Monday, March 9, 2015

வெண்முரசு தகவல்கள்

அன்புள்ள ஜெ,

வெண்முரசிலிருந்து சேகரிக்கும் தகவல்கள் வெண்முரசு வாசகர்களுக்கு மட்டுமன்றி ஒரு பொதுவான தகவல் தொகுப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். அப்படிபட்ட பொது தகவல் மூலங்களிலிருந்து தான் நீங்களும் பல தகவல்களை திரட்டியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இந்திய மரபு, பக்தி, வரலாறு, நிலங்கள், ஞானம் சார்ந்து பல தகவல்களை தொகுக்கும் போது இந்த நாவலில் எது தகவல்களின் அடிப்படையில் எழுதப்படுகிறது எது கற்பனையால் விரித்து எழுதப்படுகிறது என்பதை தெரிந்து கொள்வது முக்கியமாகிறது. தகவல்களின் அடிப்படையில் இருப்பதை தகவல் தொகுப்பாக எடுத்து வைக்கலாம். அது பொதுவான ஒரு களஞ்சியமாக இருக்கும். கற்பனையில் எழுதப்படுவதை தனியாக ஒரு பட்டியலாக்கலாம் என்று நினைக்கிறேன். இது பற்றி உங்கள் கருத்து என்ன?
ஒரு வாசகனாக எது தகவல் எது கற்பனை என்று பல சமயங்களில் பிரித்து அறியமுடியவில்லை. மேலும் தொகுக்கபடும் இந்த தகவல்களை அவ்வப்போது விஷயம் தெரிந்தவர்கள் சரி பார்ப்பது உதவும் என்று நினைக்கிறேன். அதனால் உங்களுக்கு டாக்குமென்டை பகிர்கிறேன். நேரம் கிடைக்கும் போது பார்வையிடுங்கள்.

பெயர்களை பட்டியலிட்டேன். அவை மட்டும் ஒரு 1500க்கும் மேல், ஐந்து நாவல்களிலேயே, வரும் போலிருக்கிறது. தகவல்கள்களும் ஏராளமாய் இருக்கிறது. இத்தனையும் நீங்கள் எப்படி சேமித்து வைத்திருக்கிறீர்கள்? நீங்களே தொகுத்து வைத்துள்ளீர்கள் என்றால் அதுவே ஒரு தொகுப்பல்லவா? அதை மீண்டும் நாவல்களிலிருந்து பிரித்தெடுக்க தேவையில்லையல்லவா? இது வெண்முரசின் ஆரம்பத்திலிருந்தே என்னிடம் இருக்கும் கேள்வி.

கீழே இருக்கும் சில கேள்விகள் தகவல்களை பிரிக்கும் போது எனக்கு தோன்றுபவை. இதற்கு பதில் கிடைத்தால் அதை மாதிரியாக எடுத்துகொண்டு பிறதை நான் வகைப்படுத்தி கொள்கிறேன். உங்கள் நேரத்தை அதிகம் எடுத்து கொள்ளாமல் இந்த தகவல் திரட்டும் பணியை செய்வதே என் எண்ணம். நேரம் கிடைக்கும் போது பதிலளியுங்கள்.

கீழுள்ளது புராணங்களில் இருக்கும் விளக்கமா? இது போன்றவற்றை தகவல் என்ற வகையில் சேகரிப்பதா?

மகேந்திரனின் ஒளியால் முகமும், அக்கினியால் முக்கண்ணும், யமனின் ஒளியால் கருங்கூந்தலும், விஷ்ணுவின் ஒளியால் பதினெட்டு வெண்கரங்களும், இந்திரன் ஒளியால் இடையும், வருணன் ஒளியால் அல்குலும், பிரம்மனின் ஒளியால் மலர்ப்பாதங்களும், சூரியகணங்களின் ஒளியால் கால்விரல்களும், வசுக்களின் ஒளியால் கைவிரல்களும், பிரஜாபதிகளின் ஒளியால் வெண்பற்களும், வாயுவின் ஒளியால் செவிகளும், மன்மதன் ஒளியால் விற்புருவங்களும் கொண்டு தேவி எழுந்தாள்.

இது பழமொழி போலிருக்கிறது. இது புனைவுக்காக எழுதப்பட்டதா? இல்லை இப்படி ஒரு பழமொழி இருந்ததா?

பேணினால் பசு. பேணாவிட்டாலும் எருமை. நீரூற்றினால் தென்னை. அனலூற்றினாலும் பனை. அன்னையும் வழித்துணையும் ஏவலும் காவலுமாகும் எருமை. வீடும் விறகும் பாயும் பையும் அன்னமும் பாலுமாகும் பனை

இது புனைவுக்காக கற்பனையில் எழுதப்பட்டதா?  இல்லை பழைய நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட குறிப்பா?

சங்குவளையும் நெளிவளையும் சக்கரவளையும் கொடிவளையும் மலர்வளையும் மான்விழிவளையும் மணிவளையும் தொடிவளையும் மாற்றி மாற்றி அணிந்து மனம் சலிப்பேன

இதுவும் மேலுள்ள கேள்விகளை போன்றதே. கற்பனையால் எழுதப்பட்டதா இல்லை குறிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டதா?

அவற்றில் புறாக்களும் வண்ணத்துப்பூச்சிகளும் சத்வகுணம்கொண்டவை. ஊனுண்ணும் கழுகுகளும் உதிரமுண்ணும் கொசுவும் ரஜோகுணம் கொண்டவை. மலினமுண்ணும் காகமும் ஈயும் தமோ குணம்கொண்டவை” துரோணர் சொன்னார்

“வந்தமர்தல், எழுந்துசெல்லல், சமன்செய்து அமர்ந்திருத்தல், நேர்படப்பறத்தல், விழுதல், எழுதல், வளைதல், மிதந்துநிற்றல், காற்றில் பாய்தல், வட்டமிடுதல், சிறகு குலைத்து காற்றை எதிர்கொள்ளல், உறவாடல் என்னும் பன்னிரு அசைவுகளால் ஆனது பறவை.

வைதிகர்களுக்கும் பரத்தையருக்கும் வடக்குச்சாலையும் பெருவணிகர்களுக்கும் பெருங்குடித்தலைவர்களுக்கும் இசைச்சூதர்களுக்கும் மேற்குச்சாலையும் பிறருக்கு தெற்குச்சாலையும் ஒதுக்கப்பட்டுள்ளன” என்றான்.

அன்புடன்,
ஹரீஷ்




அன்புள்ள ஹரீஷ்

இது ஒரு சிக்கலான கேள்வி. புனைவிலக்கியம் உருவாகும் விதம் பற்றித்தெரிந்துகொள்வது என்றுமே ஆய்வாளர்களுக்குச் சவாலானது. எது புனைவு எது தகவல் எங்கே தகவல் புனைவாக ஆகிறது என்பது பெரும்பாலும் எழுத்தாளனுக்கே சரியாகத் தெரியாமல் தான் இருக்கும். நேரடியான வெறுந்தகவல் புனைவில் மிகமிகக் குறைவாகவே வரும். ஏனென்றால் அதை அப்படியே பிரதிசெய்து வைப்பது எழுத்தாளனுக்குச் சலிப்பூட்டுவது.

வெண்முரசின் தகவல்களை அப்படி எது பிறநூலில் உள்ளது, எந்த நூலில் உள்ளது என்று பிரித்து நான் எழுதுவதென்பது வெண்முரசு எழுதுவதற்கு நிகரான பெரும்பணி. பல ஆண்டுகளாகும். நான் எப்படி எழுதுகிறேன்? 25 ஆண்டுகளுக்கும் மேலாக வாசித்து நினைவில் குவித்திருக்கும் தகவல்களைத்தான் எழுதுகிறேன். எழுதும் அந்தக் கணத்தில்தான் அவை மூளையிலிருந்து அலையலையாக எழும். சந்தேகமிருந்தால் மட்டுமே அவற்றை சரிபார்த்துக்கொள்வேன்.

இவை சிற்பநூல்கள், சோதிட நூல்கள், புராணங்கள், கலைக்களஞ்சியங்கள், தியாசஃபிகல் சொசைட்டியின் நூல்கள் என பல நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை. இன்றிருக்கும் நிலையில் ஒவ்வொரு தகவலையும் தனித்தனியாக ஆதாரங்கள், பின்னடைவுகள் கொடுக்க என்னால் முடியாது. அது நான் எழுதும் வேகத்தையும் கற்பனையின் தன்னிச்சையான எழுச்சியையும் இல்லாமலாக்கிவிடும். ஆய்வுக்கட்டுரை போல ஆக்கிவிடும்

வெண்முரசின் தகவல்களை தொகுப்பது வெண்முரசை புரிந்துகொள்வதற்காக மட்டுமே. கம்பராமாயணத்தின் தகவல்களை எப்படி தொகுக்கிறீர்களோ அப்படி. அத்தகவல்கள் வேறெந்த நூல்களில் உள்ளன என்பதை தொகுப்பவர்களோ வாசகர்களோ சரிபார்த்துக்கொள்ளவேண்டியதுதான்


உதாரணமாக, தேவியின் கைகள் மற்றும் உறுப்புகள் பற்றிய தகவல்கள் தேவிபுராணத்தில் உள்ளவை. அவை எந்த தெய்வத்திற்குரியவை என்பது என் கற்பனை. ஆனால் சக்திஸ்தவம் போல ஏதேனும் சூத்திரங்களில் இருக்குமோ என்றும் ஐயமாக இருக்கிறது

இரண்டாவது பேணினாலும் பசு என வருவது முழுக்கமுழுக்க என் வரி. அத்தகைய பல்லாயிரம் வரிகள் வெண்முரசில் உள்ளன.

இவ்வாறு எழுதியபின் நானே பட்டியலிடத் தொடங்கினால் அது புனைவுக்கான வசீகரத்தை அழிக்கும். வெண்முரசை வெறும் தகவல் விவாதம் நோக்கிக் கொண்டுசெல்லும்.

இந்தத் தகவல்தொகுதி வெண்முரசைப் புரிந்துகொள்வதற்காகவே அமையவேண்டும். அதற்கு சரியான தலைப்புகளின்கீழ் எளிதில் அவை எடுக்கப்படும் விதத்தில் அமைவது மட்டுமே போதும்


ஜெ