அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.
விளக்கமுடியாத விருப்புகளாலும் புரிந்துக்கொள்ளவே முடியாத வெறுப்புகளாலும் ஆனது வாழ்க்கை என்று தொடங்கும் பிரயாகையில் உத்தானபாதன் சுநீதி சுருதிவழியாக விருப்பில் இருக்கும் வெறுப்பையும், வெறுப்பில் இருக்கும் விருப்பையும் காட்டி துருவன் என்ற அசைவின்மையில் கொண்டுவந்து நிறுத்தி கதையை வான்வெளியாக்னீர்.
அசைவின்மையை அடையும் தருணம் தான் வாழ்க்கையின் வான்வெளியும். அசைந்து அசைந்து விரிந்துபோகும் மனவெளியின் வான்வெளி அடிமுடிகாண ஈசனே காண்பான். சொல்வழிப்போகும் பிரமனும், பொன்வழிப்போகும் அரியும் கூட அடிமுடிக்காணமுடியாமல் அசந்துப்போகும் எல்லை உடையது வாழ்க்கை வெளி.
பிரமன் தன்பெயர் மைந்தன் பிரகஸ்பதியை குளிர்விக்க விண்ணின் கருமையை குழைத்து ஒரு நீர்பெருக்காக்கி அனுப்பி வைத்தான் என்று சொல்லும் வெண்முகில் நகர்-01 எத்தனை அழகான படிமம் கவிதையால் ஆனாது, ஆனால் அந்த உண்மையை மேகம் இடி என்று சொல்லிப்போனல் அது கண்கள் காணும் ஒரு உருவப்பொருள் அன்றி வேறு ஒன்று இல்லை.
உருவத்தை தாண்டி மேகம் மேகத்திற்குள் உள்ள இடி என்ற அழகான பெரும் படிமம் கவிதையாகி அதன் உருவத்தை நம் உள்ளத்தில் எழுதிப்போகும் தருணத்தில் இது ஒரு பொருளாக மட்டும் அன்றி உலகம் முழுவதுமான பிரம்மம் ஆகிப்போகின்றது. கண், கண்ணைத்தாண்டி அகம் அகத்திற்குள் செல்லும் சித்தம், சித்தத்திற்கு உள் செல்லும் துரியம் என்று வேர் பரப்பி கிளைப்பரப்பி பூத்தும் கனிந்து நிற்கும் அந்த ஒரு சொல்லழகு இல்லாத இடம் மண்ணிலும் விண்ணிலும் இல்லை. //செந்தழல் வடிவினனாகிய தன் பெயர்மைந்தனை குளிர்விக்கவிண்ணின் கருமையைக் குழைத்து ஒரு நீர்ப்பெருக்காக்கிஅனுப்பினார் பிரம்மன்//
கருமையின் குளுமையும், செந்தழல்வடிவும் கொண்ட அந்த மேகத்தை அகமாகக்கொண்டுதான் அனைத்து சீவன்களின் அகமும் இருக்கின்றது. அந்த அகத்தையே தங்கையும், தமக்கையுமாக புலோமையும், காலகையும் என்று காட்டும் இன்றைய கதைதான் எத்தனை பெரிய படிமத்தை உருவமாக்கிவிட்டது.
கதை கதையாம் காரணமாம்,காரணத்தில் ஆயிரம் தோரணமாம். புலோமை என்கின்ற இடிதான் மண்ணுக்கு இறங்குகின்றது. காலகை என்கின்ற மேகம் மலைசிகரத்தில்தான் தங்குகின்றது.
மண்ணில் இறங்கிய புலோமையை விரும்பி அலைந்து அடைந்து சுகித்து தவத்தில் நின்று பிரிந்துப்போகின்றான் ஒருவன் அவன் புலோமன். வேண்டாம் வேண்டாம் வராதே வராதே என்று சினந்து அஞ்சி பயந்து பணிந்து ஏற்று காவல்காத்து ஏமாந்து அதிலேயே உழன்று வாழ்கின்றான் பிருகு.
ஒரே வெட்டில் வெட்டினால் பெண் ஆணிடம் தன்னை நிருபிப்பதுபோல்தான் தெரிகின்றது ஆனால் ஆண்தான் பெண்ணிடம் தன்னை நிருபித்துக்கொண்டே இருக்கின்றான். ஒன்று முற்றும் ஆற்றலோடுமோதி சரணாகதி அடைந்து நிருபித்தல் அல்லது முழுவதும் பயந்து விலகி ஓடி தப்பித்தேன் என்று நிருபித்தல். பெண் அசைவதே இல்லை. சரணாகதி அடைந்தாயா இன்னுமொரு குழந்தை என்ற சந்தோஷம். தப்பித்து ஓடிவிட்டாயா ஒரு சுமை தீர்ந்தது என்ற சந்தோஷம். ஆணை உண்டு உண்டு பெண்ணோடு ஆணையும் பெற்றுப்போட்டு தான்பெற்ற கடனுக்கு வட்டியும் கட்டிவிட்டு செல்லும் பெண்ணை வயிறென்னும் பொக்கிஷம் கைவிடுவதே இல்லை என்று காட்டும் இன்றைய புலோமை கதை பெண் என்னும் சக்தியை பயன்படுத்து, பொதிந்து வைத்து எரிந்துப்போகாதே என்று சொல்கின்றது.
மண்ணை நிறைக்கவும், மண்ணை எரிக்கவும் கூடிய பெரும் நெருப்பை சுயநல சிலம்புகள் அணிவித்து வலம்வரவைத்தால் அந்த சிலம்புகளால் ஒருநாள் ஆணின் தலைகள்தான் கொலைகளத்தில் விழும் அன்றுகூட பெண்தான் நீதி கேட்டு எரி எழவைப்பாள் உலகத்தில்.
புலோமனிடமும், பிருகுவிடமும் புலோமை நடந்துக்கொண்ட விதம் சரிதானா? என்ற கேள்வியை எழுப்புகின்றது இன்றைய பதிவு. மானிட நீதி என்னும் கரைக்குள் நடக்கும் பெண்ணென்னும் நீர். நதி என்றும், குளம் என்றும், கேணி என்றும் இருக்கலாம். கருப்பை என்னும் கடல் எந்த கரைக்கும் அடங்குவதில்லை அது பெண் என்னும் எல்லையை கடந்து பெண்மை என்னும் பெருவெளியாக நிற்கின்றது அதுவே அன்னை என்னும் பிரமமாகும்போது சொல்கூட அதை தொடமுடியவில்லை.
துருவனின் கதைமூலம் அறத்தை காட்டினீர்கள் ஜெ. புலோமையின் கதையின் மூலம் அன்னையை காட்டி உள்ளீர்கள் ஜெ.
பெண்ணாக பார்க்கும் வரைதான் வடிவம். அன்னையாக பார்க்கும்போது வடிவம் ஏது?
புலோமை என்னும் சக்கரம் சுழன்று அதனால் ஆற்றல் வெளிப்பட புலோமன், பிருகு என்னும் இரண்டு எல்லைகளுக்கு இடையில் உருவாகும் அச்சைக் கண்டு கொள்ளும் தருமனும் பீமனும் கதையில் இன்று உச்சம்.
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.