Monday, March 2, 2015

ஐந்து இணைவுகள்



இப்புவியின் உயிர்க்குலம் முழுமையும் நாம் பேருயிர் எனக் கொள்ளலாம். அதன் ஒரே நோக்கம் தான் அழியாமல் வாழ்வது. அதற்கான எல்லா வழிகளையும் அது மேற்கொண்டு இருக்கும்.  உயிர்களை பிறப்பித்துக்கொண்டே இருப்பதன் மூலமும் பிறந்த உயிர்களை மேற்கொண்டு வாழவைப்பற்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்பதன் மூலமும் அது தன்னை வாழவைத்துக்கொள்கிறது.   அந்த பேருயிர் எல்லா உயிர்களையும் இனப்பெருக்க விழைவை உள்வைத்தே பிறப்பிக்கிறது. தன் உயிரை பேணிக்கொள்ளுதல் முதற் கடமையாகவும்  அடுத்த கடமையாக இனப்பெருக்கம் செய்யவேண்டியதும்  ஒவ்வொரு உயிருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.   உயிர்கள் இக்கடமையை தாங்கள் அறிந்தும் அறியாமலும் செய்து வருகின்றன.

         அந்த பேருயிர் ஆண் என்ற அகப்பையினால் விந்தணுவை எடுத்து பெண் என்ற பாத்திரத்தில் உள்ள கரு முட்டையில் சேர்த்து ஒரு உயிரை உருவாக்குகிறது. ஆனால் அகப்பைகளும் பாத்திரங்களும் தானியங்கி பொறிகள்.  தானியங்கி பொறிகள் செயல்படுவதை பார்க்கும்போது தாமே செயல்படுவதைப்போல் தான் இருக்கும். ஆனால் அவற்றின் செயல்பாட்டிற்கான கட்டளைகள் அவற்றினுள்ளே முன்னரே பொதிக்கப்பட்டிருக்கும். மனித உயிர்த்தொகுதியை தவிர மற்றவை அனைத்தும் அவற்றின் செயல்பாட்டுக் கட்டளையை மீறாமல் நடந்துகொள்கின்றன.

         மனித உயிர் தொகுதி மட்டும்  சிந்தனை என்ற ஒன்றினால் இந்த செயற்பாட்டுக்கட்டளைகளை மீறி நடந்துகொள்வதாக தன்னை நினைத்துக்கொள்கிறது. தன்னை மற்ற உயிர்களிடம் வேறுபடுத்திக்கொள்ள தன் மேல்  எண்ணங்கள் என்ற பல்வேறுவிதமான ஆடை அணிகளை அணிந்துகொள்கிறது.  உண்ணும்போதும் உறங்கும்போதும் உறவுகொள்ளும்போதும் அது தன் ஆடை அணிகளை களைந்துகொள்ளும்.
தம் அக ஆடைகளை அகற்றிக்கொண்டு வெற்று உயிர்களாக ஆகாமல் ஆணும் பெண்ணும் உறவு கொள்ள முடியாது.

  ஆண் பெண் உறவில் சுவாரஸ்யமான பகுதி ஆணும் பெண்ணும் தம் தம் துணையை கவரும் விதம்  அகஆடைகளை அணிந்துகொள்வதும் பின்னர் அவற்றை  அகற்றிக்கொள்வதும். அதன் பின் உடல்கள் கூடுவது சலிப்பூட்டும் ஒரு நிகழ்வாகும். எதிர் பாலினத்தவரின் அக ஆடைகளை ஒவ்வொன்றாய் கழற்றி அகற்றிய பின்னரே ஒருவரை புணரவேண்டியுள்ளது. அவ்வாறில்லாதபோது அது வல்லுறவாக தாழ்ச்சியடைகிறது.

       ஜெயமோகன் ஐந்து புணர்வுகளுக்கான இந்த அக ஆடைகள் களையும் நாடகத்தை அருமையாக விவரித்துள்ளார்.  திரௌபதி ஐவரை சந்திக்கப்போகும்போதும் அவரவர்கேற்ற ஆடைகளை அணிந்துகொள்கிறாள். தருமன் அணிந்திருப்பது அறிஞன் என்ற ஆடையை, அவள் அவனிடம் அறிவென்ற துகிலுடுத்தி செல்கிறாள். பின்னர் பேசி பேசி தம்தம் துகில் களைந்து  அவர்கள் உறவு கொள்கின்றனர். பீமன் உடுத்தியிருப்பது வன மனிதன், உடல் ஆற்றல் கொண்டவன் என்ற ஆடையை. அவள் அதற்கேற்ப தன் பழைய ஆடையை களைந்து புது ஆடைகளை அணிந்துகொள்ளலே அவள் கங்கையில் நீந்தலும் தீவில் மீன்களை சுட்டு தின்பதும்.
  ஆனால் அர்ச்சுணன் அணிந்திருப்பது காமுகன் என்ற  ஆடையை. அவள் அதற்கேற்ப எந்த ஆடையை அணிந்துகொள்வது என அறியாமல் திகைக்கிறாள். ஒரு பெண்ணாக அவள் அதைப்போன்ற ஆடையை அணிய இயலாது.  அதற்காக அவள் அணிந்துகொள்ளும் ஆடைகளே சினமும் வெறுப்பும். இந்த ஆடைகளை அர்ச்சுணன் அவளை  சிறுமைப்படுத்துவதன்மூலம் களைகிறான்.

தண்டபாணி துரைவேல்