Wednesday, March 4, 2015

மகாபாரதமெனும் புரவியில் ஜெயமோகனெனும் நகுலன்(வெண்முகில் நகரம் அத்தியாயம் பதினைந்து)அன்பு ஜெயமோகன்,
         
உங்களை நகுலனாகவும், மகாபாரதத்தைக் குதிரையாகவும், எங்களைத்  திரெளபதியாகவும் பிரதிபலித்த ஆடியாக பதினைந்தாம் அத்தியாயம் அமைந்திருந்தது. அவனைக் குறித்துப் பேசும்போது அமைதியாய் இருக்கும் நகுலன் குதிரைகளைப் பற்றிய பேச்சு துவங்கியதும், சொற்களைத் திணறடிக்கும்படியாய் பேச்சில் கலந்து கொள்கிறான். குதிரையில்லாவிட்டால் நகுலன் வாழவே மாட்டான் எனும்படியான சித்திரமே அவன் பேச்சில் முன்நிற்கிறது. அப்படித்தான் நீங்களும், மகாபாரதமும் என நான் நினைக்கிறேன். அதனாலேயே உங்களை நகுலனாகவும், மகாபாரதத்தைக் குதிரையாகவும் எளிதில் வரைந்து கொள்ள முடிகிறது.
         
”ஆண்மை என்பது குளம்புகளில் இல்லை. தொடைச்சதைகளில் இல்லை. குதிரையின் உள்ளத்தில் உள்ளது” என நகுலன் சொல்வன். ஆம், மகாபாரதம் எனும் பிரதி தரும் பரவசமென்பது அதைப் புனிதப்படுத்துவதில் இல்லை, மேடைக்கு மேடை பேசுவதில் இல்லை, பாராயணம் செய்வதில் இல்லை. உண்மையாகவே அது தரும் பரவசம் என்பது அதன் ஆழத்தில் தன்னைக் கண்டு திகைப்பவனின் உள்ளத்தில்தான் இருக்கிறது.வேறுவிதமாகச்சொல்வதானால், குதிரையைக் கண்ணுக்குத் தெரியும் புறவடிவமாக மட்டுமே பார்க்கிறோம்; அப்படி அன்று. அதைக் கடந்திருக்கும் நுட்பமான அகவடிவங்களின் தொகுப்பே அதன் உண்மை முகம். அது எப்போதும் ஒரே வடிவில் இருப்பதில்லை. அதை ஒருபோதும் அதில் பயணிக்காமல் நம்மால் உணரவே முடியாது. எவனை அக்குதிரை தன்மேல் பயணிக்க அனுமதிக்கிறதோ அவன் அதன் அகத்தோடு தொடர்பு கொண்டுவிட்டான் எனப்பொருள். மகாபாரதக் குதிரையின் மேல் அதன் அகமறிந்து பயணிக்கும் நகுலனாக தொடர்ந்து இருந்து வருகிறீர்கள்.
         
”நீங்கள் எதுவாக காட்டிக்கொள்ள விரும்புகிறீர்களோ அதை அணியுங்கள். அது இடைவெளியில்லாமல் உங்களை அறிவித்துக் கொண்டே இருக்கும்”  எனும் மிருஷையின் கூற்று புறத்தைக் குறிப்பிடுவதாகக் கருதவில்லை. அது அகத்தைச் சுட்டி நிற்பதாகவே நான் கருதுகிறேன். நகுலனான நீங்கள் உங்களுக்குள் வெண்முரசை அணிந்திருக்கிற தோற்றம் உள்ளுக்குள் மின்னி மறைந்தது. உங்களை அது நிச்சயம் அறிவித்துக் கொண்டே இருக்கும்.வெண்முரசை எச்சூழலிலும் நீங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்க வேண்டும். ஏனென்றால், அது இப்போது உங்களின் தனித்துவ அணிகலனாகி விட்டது.”நெளிவின் தேவனாகிய நீர். துடிப்பின் தேவனாகிய எரி. ஒளியின் தேவனாகிய சூரியன். மூவரும் உங்களுடன் இருக்கிறார்கள்” எனச் சொல்கிறார் மிருஷை. ”வியாசனின் வரைபடம், உங்கள் பயண அனுபவம், தமிழெனும் ஒளி. மூன்றுமே உங்களிடம் இருக்கின்றன”  என நாங்கள் சிலிர்த்துச் சொல்கிறோம்.
         
”நீர் தன் பாதையைத் தானே வகுக்கும் ஆற்றல் அற்றது என்பார்கள். குதிரையும் அப்படித்தான்” எனும் நகுலனின் வாக்கில் உங்களின் குரல். மகாபாரதக் குதிரையின் மீதேறி அதற்கான பாதையில் செல்ல முயற்சிக்கும் உங்களை நாங்கள் அகத்தில் திரெளபதி போல் தொடர்ந்து வருகிறோம். குதிரையின் மீதான நகுலனின் அகப்பயணமும், நகுலனை அணைத்துத் திரெளபதி பெறும் அகப்பயணமும் வேறுவேறு என்றாலும் அடிப்படைப் பரவசம் ஒன்றாகவே இருக்கிறது.
         
”குதிரை முதலில் தன்னை அவனுக்கு அளிக்கிறது. பின் முழுமையாகப் பணிந்து நின்று விடுகிறது”, “உன்னை என்னுடலுடன் இணைத்துக் கொள்கிறேன். நீ என் உடலாக நான் உன் உடலாக ஆகப்போகிறோம். நான் எளிய கால்கள் கொண்ட மானுடன். நீ மலைக்காற்றுகளைக் குழம்புகளாகக் கொண்டவள். உன் கால்களை எனக்குக் கொடு. என் கண்களை நான் உனக்களிக்கிறேன். நான்கு கால்களும் இரண்டு கைகளும் இரண்டு தலைகளும் கொண்ட வெல்ல முடியாத இவ்விலங்கை தெய்வங்கள் படைக்கவில்லை. ஆனால் தெய்வங்கள் அனைத்தும் விரும்புவது இதைத்தான்” போன்ற நகுலனின் சொற்களுக்கு திரெளபதி மயங்கி நிற்கிறாள். வெண்முரசுவின் நாவல்களில் நீங்கள் தூவும் சொற்களுக்கு நாங்கள் மயங்கியே நிற்கிறோம். எங்களின் மயக்கம் புனித மயக்கமல்ல என்பதையும் அறிந்தே இருக்கிறோம்.
         
”மிகச்சிறந்த புரவியூர்தலுக்குப் பின் மானுடன் ஒருபோதும் இப்புவியில் தன்னைத் தனியனென்று உணர மாட்டான்” என்பது நகுலனின் வரியன்று; உங்களின் அகம். புரவி என்பது மகாபாரதம். ”அது அவனுடன் இணைந்து கொள்கிறது. என்றோ மானுட வரலாற்றில் ஏதோ ஒரு மகத்தான தருணத்தில் நிகழ்ந்த இணைவு அது. ஒவ்வொரு முறை அது நிகழும்போதும் அந்தப் படைப்பு விந்தை மீண்டும் வெளிப்படுகிறது” எனும் வாக்கியத்தின் அசாத்தியப் பரவசத்தில் திரெளபதியான நாங்கள் என்னதான் செய்வது, உங்களைக் கட்டியணைப்பதைத் தவிர?

முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.