Saturday, December 23, 2017

போரில் உயிர் துறந்தவன் செல்லும் பொன்னுலகு (குருதிச் சாரல் -2).


       

மனித சமூகத்தில் உள்ள பெருங் குற்றங்களில் தலையானது மனித உயிர்க்கொலைமற்ற குற்றங்களை சரிசெய்துகொள்ள அல்லது அதற்கு தகுந்த ஈடு செய்துகொள்ள ஓரளவுக்கு வழி இருக்கிறது. ஆனால் இத்தகைய வாய்ப்புகள் உயிர்க்கொலையில் இருப்பதில்லைஒவ்வொருவனுக்கும் மிக முக்கியமான பிறவிக்கடன் உயிர்வாழ்தல். அதுவே எல்லா உயிர்க்கும் பொதுவானதுஇயல்பானதுமற்ற கடமைகள் எல்லாம்   அவன் மேல் மனித சமூகம்  உருவாக்கி திணிக்கப்பட்டிருப்பதுஒருவன் உயிர்வாழ்வதை முறிப்பது என்பது அவன் பிறப்பை, அவன் வாழ்தலை அவமதிப்பதாகும்அது அவனுக்கு மட்டுமல்லாமல் அவன் பெற்றோர் உற்றோர் உறவுகள் மற்றும் அவன் சார்ந்த சமூகம் அனைத்துக்குமான ஈடு செய்யமுடியாத இழப்பு ஆகும்இதுவரை அவன் பிறப்பு வாழ்வு அவன் இருப்புக்கென  செலவிடப்பட்டவை அவனுக்காக பிறர் ஆற்றிய பணிகள் எல்லாம்  வீண் என ஆகின்றனஒரு உயிர் மறைவது ஒரு தனிப்பட்ட இழப்பல்ல. ஒவ்வொரு மனிதரையும் ஒரு  இழைஎன்று கொண்டு  இச்சமூகம்  நெய்யப்பட்டுள்ளதுஆகவே ஒருவனின்  இறப்பு அச்சமூகத்திற்கு ஒரு ஒட்டுமொத்தமான பாதிப்பை அளிக்கக் கூடியது.   ஆகவே உயிர்க்கொலை எக்காரணம் கொண்டு தவிக்கப்படவேண்டியதாக நாம் காண்கிறோம்.
   
பல்வேறு காரணங்களின் காரணமாகவோ பல்வேறு நோக்கங்களின் காரணமாக போர்கள் நடை பெற்றாலும் அவை  முதலில் ஏற்படுத்தும்  விளைவு உயிர்கொலைகளேஇப்படிக் கொல்லப்பட்ட  பலரின் உடல்கள் மேல் நின்றே வெற்றியும் உடன்பாடும் எட்டப்படுகின்றன.        மனித சமூகம் உருவாகிய காலத்திருந்தே   தொடர்ச்சியாகப் போர்கள் நடைபெற்றுவருகின்றன.   மனிதன் பண்பாட்டில் பல மேன்மைகளைப் பெற்றபின்னும்   போர்கள் ஏற்படாமல் போவதை இதுவரை உறுதிசெய்யப்படவில்லைபோர் என்பது முழுமையாக தவிர்க்க முடியாதவையாக இப்போதும் உள்ளனபோரில் நிகழும் உயிர்க்கொலைகள் தவறென ஆகாது  போகுமா? அப்போரில் இறந்தவர்கள் இறப்பு பெருமைக்குரியதா. அப்படி போரில் ஒருவர்  இறப்பது ஒரு நல்லிறப்பாகுமா? அவர் இறப்புக்கு பின் நல்லுலகங்களை அடைவார்களா? போன்ற கேள்விகள் இயல்பாக எழுகின்றன.    வெண்முரசு  இந்த கேள்விக்கான பதில்களை குரு சக்ரர் விவாதத்தின் வழியாக ஆராய்ந்தளிக்கிறது

     
 குரு போரில் இறந்த அனைவரையும் விண்ணுலகு அனுப்புவதற்கான  யாகத்தை  நடத்துகிறார்அப்படி அவர்கள் விண்ணுலகு போவதற்கான தகுதி இருக்கிறதா என சக்ரர் வினவுகிறார். ஏனென்றால் விண்ணுலகு செல்வதற்கான நிலையை அடைவது அவ்வளவு எளிதல்ல.  

சக்ரரின் வினா:   

விண்ணுலகம் ஏகுவதற்கு தொல்மரபு பல நெறிகளை அமைத்துள்ளது என அறிந்திருப்பீர். வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர், இங்குற்றதில் நிறைவுகொண்டு உடலுதறி எழுந்தவர், வேதப்பொருளுணர்ந்தவர், சொல்நிறைந்த கவிஞர், ஐந்தடக்கி அகம் முதிர்ந்த முனிவர் ஆகிய ஐவரே விண்ணுக்குச் செல்லவேண்டியவர்கள். எவருக்காகவோ எதற்காகவோ இங்கு படைக்கலம்கொண்டு வந்து பிறரைக் கொல்ல முற்பட்டு கொல்லப்பட்டவரும் அவர்களுக்கு நிகராக விண்ணேகுவார் என்றால் ஐவகைத் தவத்துக்கும் என்ன பொருள்?” என்றார் சக்ரர்.
 
குருவின் பதில்:   

 சக்ரரே, அந்த ஐவகைத் தவங்களும் நெறிபுழங்கும் நாட்டில் மட்டுமே நிகழமுடியும். நெறி காக்க வாளில்லையேல் அது காடென்றே அமையும். எனவே ஐவகைத் தவத்திற்கும் நிகரானது வாள்கொண்டு களம்புகுந்து மடிதல். ஐவகைத் தவத்தார் பண்புகளை, உறவுகளை, அன்னத்தை, சொல்லை, விழைவுகளை தங்கள் வேள்வியில் அவியாக்குகிறார்கள். வீரன் தன்னையே அவிப்பொருளென்று அளிக்கிறான். அந்தக் கொடையினூடாகவே அவன் தூய்மையடைகிறான்என்றார் குரு.


ஆம் போர் என்பதை ஒரு வேள்வியாகக்கொண்டால் அதில் இடப்படும் அவிப்பொருள்களாக வீரர்கள் ஆகிறார்கள்வேள்வித்தீயில் இடப்படும் அவிப்பொருள் தம் குற்றங்களையெல்லாம் வேள்வித் தீயில் நீங்கப்பெற்று  தேவர்களுக்குரிய அவிப்பொருளாக ஆகின்றனஅதைப்போன்றே வீரர்களின் குறைகளெல்லாம் அகன்று அவர்கள்  தேவருலகை அடைவார்கள்.   


அப்படியென்றால் போரில் சொல்லப்படுவதையே முக்திக்கான வழி என்று வைக்கப்படலாம அல்லவாகடும் தவம் இயற்றலும் உலகைத் துறத்தாலும் நூல்கள்  பல கற்று ஞானம் தேர்தலும் ஏன் செய்ய வேண்டும் என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. ஏனென்றால போர்க்களத்தில் விழுவதற்கும் முன் விழைவுகளுக்கும் வஞ்சங்களுக்கும் ஆட்படும் எளிய மனிதனாக இருந்தவன் அவன். போரில் கொல்லப்படுதல் ஒன்றே அவனுக்கு மீட்பளைக்க முடியுமா என்று சக்ரர் கேட்பது சரியென்றே தோன்றுகிறது. அது சக்ரரின் இரண்டாவது கேள்வியாக முன் வைக்கப்படுகிறது.

சக்ரரின்  கேள்வி:

 வெறும் உலகவிருப்பால், வஞ்சத்தால் களம்பட்டவன் விண்ணுலகம் எய்துவானா என்ன? அவனுக்கு அவை மீட்பளிக்குமென்றால் விழைவும் வஞ்சமும் மெய்மை வழிகளென்றாகுமா? அவற்றைப் பேணுவது வேள்வியென்றும் தவமென்றும் பொருள்படுமா?” என்றார். குரு திகைத்து நின்றுவிட்டார். “சொல்லுங்கள், இப்புவியின் மாயைகளில் உயிரெல்லை வரை உழல்வதா அவ்வுலகில் சென்றமைவதற்கான வழி?” என்றார் சக்ரர்.
குருவின் பதில்:

 “இந்திரவழிபாட்டாளரே, போருக்கு எழுபவன் அதற்கு முந்தைய கணத்திலேயே அனைத்தையும் துறந்துவிடுகிறான். எதன்பொருட்டு அவன் போருக்குக் கிளம்புகிறானோ அதையும் அகற்றிவைத்த பின்னரே அவன் படைக்கலம் எடுக்கிறான். இவ்வுலகில் உள்ள எது உயிருக்கு நிகராகும்? உயிரை வைத்தாடுபவன் இவ்வுலகிலுள்ள எதையேனும் உள்ளூர பொருட்டெனக் கொள்வானா என்ன? எனவே போர் என்பது துறவேயாகும்என்றார். “சார்வாகரே, போருக்குக் கிளம்புவது வரைக்குமே வஞ்சமும் வன்மமும் மானுடரை ஆள்கிறது. களம்நிகழத் தொடங்கிய பின்னர் அவர்கள் முற்றிலும் தங்களை இழக்கிறார்கள். படைக்கலங்கள் அவர்களை கையில் ஏந்திக்கொள்கின்றன. போர்நின்ற எவரும் அறிவதொன்றுண்டு, போர் என்பது மானுடர் ஒருவரோடொருவர் மோதுவதல்ல. பல்லாயிரம் கைகளும் கால்களும் தலைகளும் விழிகளும் கொண்ட பேருருவம் ஒன்றின் களித்தாண்டவம் மட்டும்தான் அது. ஊழ்கத்திலிருக்கும் முனிவரின் உள்ளம்போல் அங்கே சித்தம் குவிந்திருக்கிறது. களியாடும் இளமைந்தர்போல உள்ளம் உவகைகொண்டாடுகிறதுஎன்றார் 

குரு.

ஒருவன் ஞானமடைய என்னவெல்லாம் செய்தான் என்பதும் அதற்கு எவ்வளவு நாள் முயன்றான் என்பதும், எவ்வழியில் அதை ஈட்டினான் என்பதும்  முக்கியமல்ல. அவன் இறுதியில் ஞானமென எதைப் பெற்றான் என்பதே முக்கியமானதுபோரில்  தன் உயிரைப் பணயம் வைத்து நிற்பவன் முற்றும்  துறந்தவன் என ஆகிறான். ஏனென்றால் அனைத்தையும் துறந்தபிறகே ஒருவன்  தன் உயிரைத் துறக்கத் துணிய முடியும்.   தான் என்ற இருப்பை மறந்து அந்தப் போர்வெளியில் தன்னை கரைத்துக்கொள்வதுஒருவன் பிரம்மத்தில் தன்னை கரைத்துக்கொள்வதற்கு நிகராகிறது  என்ற குருவின் பதில் இங்கு மிகவும் பொருத்தமாக அமைகிறது.  
  
அடுத்து போரில் கொலை நிகழ்கிறது. ஒவ்வொரு வீரனும் எதிரிவீரர்களை   கொலைபுரியும் எண்ணத்துடனேயே போரில் ஈடுபடுகிறார்கள். இப்படி கொல்லுதல் எப்படி சரியாகும் கொல்லாமை அல்லவா அனைவராலும் போற்றப்படுகிறது என்பது சக்ரரின் அடுத்த கேள்வியாக அமைகிறது.
சக்ரரின் கேள்வி:  

அரசே, கொலைவன்மையா கொல்லாமையா எது வானோர்க்கு உகந்தது? அதைமட்டும் சொல்லிவிட்டு மேலே செல்க!” என்றார்
குருவின் பதில்

சக்ரரே, கொல்லாமையே அறங்களில் முதன்மையானதுஎன்றார் குரு. “ஆனால் கொலைவல்லமையை ஈட்டியவனே கொல்லாமையை தான்கொள்ள முடியும். அஞ்சி அமைவது கொல்லாமை அல்ல. இரங்கி விலகுவதும் கொல்லாமை அல்ல. கொலையே இவ்வுலகின் இயற்கை என்று முற்றுணர்ந்து ஆம், நான் முரண்படுகிறேன் தெய்வங்களே என்றுரைத்து திரும்பிநின்று படைக்கலம் தாழ்த்துபவனே மெய்யாக கொல்லாமைநோன்பை கடைக்கொள்கிறான். தான் கொல்லப்படினும் படைக்கலமேந்தா நிலையே கொல்லாமையின் உச்சம்.”

கொல்லாமை என்பது இயாலாமையால் மேற்கொள்ளும் செயல் அல்ல என்று குரு  கூறுகிறார்தற்காத்துக்கொள்வதற்காகவும் தமக்கு வேண்டியவையை  ஈட்டிக்கொள்வதன் பொருட்டும் உடலில் பொர்ர்புரியத் தோதான அங்கங்களையும் அதற்கான திறனையும் இயற்கை அனைத்து உயிர்களுக்கும் கொடுத்திருக்கிறதுஆகவே ஏதோ  ஒரு காரணத்தின் பொருட்டு மற்றவரை துன்புறுத்தும்  எண்ணம் ஒருவனுக்கு தோன்றுவது இயற்கைக்கு முரணானது அல்ல. ஆனாலும் இயல்பாக தோன்றும் அந்த வன்முறை உணர்வை அடக்கிக்கொண்டு  மனதிலும் செயலிலும் வன்முறையைக் கைக்கொள்ளாது இருப்பவனே பெரு வீரன். அவன் பின்பற்றுவதே கொல்லாமை என்கிறார்.  
   
அறிக, கொலைவன்மைகொண்ட வாள்களால் காக்கப்படும் நாட்டிலேயே கொல்லாமை திகழமுடியும். எனவே மண்காக்கவும் நெறிநாட்டவும் கொலைத்தொழில் செய்பவர்கள் கொல்லாமையைப் பேணும் அறம்கொண்டவர்களேஎன்றார் குரு

இனிய மென்மையான சுவை  நிறைந்த  பலாச்சுளைகளைக் காத்து நிற்கும் மேல்தோல் அந்தச் சுளைகளுக்கு மாறான   கரடு முரடான, சுவையற்ற உண்ணுவதற்கு இயலாத ஒன்றாகும். செடிகளில் நறுமலர்களை காத்து நிற்க முட்கள் தேவைப்படுகிறது. அது இயற்கையின் வழியாகும்மனித சமூகம் தன்னைக்  காத்துக்கொள்வதற்காக கொண்டிருக்கும் அமைப்பின் செயல்பாடுகள் வன்முறையாலானவையாக இருப்பது தேவையாக இருக்கிறதுஆகவே அதன் பொருட்டு வன்முறையைக் கையாள்பவர்களுக்கு அது அவர்கள் கடமையென்றாகிறதுஅவர்கள் வஞ்சத்தின் பொருட்டோ அல்லது விழைவுகளின் பொருட்டோ அந்த வன்முறையைக் கைக்கொள்ளாதவரை  அவர்களுக்கு அந்த செயல்களுக்கான பொறுப்பு சேர்வதில்லைசமூகத்தின் நலமும் அமைதியும் போர்முறை  என்ற இந்த முள் வேலியால்   காக்கப்பட்டு வருகிறதுஅந்த முள்வேலி தாம் சேர்ந்திருக்கும் குழுவிற்காக பின்னர் தன்  இனத்திற்காக பிறகு  நாட்டிற்காக அடுத்து மனித சமூகம் முழுமைக்காக இறுதியாக  புவியின் உயிர்க்குலம் முழுமைக்காக என விரிந்து விரிந்து செல்வதே பண்பாட்டின் வளர்ச்சியாகும்.   இந்த முள்வேலி  நம் கண்ணுக்கு எட்டாத தொலைவிற்கு அப்பால் இருக்கும்படி ஆவதே பண்பாட்டின் உச்சமாக இருக்கும். அதுவே மனித சமூகத்தின் பண்பாட்டின் இறுதி இலக்காக இருக்கிறதுஆனால் அந்த இலக்கை அடையும் வரை நமக்கு அந்த முள்வேலி  நமக்கு அருகிலிலேயே நாட்டிற்கு ராணுவம் என்றும், சமூகத்திற்கு காவலர் அமைப்பு  என்றும்  தேவைப்படுகிறது.   
  

ஒரு அறச்செயலை  தெரிந்து அரும்பாடுபட்டு செய்வதும்  ஒருவன் அதே செயலை அது அறச்செயல் என எதுவும் அறியாமல் கட்டாயத்தின் பேரிலோ அல்லது எதைச் செய்கிறோம் என்பதை  அறியாமலேயே செய்வதும் ஒன்றாகுமாஅறியாமல் செய்பவன் அடைவது அதே பலனையா என்று கேட்கிறார். போர்வீரர்கள் சிலர் தமக்கு வேறு வேலை கிடைக்காததால் தம் குடும்பத்தின் வருவாய்க்காக போர்ப்படையில் சேர்கிறார் என்றால் அவரை எப்படி சிறந்தவராகக் கருதமுடியும் என்று  சக்ரர் வினவுகிறார்


சக்ரரின் கேள்வி


மீண்டு சென்று மூன்றாம்நாள் வந்த சக்ரர் கேட்டார்செயலா அதன் பின்னுள்ள புரிதலா, எது மீட்பளிக்கிறது?” திகைத்து நின்ற குருவை நோக்கி சக்ரர் மேலும் கேட்டார்சொல்க, இப்படைவீரர்களில் எவருக்கு தாங்கள் செய்வதென்ன என்று தெரியும்?”   குருபெரும்பாலானவர்கள் அரச ஆணைப்படி படைக்கலமேந்தி வந்தவர்களேஎன்றார். “ஆம், அவர்கள் கூலிபெற்று போருக்கெழுந்தவர்கள். அக்கூலியே அவர்கள் ஈட்டுவதென்பதனால் விண்ணுலகு அவர்களுக்குரியதல்ல. ஒன்றுக்கு இரண்டு விலை இல்லைஎன்றார் சக்ரர். “சொல்க, அறியாதுசெய்வதும் அப்பயன் அளிக்குமென்றால் அவியளித்து வேள்விநிகழ்த்த வேதம் எதற்கு? சுட்ட ஊனில் எஞ்சிய நெய்யை தீயிலிடும் காட்டாளருக்கும் அமையுமா வேள்விப்பயன்?”
இது மிகவும் கடினமான கேள்வி என்றே தோன்றுகிறதுநோக்கம் அல்லவா செயலின் பலனுக்கான சிறப்பை தீர்மாணிக்கிறதுகுரு அறிஞர்களிடம் விடை தேடும்போது அவருக்கு சக்ரர் சொல்வது சரியென்றே கூறுகிறார்கள்
வைதிகரையும் அறிஞரையும் கவிஞரையும் அழைத்து சொல்லுசாவினார். “ஆம், அவியால் அல்ல வேதத்தாலேயே வேள்வி நிகழ்கிறது. வேதமோதி அனலூட்டப்படும் மலமும் அவியேஎன்றனர் வைதிகர். “ஓதும் சொல் தன் பொருளாலேயே அறிவென்றாகிறதுஎன்றனர் அறிஞர். “பதர் விதைத்துக் கொய்வதெங்கனம்?” என்றனர் உழவர். “வெற்றூழ்கம் தவமென்றால் வெயில்காயும் விலங்குகள் அனைத்தும் விண்ணேகவேண்டுமே?” என்றார்கள் முனிவர்கள்.


அதற்கு அவருக்கான விடையை அவருடைய அன்னை தருகிறார்

அரண்மனைக்குச் சென்று முதிய அன்னையின் காலடியில் அமர்ந்தார். அவளுக்கு பணிவிடை செய்தார். சிறுகுழவி என அவளுடன் விரல்தொட்டு விளையாடினார். “வேள்விக்கு ஏன் நீங்கள் வரவில்லை, அன்னையே?” என்றார் குரு. “நான் ஏன் வேள்வி செய்யவேண்டும்? உன்னை ஈன்றதனாலேயே வீடு பெற்றேன்என்றாள் மூதரசி. “என்னைப் பெறுவதை எண்ணினீர்களா? என்பொருட்டு எப்படி நீங்கள் பெருமை கொள்ளமுடியும்?” என்றார் குரு. “எண்ணிப் பிள்ளைபெறும் அன்னையருண்டா என்ன? ஆனால் பிள்ளை அடைவதனைத்தையும் அன்னையே அடைகிறாள்என்றாள் பேரரசி.


ஒரு அன்னை  தன் குடும்பத்திற்கு  பணி புரிகிறாள். அதற்கான தனிப்பட்ட பாராட்டு என எதுவும் எதிர்பார்ப்பதில்லைவீட்டில் நடக்கும் பூஜையில் கூட அவள் அதற்கான பணிகளைச் செய்வாளே தவிர அவள் பூஜை தியானம் என்பதில் அதிகம் ஈடுபடுவதில்லை. ஒரு அன்னை அதிகம்  தத்துவங்களை   தேடி படித்துக்கொண்டிருப்பதில்லைஅவள் ஆழ்மனம் அறிந்திருக்கலாம். பூஜை புனஸ்காரங்களை விட ஞானத் தேடல் சிறந்தது. ஞானத்தைவிட தியானத்தில் ஆழ்வது சிறந்தது. ஆனால் அந்தத் தியானத்தை விட செய்யும் செயல்களின் பலன்களில் பற்றற்று இருத்தல்  சிறந்தது. இவ்வாறு  தன் அன்னையிடமிருந்து கடமையாற்றுதலின் சிறப்பை குரு அறிகிறார்


குருவின் பதில்:

     சக்ரரிடம்இந்திரரே, இதோ என் மறுமொழி. மண்ணில் மானுடர் ஆற்றும் எச்செயலுக்கும் அவர்கள் முழுப்பொறுப்பேற்க இயலாது. எனவே எதையும் முழுதுணர்ந்து ஆற்றுவதும் நடவாதது. தன்னை முழுதளித்து, தன்னறத்தை ஆற்றுபவன் அதற்குரிய முழுமையை அடைகிறான். அவன் ஆற்றும் செயலால் பேரழிவும் பெருந்தீங்கும் விளைந்தாலும்கூட அவனுக்கு அப்பழி இல்லை. அது அவனை ஆட்டுவிக்கும் ஊழுக்கே சென்று சேரும்என்றார்.   “இங்கு இறந்த வீரர்கள் தங்கள் கடமையைச் செய்து மடிந்தனர். அவர்கள் அதன் அரசியலையும் அறத்தையும் முழுதறிய ஆற்றலற்றவர்கள். அறிந்த பின்னரே அவர்கள் செயலாற்றவேண்டும் என்றால் இங்கே எதுவும் நிகழாது.” சக்ரர் தலையசைத்தார். “ஆம், அவர்கள் கூலிகொண்டனர். சக்ரரே, காம இன்பத்தின்பொருட்டே உறவாடுகிறார்கள் மானுடர். அதன் விளைவாகப் பெறும் மைந்தரின் பேறுகளை பெற்றோர் அடைவதில்லையா என்ன?”“வாழ்வறங்கள் நான்கும் துறவும் வேள்வியும் கல்வியும் தவமும் வாள்வேலியின்றி வாழாதென்று அறிந்தவர்கள் ஒருபோதும் வீரத்தையும் உயிர்க்கொடையையும் இகழமாட்டார்கள். களம்பட்டவர் விண்ணுலகு செல்லார் என்றால் பிறர் விண்ணுலகு செல்லும் பாதைகள் முழுமையாகவே மூடிவிடும்என்று குரு சொன்னார்.

    ஆகவே ஒருவர் தான் ஆற்றும் செயல் எதுவாக இருந்தாலும் அதன் பலன்களை தியாகம் செய்தல் மூலல் அவன் கர்ம யோகியாகிறார்  அந்தக் கர்ம யோகி செய்யும் செயல்கள், பலன்   கருதாது ஆற்றும் பணி,   எவ்வித பூஜையையும் விட சிறந்தது. எவ்வித ஞான மார்க்கத்திற்கும் ஈடானதுஒரு போரில் உயிரைத் துறக்கும் ஒருவன் அவன் செயலின் பலனைத் துறந்தவனாகிறான்ஆகவே அவனை ஒரு கரும யோகிஎன்றே கருதவேண்டும்.   ஆகவே அவனுக்கு இதுவரை வாழ்வில் எவ்வித ஆன்மீக நோக்கம் இல்லையென்றாலும் அவன் விண்ணுலகு செல்வதற்கான  தகுதியை அடைகிறான்.  

   வெண்முரசின் இவ்விவாதம்  போரில் இதுவரை உயிர் துறந்தவர்க்கெல்லாம் ஒரு  அஞ்சலியென ஆகிறது.    பெரியபாண்டி என்ற காவலர் தன் பணியில் உயிர் துறந்ததை எளிதாக மதிப்பிட்டு பேசுபவர்களுக்கு இது தகுந்த பதிலுரை என ஆகிறது.   அவர்போன்ற காவலரும்எல்லையோரக் காவலிலிருக்கும் இராணுவ வீரர்களும் உயிரிழப்பில் அடையும் பெருஞ்சிறப்பை நாம் காண்பதற்கு  இந்த விவாதம் நம் அகவிழிகளை திறந்து விடுகிறது