Friday, February 1, 2019

ராஜதந்திரத்தின் பாடங்கள்



ஜெ,

குந்தி சொல்லும் தர்க்கங்களை ஒரு தனி ஃபைல் போட்டு தொகுத்துப்பார்த்தேன். அப்போதுதான் அவளுடைய சூழ்ச்சியின் விரிவு எனக்குப் புரிந்தது. பலபடிகளாக அவள் சொல்லிக்கொண்டே செல்கிறாள்.

அ. குந்தி அர்ஜுனன் நோயில் இருப்பதைச் சொல்கிறாள். அப்படியே மெல்ல அவன் கர்ணனின் தம்பி என்கிறாள். அவன் உன் இளையோன். நீ என் மைந்தன். என் வயிற்றில் என் குருதியில் ஊறி பிறந்தவன்” என்கிறாள். “அன்னை என்று அழைக்கமாட்டாயா என்று வழக்கமான செண்டிமெண்டுடன் கேட்கிறாள்

ஆ.  உன்னை என் மைந்தன் என நான் அறிவித்தால் என் குருதிமைந்தரில் நீயே முதல்வன். இந்திரப்பிரஸ்தத்தின் முடியுரிமை உனக்குரியது என ஆசைகாட்டுகிறாள். கௌரவரும் பாண்டவரும் இருபுறமும் துணைக்க நீ அஸ்தினபுரியின் அரியணையில் அமரமுடியும். துரியோதனனும் பீமனும் அர்ஜுனனும் உன் பெரும்படைத்தலைவர்களாக நிற்பார்கள் என்றால் விரல் சுட்டும் நிலமெல்லாம் உன்னுடையதாகும். பாரதவர்ஷத்தின் பேரரசனாக மும்முடி சூடி நீ அமர இயலும் என்று மயக்க நினைக்கிறாள்

இ. வசுஷேணா, நீ மும்முடி சூடி அரியணையில் அமர்ந்தால் உன்னருகே திரௌபதி அமர்ந்திருப்பாள் என இன்னும் ஆழத்துக்குச் சென்று சொல்கிறாள்

ஈ. இப்போரில் வென்று பெருவீரனென புகழ்பெறக்கூடும் என்று எண்ணுகிறாய். நோக்கு, இப்போரில் வென்றாலும் நீ சூதனே. எந்நிலையிலும் உனக்காக அஸ்வமேதமோ ராஜசூயமோ செய்ய அந்தணர் வரப்போவதில்லை. உன் அரசும் கொடிவழியினரும் என்றும் அஸ்தினபுரிக்கு அடிபணிந்தே வாழவேண்டியிருக்கும். உன் களமறத்தை பாடிநிறுத்துவார்கள் என்று எண்ணுகிறாய். அது நிகழப்போவதில்லை. என்று கர்ணனை மிரட்டுகிறாள்

உ. அவன் உன்னை முதன்மையாகக் கருதினான் எனில் அரசரவையிலும் வேள்விகளிலும் நீ சிறுமைப்படுத்தப்பட்டபோது அவன் குரல் ஏன் எழவில்லை? உன்னை படைவிலக்கம் செய்து பீஷ்மர் ஆணையிட்டபோது அனைத்தையும்விட மேலென உனக்காக ஏன் அவன் பேசவில்லை? அப்போது அவன் உள்ளத்தில் ஓங்கி நின்றவை எவை? என்று துரியோதனனுக்கும் கர்ணனுக்கும் பகை மூட்டிவிட முயல்கிறாள்

ஊ.கர்ணனின் ஆணவத்தைச் சீண்டி எழுப்ப முயல்கிறாள். அன்னமிட்ட கையை முத்தமிட்டு அடிபணிபவன் சூத்திரன். ஏவிய கையை இறையெனக் கொண்டாகவேண்டிய தெய்வ ஆணை அவனுக்கே. சூதன் வளர்ப்பினால் உன் உள்ளத்தில் புகுந்த எண்ணம் அது. அதை உதறி உன் குருதிக்கு மீள்க! அதுவே உனக்கு சிறப்பளிக்கும் என அவனை சீண்டுகிறாள்

எ. இந்தப் படி கடந்து செல்கையில் உன்மேல் தீச்சொல்லிடுவேன். உன்னைப் பழித்து உரைத்த பின்னரே இங்கிருந்து நீங்குவேன். என மிரட்டுகிறாள்

ஏ. என் மைந்தர் இறப்பதைப் பற்றி மட்டும் நான் கவலை கொள்ளவில்லை. அவர்கள் தங்கள் தமையன் கையால் உயிர்விடுவதைப் பற்றியே கருதுகிறேன். அப்பெரும்பழியை என் மைந்தனாக நீ சூடுவதைப்பற்றி அஞ்சுகிறேன். என அவனை உணர்ச்சிகர மிரட்டலுக்கு ஆளாக்குகிறாள். அவன் பழியை அஞ்சவைக்கிறாள்

ஐ. கடைசியாக நீ பெண்களின் உள்ளத்தை அறிந்ததே இல்லை. உன் இரு துணைவியரும் உன்னை இருவகையில் துறந்தனர். உன் வளர்ப்பன்னையுடன் உனக்கு உளஒருமை இல்லை. நீ விழையும் பெண் உன்னை கடும்வெறுப்புடனன்றி எண்ணமுடியாதவள் என்று சொல்லி அவன் ஆணவத்தை உடைக்கிறாள் அதற்குத்தான் கர்ணன் இறங்கிவருகிறான். பேசிப்பேசி அவன் தன் வழிக்கு வரச்செய்கிறாள்

ஒ.தருணங்களுக்கேற்ப உருமாறியும் உருப்பெற்றும் கடந்துவருவதே மானுட இயற்கை. நீ அத்தனை தருணங்களிலும் உன்னை மாறாது அமைத்துக்கொண்டாய். ஆகவே தளிர்க்காத பூக்காத கல்மரமாக நின்றாய்” என அவனை பேசி கொஞ்சம் கொஞ்சமாக வளைய வைக்கிறாள்

ஓ. உனக்கும் அதுவே இறுதி. குருக்ஷேத்ரத்தில் வந்து முடிவதற்காகவே நீ இதுவரை கடந்துவந்தாய். என சொல்லி கடைசியாக மிரட்டுகிறாள்

ஔ. அதன் பின் அவன் தன் வாக்குறுதியை மாற்றிக்கொள்ள தயார் என உணர்ந்துகொண்டு அதை எப்படியெல்லாம் வளைக்கலாம் என்று சொல்லிக்கொடுத்து சத்தியம் வாங்கிக்கொள்கிறாள், 
சொன்ன வாக்குறுதியையும் அவன் மீறவில்லை, ஆனால் அவள் கோரியதை அளிக்கவும் செய்தான் என்ற நிலையை உருவாக்குகிறாள். நீ சொன்ன சொற்களுக்கு மட்டுமே பொறுப்பாவாய். ஏனென்றால் அத்தருணத்தில் அச்சொற்களை சொல்ல வைப்பவை தெய்வங்கள். சொற்களின் பொருளையும் அவையே வகுக்கின்றன என பழியை தெய்வம் மீதே போடுகிறாள்/

குந்தி இந்த அத்தியாயத்தில் செய்வதை ராஜதந்திரம் வியாபார தந்திரம் ஆகியவற்றுக்கான ஒரு தீஸிஸ் ஆகவே வைக்கமுடியும்

அருண்