அன்புள்ள ஜெயமோகன் சார்,
கார்கடலின் 62ம் இருளுக்குள் நடக்கும் போர் "PLANET OF THE APES , SPIDER MAN "திரைப்படங்களின் அனைத்து பாகங்களையும் ஒரே ஸ்கிரீனில் பார்ப்பதுபோல் இருந்தது. இருளுக்குள் போர் நடக்கும் என்பது எனது மனதில் உதிக்கவே இல்ல. குண்டாசி, பூரிசிரவஸ் உடலை எரிக்க சுடுகாட்டில் துரியோதனன் நிற்கும் போது வரும் தகவல் சும்மா பாண்டவர்கள் புரளி கிளப்பிவிடும் ஒரு யுக்தியாகத்தான் செய்கிறார்கள் என எண்ணினேன். இந்த அத்தியாயத்தில் படிக்கும்போது புதிய அனுபவமாக இருந்தது. இரவின் போர் என்றால் அறியாமையின் போரா? இல்லை கவனகுவிப்பின் போரா? மனம் என்னும் கடிவாளமற்ற கற்பனையின் போரா? இல்லை இருண்ட நமது மன ஆழங்களுக்குள் கிடக்கும் அரக்கதனதிர்க்கும் கொஞ்சம் அறத்தொடு நடக்க துடிக்கும் மன போராட்டமா?
ஸ்ரவ்யாக்ஷம் - விழியும் செவியும் ஒன்றாகும் யோகம்,காட்சிகளை ஒலியென்று அறியவும் ஒலிகளை காட்சிகளாக விரிக்கவும் செய்யவேண்டியது. மனிதன் என்று தன்னை உணர்ந்த ஓன்று இந்த போர்கலையைதான் முதலில் அறிந்து கொண்டிருக்கும்.சப்தஸ்புடம் - ஒலிகளைக்கொண்டு போரிடும் கலை . கொஞ்சம் முன்னேறியபின் வந்த அடுத்த போர்கலையாக இருக்கலாம். இல்லை ஒலிகளை மட்டுமே கொண்ட மனதிற்கு ஆன கலை. துரோணர் ஒரு இடத்தில் என்னுள் ஒலிக்கும் காயத்திரியை நான் எப்படி தடுக்க முடியும் என அழுது புலம்பியது ஞாபகத்திற்கு வந்தது.இருளில் விழி துலங்குவது பற்றி வாசிக்கும்போது "இரவு " நாவலில் சரவணன் கடலுக்குள் இருந்து அவனை நோக்கும் பல்லாயிரம் விழிகளை பார்ப்பது ஞாபகம் வந்து திடுக்கிட வைத்தது. வெண்முரசு கூறுகிறது" போர் தொடங்குவதற்கு முன்னரே ஒளிகள் போரிடத் தொடங்கிவிட்டிருந்தன. ஏனென்றால் அவை அங்கிருந்தோரின் உள்ளத்துடன் நேர்தொடர்பு கொண்டிருந்தன" என்று. எத்தனை இருளுக்குள் இருந்தாலும் கொஞ்சமாவது வெளிச்சம் தேவைதான் போலும் இல்லை அது அவர்களின் ஒலிகளின் வெளிச்சமா? முதலிலே வெண்முரசு கூறியது போல் எந்த இருண்ட ஞானமும் கொஞ்சம் வெளிச்சத்தை கொண்டே இருக்கும், அதற்கடுத்த காலங்களில் மனித குலம் கண்டடையும் தரிசனதிற்கு அதுவே அடிப்படை. அந்த கொஞ்சம் வெளிச்சம் போதும் என பிடிவாதம் பிடிக்கும்போதுதான் பிரச்சனையும் போர்களும்.
கடோத்கஜனுக்கு உரிய இரவின் போராக இருந்தாலும் "துரோணர் சிலந்திவலையை இருளில் தொட்டுணர்வதுபோல மெல்ல மெல்ல அவனுடைய தாக்குதலின் சுழிமையத்தை உய்த்துணர முயன்றார். தன் செவிவிழியால் அம்புகள் எங்கிருந்து எங்கு நோக்கி செல்கின்றன என்று கணித்தார். இடும்பர்கள் எத்திசையில் தாவி தாக்கி எவ்வண்ணம் நிலைமீள்கிறார்கள் என்று உணர்ந்து மெல்ல மெல்ல அந்த சுழிமையத்தை நோக்கி தன்னைச் சூழ்ந்திருந்த படைவீரர்களை கொண்டுசென்றார். சல்யரும் அஸ்வத்தாமரும் இருபுறத்திலிருந்தும் அவரை துணைத்தனர். தாக்குதலின் கொண்டாட்டத்திலிருந்த இடும்பர்கள் துரோணரின் பொறி கைகளை விரித்துச் சூழ்வதை உணரவில்லை. கௌரவப் படைவீரர்கள் கடோத்கஜனை அவனறியாமலேயே நெருக்கி ஒற்றைப் புள்ளியை நோக்கி கொண்டுசென்றனர் என வாசிக்கும்போது முந்தைய அத்தியாத்தில் அலம்புஷருக்கும் அலாயுதனுக்கும் நடந்த விவாதத்தை இணைத்தால் அரவில் இருந்து அல்லது அரக்கதனத்தில் இருந்து வேதத்தின் முளை முனையை புரிந்து கொள்ளமுடியும் என்றே நினைக்கிறேன்.
ஸ்டீபன் ராஜ் குலசேகரன்