Tuesday, March 10, 2015

ஏழன்னையரும் திரௌபதியும்- முருகவேலன்அன்பு ஜெயமோகன்,
         
இருபத்து நான்காம் அத்தியாயத்தில் அறிமுகமான ஏழன்னையின் கற்சிலைகளை இன்றும் ஏழுகன்னிமார்களாக நாம் வணங்கி வருகிறோம். சிறுதெய்வம் எனச்சொல்லப்பட்டு கிராம மக்களால் கொண்டாடப்படும் ஏழுகன்னிமார்களின் மீது சிறுவயதிலிருந்தே எனக்குத் தனிப்பட்ட ஈர்ப்பு உண்டு. நாத்திகக் கருத்துகளால் பெருதெய்வங்களைக் கேலிபேசத் தயங்காத நான் சிறுதெய்வங்களை எப்போதும் கேலி பேசியதில்லை. அப்போது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. இப்போது புரிகிறது. எம் தொல்குடிகளை இன்றளவும் ஞாபகமூட்டிக் கொண்டிருப்பவையாக சிறுதெய்வங்களே இருக்கின்றன. சிறுதெய்வங்களை யார்தடுத்தாலும் நாம் விட்டுக்கொடுத்துவிடக்கூடாது. ஊருக்கு ஊர் கன்னிமார் கதைகள் மாறுபட்டாலும் அதன் அடித்தளத்தில் தாய்தெய்வ வழிபாட்டின் அடிப்படையே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. குலதெய்வங்கள், ஊர்தெய்வங்கள் போன்றவை சிறுதெய்வங்கள் வரிசையில் வருபவையே. எக்காரணத்தை முன்னிட்டும் அத்தெய்வங்களை அதற்கான சடங்குகளை விட்டுக்கொடுத்துவிடவே கூடாது. காலமாற்றத்தில் சடங்குகள் போலியாகிப்போயிருந்தாலும் அவற்றின் உள்ளேதான் அப்பகுதி சார்ந்த மக்களின் கதை ஒளிந்திருக்கிறது. நெருங்கும் ஒருவனை அக்கதையும் நெருங்கி வருகிறது.

பெருந்தெய்வங்களையும் அவற்றைச் சுற்றி வேயப்பட்டிருந்த வைதீகப் புனிதப்பூச்சுகளுக்காகவே வெறுத்தேன் என்பதும் முருக வழிபாட்டுக்கான ஆய்வில் இறங்கியபின் தெளிவாகப் புரிந்தது. ஆத்திக, நாத்திக வடிவங்களுக்குள் சிக்கிக் கொண்டு உழன்று கொண்டிருப்பவர்களால் வழிபாட்டைப் புரிந்து கொள்ளவே முடியாது என் நான் விளங்கிக் கொண்டபோது உச்ச மகிழ்ச்சியில் திளைக்கவும் செய்தேன். ஆத்திகர்களும் நாத்திகர்களும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டுவதிலேயே நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கும் பேரவலத்தில் நல்லவேளை மாட்டிக்கொள்ளவில்லை எனும் நிம்மதியும் வந்தது. கொற்றவையும் முருகனும் சிவனும் திருமாலும் சிறுதெய்வங்களாக இருந்து பெருந்தெய்வங்களாக மாறியவையே என்பதையும் அப்பொழுதில் நான் புரிந்து கொண்டேன். எம் தொல்குடிகளின் கதைகளை அறிந்துகொள்ள விரும்பிய எனக்கு வழிபாடின்றி வேறு கதியில்லை என்பதும் புரிந்தது.

சமீபமாய் முருகன் கோவில்களுக்குச் செல்லும்போது ஏழு கன்னிமார் சிலைகளை நான் நின்று கவனிக்கத்தவறுவதில்லை. நான் பார்த்த வகையில் மருதமலை கன்னிமார் கற்சிலைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. பழனிமலையில் கன்னிமார்களோடு, பதினெட்டாம்படி கருப்பணசாமிகளையும் காணலாம். சாலைப் பயணங்களின்போது பிரம்மாண்டமான கன்னிமார்சிலைகளைக் காணும் வாய்ப்பு கிட்டும். சிறுசிலைகளாய் நான் கண்ட கன்னிமார்களைப் பெருஞ்சிலைகளாகக் காணும்போது எழும் சிறுசிலிர்ப்பை இதுவரை தவிர்க்கவே முடிந்ததில்லை. துவக்கத்தில் சிலைகளாக மட்டுமே காட்சியளித்துக் கொண்டிருந்த கன்னிமார்களை வண்ணங்களாக ஒருகட்டத்தில் நான் கவனிக்கத் தொடங்கினேன். சூரியக்கடவுள் வரும் தேரின் ஏழு குதிரைகளாக, வள்ளலார் குறிப்பிடும் ஏழுதிரைகளாக, ஆறாதாரங்களின் உருவங்களாக அவை எனக்குக் காட்சியளித்த அற்புதம் நிகழ்ந்தது. ஆசீவகம் குறிப்பிடும் ஏழு வண்ணங்கள் கன்னிமார் சிலைகளில் கச்சிதமாகப் பொருந்தி இருந்ததைக் கண்டு விதிர்த்தும்போனேன்.

”ஏழன்னையரும் குங்குமம், மஞ்சள் பொடி, கரிப்பொடி, வெண்சுண்ணப்பொடி, பச்சைத்தழைப்பொடி, நீலநிறப்பாறைப்பொடி, பிங்கல நிறமான மண் ஆகியவற்றால் அணி செய்யப்படிருந்தனர்” எனும் உங்களின் வாக்கியத்திலும் ஏழு நிறங்கள் நேர்த்தியாக அமைந்திருந்த காட்சியில் நான் மெளனமாய் உறைந்திருந்தேன். அடர்கறுப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன்நிறம்(மஞ்சள்), வெள்ளை, நிறங்களற்ற தன்மை எனும் ஏழுநிலைகளைச்சுட்டும் கன்னிமார் சிலைகளில் இயற்கையின் பெரும்பரப்பு சுருட்டி வைக்கப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது. நிறமற்ற இயற்கையை நிறங்களாக்கி வணங்குகிறோம் என்றும் தோன்றியது. கன்னிமார்கள் எனும் சொல்லால்இயற்கையின் என்றுமே இளமையானது எனும் செய்தி
குறிக்கப்படுவதாகவும் நம்புகிறேன்.

நிறமற்ற ஒன்றிலிருந்து கிளைத்த நிறங்களைச் சொல்லும் காட்சியாகவும் அச்சிலைகளைக் கண்டேன்.ஒருவனை அவனை மயக்கும் புறநிறங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு நிறமற்ற உண்மையான அவன் அகத்தன்மைக்குப் பயணிக்கச்செய்யும் ஞானத்தின் படிநிலைகளும் அச்சிலைகளில் இருப்பதாகவும் நான் உணர்ந்தேன்.நிறமற்ற தன்மை என்பதை எல்லா வண்ணங்களுக்கும் அடிப்படையான, எல்லா வண்ணங்களையும் உள்ளடக்கிய பண்பாகவே நாம் கொள்ள வேண்டும். சமீபமாய் உங்கள் படைப்புகளின் தலைப்புகள் வெள்ளை நிறத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பது ஏன் எனச் சமீபமாய் ஒரு வாசகர் வினவி இருந்ததும் இங்கு நினைவுக்கு வருகிறது. நீங்கள் அடர்கறுப்பு, நீலம், பச்சை, சிவப்பு, மஞ்சள் போன்ற நிறங்களின் அலைக்கழிப்பில் இருந்து விடுபட்டு விட்டீர்கள் என்று சொல்லலாமோ?

ஏழு எனும் சொல் இசைக்கும், நிறங்களுக்கும் அடிப்படையாய் இருப்பதையும் நாம் கவனிக்க வேண்டும். ஒலியாக இசையைக் கொண்டால், ஒளியாக நிறத்தைக் கொள்ளலாம். ஒலி, ஒளியின்றேல் பேரண்டங்கள் இல்லை; அண்டங்கள் இல்லை; கதிரவக்குடும்பம் இல்லை; பூமியெனும் கோள் இல்லை; உயிர்கள் இல்லை; நாம் இல்லை; நம்முடைய வாழ்க்கை இல்லை. சமயத்தில் நாதம், விந்து எனச்சொல்வர். ”உருவாய் அருவாய் உளதாய் இலதாய்” எனும் சொல்லாடலில் உருவாய் இசை மற்றும் நிறங்களையும், அருவாய் இசையின்மை மற்றும் நிறமின்மையையும் பொருத்திப்பார்க்கலாம். ஏழு கன்னிமார்களும் ஒலியையும், ஒளியையும் நமக்கான வடிவத்தில் ஞாபகமூட்டி நிற்கின்றனரோ என்றும் சிந்திக்கிறேன்.

முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.