Thursday, March 12, 2015

சமூகத்தை நடுங்கவைக்கும் பெண்ணுடல்(வெண்முகில் நகரம் அத்தியாயம் 25-31




அன்பு ஜெயமோகன்,
         
வெண்முகில் நகரத்தின் சமீபத்திய அத்தியாயங்களில்(பூரிசிரவஸ் கதை) ஒரு ஆணின் இயல்பான மனம் அப்படியே வெளிப்படுத்தப்பட்டிருப்பதாக உணர்கிறேன். ஒவ்வொரு ஆணும் பூரிசிரவஸே என்று அடித்துச் சொல்லவும் துணிகிறேன். எங்கு இளம்பெண்களைப் பார்த்தாலும் அலைபாய்கின்ற மனம் கொண்டவர்கள்தான் ஆண்கள். அதில் வயது வித்தியாசம் இருக்க முடியாது என்றும் நம்புகிறவன் நான். என் கூற்றை மறுப்பவர்கள் போலிகளாகவே இருக்க முடியும் என்பதும் என் துணிவு. குறிப்பிட்ட வயதுள்ள ஆண்கள் மட்டுமே இளம்பெண்களைக் கண்டால் அலைபாய்கிறார்கள் என்றில்லை. எவ்வயதாயினும் இளம்பெண்களைக் கண்டால் ஆண்கள் தடுமாறிக்கொண்டேதான் இருக்கின்றனர். கொஞ்சம் வயது முதிர்ந்து தோலில் சுருக்கம் விழுந்த பெண்களைக் கண்டு மயங்கி நிற்பதில்லை ஆண்கள். பருவத்திலிருக்கும் இளம்பெண்களைக் காணும்போதே கிளர்ச்சி கொள்கின்றனர். அப்படியானால்..ஆம்! இளம்பெண்களின் மீது அவர்களுக்கு ஈர்ப்பு துளியும் இல்லை. இளம்பெண்களின் உடல்கள் மீதுதான் அளவுகடந்து விருப்பம் கொண்டிருக்கின்றனர். பெண்ணுடல்களின் அசைவுகளையே பெரிதும் மோகிக்கின்றனர். பூரிசிரவஸ் இளங்கன்னியரைப் பார்க்கும்போது அவர்களின் உடல்களையே முதலில் கவனிக்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது.
         
ஆண்களின் மனநிலை சரியானதுதானா எனும் விவாதத்துக்குள் நுழைய நான் நுழைய விரும்பவில்லை. மாறாக, இளம்பெண்களை உடல்களாக மட்டுமே அணுகும் மனநிலை குறித்துத்தான் நான் துயருருகிறேன். பள்ளி படிக்கும்வரை எப்பெண்ணுடனும் நான் அதிகம் பேசியதில்லை. கல்லூரிக்காலத்தில்தான் பெண்களுடன் பேசும் வாய்ப்பு கிடைக்கிறது. அப்போதுகூட அவர்களின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்துப் பேச என்னால் முடிந்ததில்லை. அவர்களின் உடல்கள் என்னைத் தொந்தரவு செய்து கொண்டே இருந்தன. சமூகத்தில் எனக்கு மட்டும்தான் இப்படியோ எனும்படியான தவிப்பில் சில நண்பர்களுடன் பேசியபோது அவர்களும்  பெண்உடல்களால் அலைக்கழிக்கப்படுவதை ஏற்றுக்கொண்டனர். என்றாலும் அவ்வுடல்களை ஒருகட்டத்திற்கும் மேல் என்னால் கடந்துவிட முடிந்தது. அதிகம் தயங்கி நின்றபோது உடல்களாக மட்டுமே தெரிந்த தோழிகள் பழகத்துவங்கியபோது உணர்வுகளாக மாறினர். அவர்களின் உணர்வுகளை என்னோடு அவர்கள் பகிர்ந்துகொண்ட பொழுதுகளில் உடல்களாக அவர்களை நான் பார்த்திருக்கவில்லை. என் முன்பு ஒரு ஆடி வைக்கப்பட்டிருப்பது போலவே உணர்ந்தேன். என்னை எப்படி உடலாகப் பார்க்காது உணர்வாகக் கருதினேனோ அப்படி அவர்களின் உடல்கள் கடந்திருக்கும் உணர்வுகளைப் புரிந்துகொண்டபோதுதான் என்னால் ஆசுவாசிக்க முடிந்தது. உடல் என்பது ஒருபகுதிதானே தவிர அதுவே பெண்ணன்று எனும் புரிதல் எளிமையானதுதான் என்றாலும் அம்மனநிலைக்கு ஒரு ஆணால் அவ்வளவு எளிதில் வந்துவிட முடியாது.

          பெண்ணுடலை நெருக்கத்தில் பார்க்கும்போது தடுமாறாத ஆண் உளவியல் சிக்கலுக்கு ஆளானவனாகவே இருக்க முடியும். அதைப்போன்று பெண்ணை உடலாக மட்டுமே பார்க்கிறவனையும் நான் மனச்சிக்கலில் இருப்பவனாகவே கருதுகிறேன். விலங்குகளின் பரிணாமத்தொடர்ச்சியில் முன் நகர்ந்துவிட்டதாகச் சொல்லும் நாம் காமத்தில் இன்னும் விலங்குகளாகவே இருக்கிறோமோ என்றும்படுகிறது. எந்நேரமும் காமத்தையே அகத்தில் கொண்டிருக்கும் நம் சமூகத்தின் மனநிலைக்கு புறத்தில் விதிகப்பட்டிருக்கும் கற்புவிதிகள்தான் காரணமோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது. பெண்ணுடலின் அலைக்கழிப்பில் இருந்து நான் முற்றிலும் விடுபட்டுவிடவில்லை என்றாலும், அதைச்சுற்றி வேயப்பட்டிருக்கும் சமூகக்கவர்ச்சியிலிருந்து நான் மீண்டுவிட்டேன் என உறுதியுடன் சொல்வேன்.
         
          இல்லறம், துறவறம் எனும் இரண்டின் அடிப்படையுமே பெண்ணுடலாக இருப்பதை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும். இல்லறத்தான் பெண்ணுடலைக் கொண்டாடுகிறான்; துறவறத்தான் பெண்ணுடலை வெறுகிறான். கொண்டாடுபவனுக்கு ஒருகட்டத்தில் அதில் சலிப்பு வந்துவிடுகிறது. அச்சமயம் அவனுக்கு பெண்ணுடல் வெறுப்பைத் தருகிறது. வெறுத்தவனுக்கு ஒரு கட்டத்தில் அதில் சலிப்பு வந்துவிடுகிறது. அச்சமயம் அவனுக்கு பெண்ணுடலைக் கொண்டாடும் நினைப்பு வந்துவிடுகிறது. இல்லறம் மட்டுமே முழுமையன்று. ஒருகட்டத்தில் அது துறவறமாக மாறும்போதே முழுமை பெறுகிறது. அதைப்போன்றுதான் துறவறமும். இல்லறத்தைக் கொண்டாடும்போதே அதுவும் முழுமை பெறுகிறது. ஜெயகாந்தனின் துறவு எனும் நெடுங்கதையின் வழியாக நான் பெற்ற தரிசனம் இது. இல்லறத்தானும், துறவறத்தானும் இணைந்தே இருக்ப்பவர்கள்தான் நாம். இரண்டுமே ஒன்றை ஒன்று நிரப்புபவை.
         
ஆண்களான நம் மனநிலையிலிருந்து மட்டுமே யோசிக்கும் நாம் பெண்களுக்கான உலகைக் கண்டுகொள்வதே இல்லை. பெண்ணுடலைக் கொண்டு நம்மை இல்லறத்தான், துறவறத்தான் எனப்புனிதப்படுத்திக்கொள்ளும் நாம் என்றாவது அவர்களின் வாழ்வைக்குறித்துப் பேசி இருப்போமா? இல்லத்தரசி எனும்பட்டத்தை மட்டுமே அவர்களுக்குச் சூடி துறவறத்திலிருந்து அவர்களை அழகாக விலக்கி விடுவோம். துறவறம் பெண்களுக்கு ஏற்றதல்ல என்பதே இன்றையவரை சமயங்களில் எழுதப்படாத நெறி. பெண்கள் ஞானம் பெறவே முடியாது என அடித்துச்சொன்ன சமணமே உயிர் இரக்கத்தைப் பேசுகிறது; வியப்பாய் இல்லை. துவக்கத்தில் புத்தரின் சங்கங்களில் பெண்களுக்கு இடமில்லை. வைதீக சமயத்திலோ பெண்களை உடமைகளாக மட்டுமே பார்க்கும் நிலை. சைவ, வைணவ சமயங்களிலும் பெண்களுக்கான இடம் மிகக்குறைவே. சித்தர் பாடல்களிலும் பெண்ணுடலைக் குறித்த மோசமான வசவுகள். இதிகாசக் காப்பியங்களிலும் பெண்ணுடலே முக்கிய பாத்திரமாய். பெண்ணுடலைக் கண்டு ஒரு சமூகம் ஏன் இப்படி நடுங்குகிறது?
       
முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.