Monday, March 2, 2015

புரியாத புதிரின் நறுமணம்(வெண்முகில் நகரம் அத்தியாயம் பதினாறு)





அன்பு ஜெயமோகன்,
         
வெண்முகில் நகரத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் மறைந்திருக்கும் அகக்காமத்தின் இருவிழிகளை நான் கண்டபடியே இருக்கிறேன். பதினாறாம் அத்தியாயத்திலும் அவ்விழிகளைக் கண்டேன். சூதர்களின் கதையில் தென்பட்ட அவ்விழிகளைத் தங்கள் வாழ்வோடு நகுலனும், திரெளபதியும் பொருத்திப் பார்க்க முயன்றபோது அது அவர்களின் பிடிக்குச் சிக்காமல் நழுவிக் கொண்டே போனதையும் வேடிக்கைபோல் ரசித்தேன்.
         
சுகன்யையைக் குறித்த சூதர்களின் கதை எனக்கு பெண்ணின் ஏழு பருவங்களை ஞாபகமூட்டியது. ’பேதை முதிர்ந்து பெதும்பையென்றாகிய’ என நீங்கள் பெண்ணின் முதல் இருபருவங்களைக் குறிப்பிட்டிருப்பீர்கள். பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை மற்றும் பேரிளம்பெண் என்பவையே பெண்களுக்கான ஏழு பருவங்களாகும். ஒவ்வொரு பருவமும் குறிப்பிட்ட வயதுக்கானவை. ஒன்று முதல் எட்டு வயது வரை பேதை, ஒன்பது முதல் பத்து வரை பெதும்பை,  பதினொன்று முதல் பதினான்கு வரை மங்கை, பதினைந்து முதல் பதினெட்டு வரை மடந்தை, பத்தொன்பது வயது முதல் இருபத்துநான்கு வரை அரிவை, இருபத்தைந்து வயது இருபத்தொன்பது வரை தெரிவை, முப்பது மற்றும் முப்பதுக்கு மேல் பேரிளம்பெண் எனும் பருவக்கணக்கை பெரும்பாலும் நம்மில் பலர் அறிந்திருக்கும் வாய்ப்பு குறைவு. ஆணுக்கும் பெண்களைப்போன்று ஏழு பருவங்கள் இருக்கின்றன. பாலன், மீளி, மறவோன், திறவோன், விடலை, காளை மற்றும் முதுமகன் என்பவையே அவை. வயதுக்கணக்கு பெண்களுக்குரிய பருவங்களைப் போன்றல்லாமல் கொஞ்சம் வித்தியாசப்பட்டிருக்கும். ஒன்று முதல் எட்டு வயது வரை பாலன், எட்டு முதல் பத்து வயது வரை மீளி, பதினொன்று முதல் பதினான்கு வரை மறவோன், பதினைந்து வயது என்பது திறவோன், பதினாறு வயது என்பது விடலை, பதினேழு முதல் முப்பது வயது வரை காளை, முப்பது மற்றும் முப்பதுக்கும் மேல் என்றால் முதுமகன்.

உலா என்றொரு சிற்றிலக்கிய வகை இருக்கிறது. அதன் அடிப்படையை இரண்டாகப் பிரித்திருக்கின்றனர். முன்னெழு நிலை மற்றும் பின்னெழு நிலை. பின்னெழு நிலையில் பாட்டுடைத்தலைவன் உலா வரும்போது ஏழுவகையில் இருக்கும் பருவப்பெண்களும் அவன் மீது காதல் கொள்வது பாடப்பட்டிருக்கும். ஆச்சரியமாக, தமிழின் முதல் உலா இலக்கிய நூல் இறைவனைப் பற்றியதாக இருக்கிறது. சேரமான் பெருமாள் நாயனார் இயற்றிய திருக்கைலாய ஞான உலாவே அது.
         
”கன்னி குலமகளாகும் விந்தைக்கு நிகரானது மலர் கனியாவது மட்டுமே” என்றி நீங்கள் எப்படி எழுதினீர்களோ தெரியாது. கன்னியாக இருக்கும்வரை பெண்கள் மலர்கள்தான். மலர்கள் என்றதுமே நமக்கு நினைவுக்கு வருவது நறுமணமே. நறுமணம் இல்லாத மலர்களை நாம் மலர்களாக ஒப்புக்கொள்வதும் இல்லை. அதுபோன்றே கன்னிகளிடம் ஒருவித நறுமணம் கமழ்ந்தபடியே இருக்கிறது. அந்நறுமணத்திலேயே ஆண்மனம் பித்தாகி அலைகிறது. கன்னியே குலமகளான பின்பு கொஞ்சம் கொஞ்சமாகக் கனியாகிப் போகிறாள். மலராக இருக்கும்போதிருந்த நறுமணம் இப்போது அவளை விட்டு நீங்கத் துவங்குகிறது. பேரிளம்பெண் பருவத்தைத் தொட்டுவிட்ட பெண் கிட்டத்தட்ட கனியாகும் தறுவாயில் இருக்கிறாள். அதனால் ஆண்மனமும் சமநிலைக்குத்திரும்பி விடுகிறது. பேரிளம்பெண்களை விரும்பும் ஆண்மனம் அதற்கு முந்தைய பருவப் பெண்களால் உதாசீனப்படுத்தப்பட்டதாகவே இருக்கும்.
         
சுகன்யை இன்னும் அரிவை உள்ளிட்ட பருவங்களையே கடக்காதவள். மேலும், சூழல் காரணமாக முதிய முனிவரைத் திருமணம் செய்து கொண்டமையால் அவளிடம் கமழும் நறுமணம் எவ்வித மாற்றமும் இல்லாமல் அப்படியே இருந்தது. அந்நறுமணத்தாலேயே அஸ்வினிதேவர்களும் அலைக்கழிக்கப்பட்டனர். அதன்பொருட்டே அவளை அடையவும் முயற்சிக்கின்றனர். தன் கணவனான முனிவரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அஸ்வினி தேவர்களின் வேண்டுகோளை ஏற்கிறாள். ஆற்றுநீரிலிருந்து வெளிப்படும் மூவரில் சியவனனை எப்படி சரியாகக் கண்டுகொண்டாள் என்பது புரியாத புதிராக்வே இருக்கிறது. பெண்களின் அகம் என்பது எப்போதும் புரியாத புதிர்தானோ?
         
சுகன்யை சியவனனை எப்படி கண்டுகொண்டாள் என நகுலன் கேட்க, திரெளபதி நழுவியபடியே இருக்கிறாள். நகுலன் விடாமல் கேட்டுக்கொண்டே இருக்கிறான். திரெளபதியும் நழுவிக்கொண்டே இருக்கிறாள். நாங்கள் புரவித்தோற்றம் பெற்று அங்கிருந்து நகர்வதே நல்லது என முடிவுசெய்தோம். புரியாத புதிரின் நறுமணத்தை ஞாபகமூட்டியபடியே நிறைவடைந்திருந்த அவ்வத்தியாயத்திலிருந்து வெளியே வந்தோம்.

முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.