Monday, May 4, 2015

நிலங்களின் கதை

ஜெ,




வெண்முகில்நகரம் முடிந்துவிட்டது என்பதை என்னால் நினைத்தே பார்க்கமுடியவில்லை. ஒவ்வொருநாளும் அதிகாலையில் எழுந்ததுமே ஒரு ப்த்துணர்ச்சியுடன் வெண்முரசு வாசிக்கப்போவது என் வழக்கம். அதிலுள்ள நிலங்களில்தான் நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். ஏனென்றால் எனக்கு அவ்வளவு நிலங்கள் பரிட்சயமில்லை நான் போனதெல்லாம் இந்தியா மட்டும்தான். ஆகவே என்னால் கற்பனையால் போகக்கூடிய ஊர்களில் எல்லாம் வெண்முரசு வழியாகப்போகிறேன்

இந்துவரை வந்த நிலங்களிலே மிகவும் நுட்பமாகவும் விரிவாகவும் இருந்தது இமையமலையடிவாரத்தின் நிலம்தான். பால்ஹிகநாடு இல்லையா? அது இப்போது இருக்கிறதா என்று பார்த்தேன். பாக்கிஸ்தானின் வடபகுதி என்றுநினைக்கிறேன். இல்லாமலிருந்தாலும் அது பாஷை வழியாக இருந்துகொண்டிருக்கிறது. அது போதும். அற்புதமான ஒரு கனவு அந்த நிலம். அங்கே பால்ஹிகர்களின் வாழ்க்கை

நீங்கள் ஒரு நிலத்தை எழுதும்போது அந்த சந்தை, மக்களின் வாழ்க்கைமுறை எல்லாமே எழுதிவிடுகிறீர்கள். பால்ஹிகநாட்டிலே உள்ள மழை புழுதி குளிர் சாணிவாசனை எல்லாமே ஞாபகத்திலே வந்துவிடுகிறது. இனிமேல் ஒரு நிலம் வருவது வரை பழைய அத்தியாயங்களை வாசிக்கவேண்டியதுதான்

எஸ்.ஜெயலட்சுமி.