Monday, March 9, 2015

வெண்முகில் நகரம்-33-பெருங்கருணை பேராறு.அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மாயையைப்பற்றி குறிப்பிடும்போது “இரண்டடி தூரத்தில்தான் ராமன் இருக்கிறான் நடுவில் சீதை என்னும் மாயை மறைத்துக்கொண்டு இருப்பதால் இலட்சுமணன் என்னும் பக்தனால் பரம்பொருளாகிய ராமனை பார்க்கமுடியவில்லை” என்கிறார்.

மாயைதான் பரம்பொருளை பார்க்கமுடியாமல் தடுக்கின்றது என்பது எத்தனை சரியோ அத்தனை சரி மாயைக்கு அருகில்தான் பரும்பொருள் இருக்கிறது என்பதும். சீதைக்கு அருகில்தானே சீதாராமன்.

துச்சளைப்பாத்திரத்தை இங்கு கொண்டுவந்து நிருத்தியதற்கு முதலில் நன்றி சொல்லிவிடுகின்றேன். துச்சளைப்பாத்திரத்தை கொண்டுவந்து இங்கு வைத்த உடனேயே திரௌபதியின் மற்றொரு ஒளிவடிவம் சுடராழியென தெரிகின்றது. திரௌபதி பெருங்கருணைக்கொண்டவள்.

திரௌபதியை எல்லாவடிவமாகவும் பார்த்தாகிவிட்டது இனியும் பலவடிவடிவங்களில் நீங்கள் செய்வதை பார்க்க நாட்கள் உள்ளன ஆனால் இன்றுதான் அவளின் கருணை வடிவம் வந்து நிற்கின்றது. துச்சலை என்ற கருணைவடிவம் வந்து நிற்கும்போது அதன் ஒளியில் திரௌபதி என்னும் பெரும் கருணைவடிவத் தரிசனம் கிடைக்கின்றது. சிறிய தீபத்தில் பெரிய தெய்வசிலையைப்பார்ப்பதுபோல் இருந்தது.

பெண் எல்லாமாகவும் இருக்கிறாள். அவளின் தாய்மை கருணையில் முழுமைப்பெறுவதைப் பார்க்கையில் மெய் சிலிர்க்கின்றது. துச்சளை என்னும் பெரும் உடல்கொண்ட சிறியபெண்ணின் கருணை பெரும் நதியின் சிறுஅலைபோல இந்த அத்தியாயத்தில் அசைந்து இசைத்து இசைத்து செல்வது அற்புதம்.

கர்ணன், துரியோதனன்,பூரிசிரவஸ்.ஜயத்ரன், கையொடிந்த சல்லியன் அனைவருக்குள்ளும் திரௌபதி என்னும் பெண்மை எழுப்பிய காமத்தின் எழுச்சி போக்கிடம் அற்றுபோகும்போது சினமாக  வெளிப்படுகின்றது. இதை திரௌபதியின் மீது கோபம் என்று துரியோதன் மட்டும் ஒத்துக்கொள்கின்றான் மற்றவர் அனைவரும் வேறு வேறு காரணங்கள் சொன்னாலும் மூலம் ஒன்றுதான், அது திரௌபதியின் மீது எழுந்த காமத்தால் விளைந்த போக்கிடமற்ற சினம். கரையை உடைக்கமுடியாத அலை மீண்டும் நதியையை புரட்டுவதுபோல. 

இந்த சினத்தின் உள்ளீட்டை நுட்பமாக புரிந்துக்கொண்ட துச்சலைப்பாத்திரம் வடிக்கபடும்விதத்தில் அற்புதம். பெண்ணின் மனம் அழம் என்பவர்களும் பெண்ணின் மனதை பெண்ணே அறிவாள் என்றும் கூறுவது இதுதானா?

நீங்களுமா?” என்றாள்பூரிசிரவஸ் அவள் விழிகளை நோக்கி “மெய்சொல்வதென்றால் ஆம்” என்றான்அவள் மீண்டும் சிரித்து “உண்மைசொன்னதற்கு நன்றிஅப்படித்தான் இருக்கவேண்டும்இல்லையேல்இத்தனை சிடுக்குகள் விழுந்திருக்காது” என்றபின் “அவளை சந்திக்கவிழைகிறேன்.

ஆணின் காமம் என்பது அனைத்து ஆண்களுக்கும் ஒன்றுதான் அது எங்கோ உள்ளத்தில் இருக்கிறது. மானிடர் காட்டும் எந்த வரம்புக்குள்ளும் அது இல்லை. பசிபோல அனைத்து மனிதனுக்கும் அது பொது. மன்னன் மானும் மீனும் சாப்பிடுகின்றான். ஏழை கஞ்சியும் கருவாடும் சாப்பிடுகின்றான். காமப்பசிக்கும் அப்படித்தான். கிடைத்தால்  ஒரு கரடி மயிலோடு டூயட் பாடும்.  

திரௌபதி என்னும் தேவவிருந்தை கண்ட அனைத்து அகங்களிலும் எழுந்து பரவி நிற்கும் பெரும்பசியை அனைக்க சினம் என்னும் நெருப்பையே ஏற்கவேண்டி உள்ளது. இதுதான் ஆண்கள் அறிந்த வழி. இதன் மறுமுனைகளை ஆண்களால் அறியமுடியவில்லை. துச்சளை என்னும் பெண்ணால்தான் அறியமுடிகின்றது. முழு அகத்தின் பாதி வடிவம் பெண். பாதி வடிவம் ஆண். ஆண் பாதியாகவே இருக்கின்றான். பெண் பாதியாக இருக்கையிலும் மீதியையும் அறிகின்றாள். 

ஒரு சிறுவிதை பெரும் வனமாவதுபோல கனத்தில் வந்த துச்சலை கருணையின் விதையாகி நின்று திரௌபதியை பெரும்கருணையின் வடிவத்தை எழுதிச்செல்கின்றாள். சிறியகோட்டுக்கு அருகில் உள்ள கோடு பெரிதாகிவிடுவதுபோல துச்சளை பாத்திரம் வந்த உடன் திரௌபதியின் பாத்திரம் பெரிதாகும் அற்பும் கண்டு மகிழ்கின்றேன். சிற்றாறால் உருவாகும் பேராறு. 

”பெண்ணின் பெருந்தக்க யாவுள”  என்று வள்ளுவர் சொல்வது இந்த கருணையையும் சேர்த்துதானா!

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்