Tuesday, February 12, 2019

போர், தியாகம், வஞ்சம்,உயிர்



அன்புள்ள ஜெயமோகன் சார்,

கார்கடலின் 47ம் அத்தியாயத்தில் வரும் உயிர்பயம் பற்றிய வர்ணனையையும் , உயிர் வாழ்வதற்கான உந்துதலைகுறித்தும் வாசித்தது இன்னொரு திறப்பாக அமைந்தது. இது உண்மைதான் இல்லையா? போர், தியாகம், வஞ்சம் என்று என்ன கூறி சண்டையிட்டாலும் அதில் வெற்றி பெற்றதை பார்க்க நாம் இல்லாவிட்டால்  என்ன நடந்து என்ன பயன்? ஆனால் போர்வீரர்கள் மனநிலையை வெண்முரசு பலவிதங்களில் கூறியிருக்கிறது. அவர்கள் பயபடுகிறார்கள், தங்களின் அரசன் இறந்தவுடன் பிணம் போல் எதிரிகளின் முன்சென்று பிணமாகிறார்கள், அழுகிறார்கள், நடுங்குகிறார்கள் கஞ்சாவை அடித்துவிட்டு கண்மண் தெரியாமல் மோதி சாகிறார்கள். நவகண்டன் போன்ற ஒற்றை ஆள்களின் தன்பலி சில நிமிடங்களில் தீர்மானிக்கபட்டு முடிந்துவிடுகிறது. போர்வீர்கள் சாவதற்கென்றே தயாராகிறவர்கள். தினமும்  போருக்கு சென்று மீள்பவர்கள் அடுத்த நாள் போருக்கு செல்ல ஒரு உச்சகட்ட நிகழ்ச்சி நடக்கவேண்டி இருக்கிறது. அது அவமானமோ, இழப்போ , தோல்வியோ எதோ. இல்லை என்றால் போர் முடியும் வரை உள எழுச்சி இல்லாமல் செத்து செத்து பிழைக்கவேண்டும் பைத்தியம் பிடித்துவிடும் .இந்த இரவில் ஒவ்வொருநாளும் போர்முடிந்தபின் அடுத்த நாள் போர்சூழ்கைக்காய் கூடி இருப்பவர்களின் மனநிலையை யோசித்தால் குலை நடுங்குகிறது. தொடர்ந்து ஒரு செயல்களை ஒரு வெற்றிக்காய் செய்பவர்கள் தினமும் அன்றைய தினத்தை கணக்குபோட்டால் சோர்வும் கிளர்ச்சியும் மாறி மாறி வருகிறது. அர்ஜுனன் மரணத்தின் விளிம்பு வரை செல்வதை எல்லாம் அவனோடு கூட இருந்தவர்கள் கண்முன்னே பார்த்தவர்களுக்கு என்ன தோன்றி இருக்கும்?  ஆதலால்தான் கஞ்சா, கள் அடித்துவிட்டு அனைவரும் தூங்குகிறார்கள் 

இன்று உயிர் அச்சத்தினாலோ இல்லை கவுரவர்களுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்தவேண்டும் என அர்ஜுனன் திடீர் த்டீர் என் ஓரிடத்தில் தோன்றி போர்புரிந்து விளையாடும் மைன்ட் கேம் அர்ஜுனனின் நடத்தையில் இதுவரை இல்லாதது. அர்ஜுனன் வேறு பிறவி எடுத்தது போல் இருக்கிறது. அர்ஜுனன் மாறிவிட்டான்.  


ஸ்டீபன்ராஜ் குலசேகரன்