Monday, March 9, 2015

பூரிசிரவஸின் பெண்கள்



அன்புள்ளஜெயமோகன்,

வெண்முகில் நகரத்தை வாசித்து வரும் இந்த நாட்களில் அதை மன அசைவு செய்கையில் எனக்கு ஒரு எண்ணம் வருகிறது. இந்த பூரிசிரவஸ் சந்திக்கும் அத்தனை பெண்களும் பாஞ்சாலியைப் பற்றி வினவுகையில் `பேரழகியா` என்ற வினா நிச்சயம் வந்து செல்கிறது. இதற்க்கு சலிக்காமல் பூரிசிரவஸ் `ஆம்` என்று நேர்மையாக பதில் தந்து செல்வதும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருப்பதாகத் தோன்றியது.

இந்த பிண்ணனியில் இன்றைய அத்தியாயம் படிக்கையில் துச்சளையைக் கண்டு அவள் அழகை மனக்கண்ணில் அளவிடும் வர்ணிக்கும் பூரிசிரவஸின் எண்ணத்தைக் கவனித்ததும், `அட என்னாப்ப இவன்... யார பாத்தாலும் ஒரே மாதிரி ஜொள்ளு விட்றான்` என்ற ரீதியில் மெலிதாக ஒரு எண்ணம் வந்தது. உடனே அதை நீங்கள் புரிந்து கொண்டீரோ என்னவோ அந்த இடத்தில்....
``ஒவ்வொரு பெண்ணின் முன்னாலும் இப்படித்தான் எண்ணங்களில் நிலையழிந்துபோகிறோம் என தன்னைப்பற்றி எண்ணிக்கொண்டதும் புன்னகை செய்தான்.``
இப்படி எனக்கான , ஒவ்வொரு வாசகனுக்கான பதிலையும் சொல்லி அந்த கதாபாத்திரமே வெட்குவதாக காட்டியிருந்தீர்கள்.

அடுத்த சில பத்தியிலேயே நான் ஏற்கனவே மன அசைவிட்டதாக குறிப்பிட்ட அந்த பாஞ்சாலி பேரழிகியா? ஆம்! என்ற சம்பிரதாய கேள்வி வந்தது. உடனே நினைத்தேன் அதற்க்கும் ஏதும் பதில் இருக்குமென. ஆனால் தென்படவில்லை. இங்கு அதற்க்கு பதில் கிடைக்குமோ....

நன்றிகள்.
கமலக்கண்ணன்.