அன்புள்ள ஜெயமோகன் சார்,
கார்கடல் 65ம் அத்தியாயத்தில் கர்ணனின் தவிப்பு என்னையும் ஆட்கொண்டது. இரு அன்னையருக்கு வாக்கு கொடுத்துவிட்டு தடுமாறி கொண்டிருக்கிறான். நாககுழந்தை ஆவநாளியில் அனல் என இருக்கிறது. ஆனால் எதிரில் நீலவண்ணனும் அர்ஜுனனும். எத்தனை தடவை வாழ்க்கையில் இருவரும் மோதி இருப்பார்கள். ஒரு தடவை கூட கர்ணன் வெற்றி பெற்றதே இல்லை. ஆனால் இது அவனது களம். ஊழ் குந்திவடிவில் வந்து தடுமாற வைத்துவிட்டது. பொங்கி பொங்கி சாகிறதுதான் சிலரின் ஊழ் போலும். இப்படி ஒரு கதாபாத்திரத்தை விவரிப்பதே எவ்வளவு பெரிய சவால்.அர்ஜுனனும் கர்ணனும் போரிடுவதை பார்க்கும்போது மனதுக்குள் நானும் காண்டீபத்தை எடுத்துகொண்டு இரண்டுபேரையும் எதிர்கொண்டு குருஷேத்திரத்தை விட்டு துரத்திவிட வேண்டும் என வெறி ஏறியது. ஆனாலும் நுட்பமான வேறுபாடுகள் நிறைத்தது.இதற்குமுன் கர்ணன் நட்பாலோ இல்லை அவமானதாலோ , இயலாமையிலோ தோல்வியை தழுவுவான். குருஷேத்திரத்தில் ரத்த உறவுக்கே மதிப்பு இல்லை என்னும்போது குலமாவது கோத்திரமாவது. கடோத்கஜன் எல்லாம் வெற்றிவாகை சூடுகிறான்.ஆனால் கர்ணன் அனைத்து அஸ்திரங்களும் இருந்தும் எதையும் பயன்படுத்த முடியாமல் கை கட்டபட்டு நிற்கிறான். நாகபாசம் எல்லாம் கிருஷ்ணரின் ஒரு சிறிய விலகலில் விலகி செல்கிறது. அதற்கான காலகட்டம் முடிந்துவிட்டது. ஆனாலும் அது கர்ணனின் கையில் போய் சேர்க்கிறது. ஊழி ஊழியாய் இருக்கும். வெண்முரசு,செய்யபட்ட எந்த ஆயுதமும் அழிவதே இல்லை, அது தனக்கான ஆட்களை அடையும் என்றே கூறுகிறது. கர்ணனால் இப்போது செய்யமுடிந்தது யுதிஷ்டிரரிடம் “செல்க! இங்கு வீணாக தலைகொடுத்து அழியவேண்டாம். அந்தத் தலை குருதிபடிந்த இம்மண்ணில் உருளும் அளவுக்கு எடைகொண்டது அல்ல” என்று ஏளனம் உரைப்பது மட்டும்தான். "யுதிஷ்டிரர் கண்களில் சீற்றத்துடன் பற்களைக் கடித்து ஒரு கையில் வில்லும் இன்னொரு கையில் அம்பும் செயலற்றிருக்க நோக்கியபின் தலைகுனிந்து பாகனிடம் தன் தேரை திருப்பும்படி ஆணையிட்டார்" என வாசிக்கும் போது கொஞ்சம் சந்தோஷமாயிருந்தது. தர்மவானை திட்டும்போது ,மனகாயபடுத்தும் போது ஆனந்தம் அடையாதவன் யார்?
வாசகர்களாகிய எங்களின் எரிச்சல்தான் துருமனின் எரிச்சல். திடீர் என கர்ணனின் உறவுகள் போர்க்களத்தில்,போர்முனையில் விவரிக்கபட்டது பெரும் சர்பிரைஸ் ஆக இருந்தது. வெய்யோனில் கூட வரவில்லை. அதிரதன் கூட மூத்து, மறுபிறவி எடுத்து கனிந்து விட்டார்.
ஸ்டீபன் ராஜ்