமாய் இருக்கும்...எப்படி அப்படி பூச்சி மாதிரி இருந்தவர்கள் இப்படி ஆனார்கள் என. உணமையிலே அவர்களின் குணம் ராட்ஷசம் என்பதை நான் அனுபவித்தும் இருக்கிறேன்.

வெண்முரசே ஜனமேயனுக்கு சொல்லப்படும் கதையாகிய உத்தரையை கொன்று வந்த ஒரு பூச்சியாகிய பரீட்சித்தின் கதையில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. பிருதைக்கு துர்வாசர் அளித்த மந்திரத்தினால் பீமன் ஆறுமாதத்தில் பூச்சிபோல பிறந்து பலஹாச்வரால் உடலும் உயிரும் கிடைக்கபெற்றவன். குந்தி அவனை"குலாந்தகன்" என்றே கூறுகிறாள். கார்கடலில் சுதீரை  கெட்டுபோன மாமிசம் போன்று  தீர்க்கதமஸ் அளிக்கும் கனியினை அரைகுறையாய் தின்றதினால்  ஆறுமாதத்தில்  பகதத்தர் பீமனை போன்றே பிறக்கிறான். ஆனால் பட்டத்து இளவரசனாக. பீமனுக்கு மாருதி என்றால் பகதத்ருக்கு கரி. இவர்களின் பலவீனம் அறிந்தோ என்னவோ இயற்கை துணையாய் எதையோ அனுப்புகிறது. பக்தத்தரைபோலவே  "காடு" நாவலிலும் ஒரு திருவிதாங்கூர் இளவரசன் வருவார். அவருக்கும் ஒரு யானை சுப்ரதீகம் போல கூடவே இருக்கும். எல்லாருக்கும் முன் ஜென்ம தொடர்பு இருக்கும்போல. நம்மை நமக்கு நன்றாக தெரிந்தால் நமது ஆடிபிம்பம் யார்? நாம் யாரின் தொடர்ச்சி என்று அறிந்துகொள்ளலாம் என்றுதான் நினைக்கிறேன்.  ஆனால் நம்மை அறியவே முடியவில்லையே..ஒரொரு நொடியும் நாம் யார் என்பதைகண்டால் நமக்கே திகைப்பாய் இருக்கிறது. அதற்குதான் "தியானங்கள் ..மந்திரங்கள் " இருக்கிறது போல. ஆனால் துரியோதனன் "மதங்ககர்ப்பம் " மூலம் வெளியே வந்தவன். அவனுக்கும் பீமனுக்கும்தான் பகை. பிறகு எதற்கு இடையில் பவதத்தர் போல ஆட்கள் என்று நினைத்தால்  நீங்கள் கூறுவதுபோல குருஷேத்ரம் என்னும் இந்த வாழ்க்கை பல நூறு கண்ணிகளினால் ஆனது.  சுப்ரதீகங்களும் சுப்ரதீபங்களும் சூழ்ந்த ஓன்று. 


ஆனாலும் முடியாமல் கடைசியில் "பகதத்தர் நுண்ணுருவாக விண்ணிலெழுந்தபோது சுப்ரதீகமும் உடனெழுந்தது. இருவரும் மீண்டும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டார்கள். சுப்ரதீகத்தின் துதிக்கை ஆழங்களுக்குள் புதைந்து தன் நாக உலகுக்கே மீண்டது. தன்னை ஆட்டுவித்த மாநாகத்திலிருந்து விடுபட்ட சுப்ரதீகம் பகதத்தருடன் விண்ணுலகை அடைந்தது"  என வெண்முரசு கூறுகிறது.  ஆம் விண்ணுலகமோ மோட்சமோ இந்த மண்ணில் துதிக்கை கொண்டு போரிட்டு கடைசியில் அதை இழக்கவில்லை  என்றால் மீண்டும் பூச்சியாய் பிறக்கவேண்டும் . பாதாளங்களில்  ஒவ்வொரு பிறப்புக்கும் நாகங்கள் தயாராவே இருக்கிறது. 


ஸ்டீபன்ராஜ் குலசேகரன்