அன்புள்ள ஜெ
வெண்முரசின் இப்பகுதிதான் உண்மையில் சோர்வூட்டக்கூடியதாக அமையவேண்டும். ஏனென்றால் தொடர்ச்சியாகச் சாவுதான். மீண்டும் மீண்டும் போர்தான். அவையெல்லாம் அறிந்த கதைகளும்கூட. இருந்தாலும் இந்தக்கதைக்குள்ளில் என்னென்ன சாத்தியம் என்பதை ஒவ்வொரு அத்தியாயமும் காட்டிக்கொண்டே இருக்கிறது. ஜயத்ரதனின் சாவும்சரி அபிமன்யூவின் சாவும்சரி நாம் அறிந்த கதைகளின் முற்றிலும் அறியப்படாத புனைவுகளாக இருந்தன. நீங்கள் நிகழ்வுகளைக் குறியீடுகளாக ஆக்கிவிடுகிறீர்கள். பத்மவியூகம் மிகப்பெரிய ஒரு குறியீடாக மாறிவிட்டது. ஜயத்ரதன் கதையில் அவன் தந்தையின் கை குறியீடாக ஆகிவிட்டது. இவ்வாறுதான் இந்தக்கதை இப்படி ஏற்கனவே தெரிந்த கதையிலிருந்து முழுக்கமுழுக்கப் புதியதாக முளைத்து எழுகிறது
பாஸ்கர் எம்