அன்புள்ள ஜெமோ
இப்போதுதான் பால்ஹிகர் தன் ‘கல்லறை’யில் இருந்து விழித்து எழுவதை மீண்டும் வாசித்தேன். அவர் மலையுச்சிய்யில் இருந்திருக்கிறார். அங்கிருந்து எப்படியோ மறைந்துபோய்விட்டார். பின்னர் மீண்டும் திரும்பி வருகிறார். இந்த வருகையை எப்படி இவ்வளவு முன்னாடியே யோசித்தீர்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. இத்தனைகாலம் அவர் காணாமலிருந்திருக்கிறார் என்றால் ஒரு விதையைப்போல எங்கோ மண்ணுக்கு அடியில் தான் இருந்திருப்பார் என்று நினைப்பது ஒரேசமயம் குழந்தைக்கதையாகவும் கவிதையாகவும் இருக்கிறது. வேறு எங்கே இருந்தாலும் அவர் திரும்பி வருவதில் இந்த அளவுக்கு கவிதை வந்திருக்காது
அவர் கிட்டத்தட்ட நூறுவருடம் இல்லாமலிருந்திருக்கிறார். மகாபாரதத்திலேயே அவர்தான் மூத்தவர் என நினைக்கிறேன். பீஷ்மருக்கே சித்தப்பா இல்லையா? அவர் இப்படி மாயமாக இருப்பது காலமே இல்லாத ஒரு இடத்தில் என்றால்தான் சரியாக இருக்கும். அவர் இருந்த இடத்திலே அவருடைய உடலுக்குக்கூட வயதாகவில்லை. டிராக்குலா மாதிரி சாகாமலேயே இருந்துகொண்டிருக்கிறார். அங்கே அவருக்கு காலமே இல்லை. இருட்டில் ஒன்றுமே நிகழவில்லை. நூறுவருடம் ஓடியதை அவரது மனசோ உடலோ அறியவில்லை
அவர் மேல் வெளிச்சம் படவில்லை. பட்டதும் அப்படியே தண்ணீர் பட்டது போல விதையாக முளைத்துவிட்டார். பாலைவனத்திலே கோடிக்கணக்கான விதைகள் அப்படி காத்திருக்கின்றன. தேவிகைகூடச் சொல்கிறாளே இது காத்திருப்பதற்கு உகந்த நிலம் என்று
இந்தக்கதைகளில் உள்ள குறியீடுகளின் கவித்துவத்தை வாசித்துக்கொண்டே இருக்கிறேன். முடியவில்லை
செல்வராஜ்