Monday, February 11, 2019

வெல்பவருகளும் தோற்பவர்களும்


 
அன்புள்ள ஜெயமோகன் சார்,

ஜயத்ரதனின் நிலைமையை நினைத்தால் மனம் பதறுகிறது. உண்மையிலே அது அவனை நினைத்து அல்ல. என்னை நினைத்து.  அவனுக்கே இந்த நிலைமை, போராட்டம், மனக்குழப்பம் , மனசோர்வின் உச்சகட்டம் என்றால் நான் எல்லாம் எந்த  மூலைக்கு என்று என்ன தோன்றுகிறது. இதற்கு எப்படி எதிர்வினை ஆற்றுவது என்றே தெரியவில்லை. உண்மையிலே நான் செய்தவற்றின் வினைகள்தான் வாழ்வா? இல்லை என்ன என்று தெரியாமல் வினை ஆற்றுவதுதான் வாழ்வா ? என்று ஒரே குழப்பம்.  இப்படி பாசமான, தனது மகனுக்கு துணைவர்கள்கூட எதிரியாவார்கள் என்று கணிக்கின்ற ஒரு தந்தை கிடைக்கபெற்றவன் எவ்வளவு ஆசீர்வதிக்கபட்டவன் என்ற தன்னிரக்கமும் சேர்ந்துகொண்டது. ஜெயமோகன் சார் தமிழ்நாவல்களில் தந்தை-மகன் பாசத்தை ஒரு பூடகமாகவே எழுதுவார்கள். ஆனால் இங்கு தந்தை தான் தனது மகனை எவ்வளவு நேசிக்கிறேன் என அவனிடம் வார்த்தைகளால் கூறுவதை வாசிக்கும்போது புதிய அனுபவமாக இருந்தது. இது வெண்முரசிற்கான தனித்துவம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இங்கு எல்லா கதாபாத்திரங்களுக்கும் தாங்கள் யார் என்று வாழ்வின் ஏதாவது ஒரு தருணத்தில் கூறிவிடுகின்றன. தாங்கள் உருமாறுவதையும் அப்பட்டமாக கூறுகின்றன. அதேபோல் தங்களுக்கு இது வேணும், என் மனதில் நீ இப்படித்தான், உன்னை நான் இப்படிதான்  எண்ணி கொண்டிருக்கிறேன் என்றும் கூறுகின்றன. ஒருவேளை நிறைய கதாபாத்திரங்கள் இப்படி நடந்துகொள்வதால் சுமார் மூவாயிரம் வருடங்களுக்கு முன் மனிதர்களின் மனம், நடத்தை இப்படிதான் இருந்திருக்கும் என்று நினைத்து இப்படியாக பட்ட தருணங்களில் அவர்கள் வெளிப்படுவதை நீங்கள் எழுதுகிறீர்கள் என நினைக்கிறேன் .அல்லது வெண்முரசின் இயல்பா?  இல்லை நவீன மனிதர்களாக நம்மை நினைத்து கொண்டு உணர்வுகளை அப்பட்டமாக வெளிபடுத்துவது சரியல்ல என்ற நிலைக்கு வந்திருக்கிறோமா? 

பிரயாகையில் பீஷ்மருக்கு தனது மாணவர்களை அறிமுகபடுத்தும் போது ஜயத்ரதன் வந்து பீஷ்மரை பணிய  பீஷ்மர் “அறம் உன்னுடன் இருக்கட்டும். வெற்றி உன்னை தொடரட்டும்” என்று வாழ்த்தி மார்போடு அணைத்துக்கொண்டார். “உன் தந்தையை நான் நன்கு அறிவேன். உன் தாயை அவர் மணந்தபோது சிந்துவுக்கு வந்து சிலநாட்கள் தங்கியிருக்கிறேன். பின்னர் ஒருமுறை அவரது விருந்தினராக அங்கே வந்தேன்” என்றார். துரோணர் “அரசர் விருதக்ஷத்ரர் துவராடை அணிந்து துறவியாகி காடு சென்றுவிட்டார். சிந்துவின் கரையில் கபிலசிலை என்ற இடத்தில் குடில்கட்டி தவ வாழ்க்கை வாழ்கிறார்” என்றார். “ஆம் அறிவேன்… அவர் எண்ணியதை எய்தட்டும்” என்றார் பீஷ்மர். இந்த போர்க்களத்திற்கு ஏன் விருதக்ஷத்ரர்  வந்தார்? தந்தை பாசத்தாலா?  அர்ஜுனன் வஞ்சினம் உரைத்திருப்பதை தெரிந்தா?  இல்லை அவர் எண்ணியது தனது மகனின் முடிவு இங்குதான் இருக்கவேண்டும் என்று எண்ணி வந்தாரா?  ஒரு வாசகனாக ஆயிரம் கேள்விகள் சுற்றிவந்தாலும் ஒரு வாழ்க்கைக்குள் அறிந்து கொள்ள முடியும் என்று தோன்றவில்லை.

ஜயத்ரதன் திகைத்து நோக்க காவலர் மேலும் குரல் தழைய “ஒருவேளை…” என்றார். அவர் சொல்வதை உணர்ந்து ஜயத்ரதன் உளம் நடுங்கினான். ஜயத்ரதனை இளமையிலிருந்து தூக்கி வளர்த்த தப்தர் அவன் உளப்போக்கை நன்கு அறிந்திருந்தார். “ஒருவேளை இது உங்கள் இறுதி இரவாக இருக்கலாம். பிறிதொரு முறை உங்கள் தந்தையுடன் சொல்லாட முடியாமல் போகலாம். சொல்லப்படாத சொற்களுடன் அவரோ நீங்களோ இங்கிருந்து செல்லலாகாது. ஆகவே அவரை எதிர்கொள்க!” என்றார். ஜயத்ரதன் தளர்ந்த கால்களுடன் அமர்ந்தான்.   இறப்பதற்கு முந்தைய இரவின் உணர்வுகளை  கார்கடலில் நிறைய கதாபாத்திரங்கள் எதிர்கொள்கின்றன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வினைபயன். இக்கட்டு. உண்மையிலே மரணத்திற்கு முந்தைய நாள் நமக்கு தெரியுமா? நாட்டில் நடக்கும் செய்திகளை வாசித்தால் சிலர் அதை குறிவைத்தே நடப்பதுபோல் இருக்கிறது. 

பீஷ்மரின் பழைய வாழத்துபடி வந்திருக்கும் ஜயத்ரதனின் தந்தை ஒருவேளை பீஷ்மர் கூறித்தான் வந்திருப்பாரா? இப்போது துச்சளை என்ன எண்ணிக்கொண்டிருப்பாள்? பிருகத்ஹாயர் துரியோதனின் படை ஜயத்ரதனை பலிகொடுக்க தயாராகும் என கணித்தது நடக்குமா? இல்லை அது ஒரு தந்தையின் உள்ளமா? 

ஸ்டீபன் ராஜ் குலசேகரன்