அன்புள்ள ஜெமோ
வெண்முரசின் அத்தியாயங்கள்
நீளும்போதெல்லாம் எவ்வளவுநாளாகிவிட்டது என்று தோன்றுகிறது. முதற்கனல் வாசிக்க ஆரம்பித்தது
ரொம்பநாள் முன்னால். கதைகள் எல்லாம் மிகவும் பின்னால் கிடக்கின்றன. இதுக்குள்ளாகவே
மூன்றாம் தலைமுறை வந்துவிட்டது இல்லையா? ஆனால் சட்டென்று கதை ஒரு வட்டம் அடித்து பழைய
கதையைப்போய் தொட்டுவிடுகிறது. அப்போது இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்தது போலவும் தோன்றுகிறது.
பீஷ்மருக்குக்
கல்விகற்பிக்க வந்த தீர்க்கசியாமர் அதேபெயரில் இன்னொரு சிறுவனாக வந்து நிற்கிறார்.
ஆச்சரியம்தான். நினைவுகள் உடனே பாய்ந்து அந்த
இடத்தையெல்லாம் தொட்டுவிட்டன. எவ்வளவு கதைகள். ஆனாலும் தீர்க்கசியாமரையும் அவர் பாடிய
கதைகளையும் அவரது சாவையும் மறக்க முடியவில்லை.
அதேபோல மனதை பழையகதைகளை
நோக்கிக்கொண்டு செல்வது அவ்வபோது இதேபோல வந்துகொண்டிருக்கும் ஸ்தானகர். விசித்திரவீரியனை
நினைத்துக்கொண்டு இப்போதும் அதே குளத்தின்கரையில் அமர்ந்திருக்கிறார். கதை நகரவேயில்லை
காலமும் நகரவேயில்லை என்ற எண்ணம் வந்துவிட்டது.
இந்தமாயம்தான்
வெண்முரசின் மிகப்பெரிய அழகு. வெண்முரசு நமக்கெல்லாம் அளிக்கும் முக்கியமான தரிசனமும்
இதுதான். ஒன்றுமே நடக்காமல் எல்லாமே நடப்பதுபோல தோன்றிக்கொண்டே இருப்பது. இதுதான் வாழ்க்கை
என்ற எண்ணம் வருகிறது
சிவகுமார்