Monday, April 25, 2016

பேரரசி என்றே பிறக்கும் பெண் (பன்னிரு படைக்களம் 27)


    குந்தியின் பேரரசி என ஆவதற்கான  பெருங்கனவு. இந்தக் கனவை எந்த ஒரு யாதவ வீரனும் கண்டதில்லை. அப்படி கண்டிருந்தாலும் வெறும் பகல் கனவென கற்பனையிலேயே முடிந்திருக்கும். கண்னன் பலராமருக்குகூட இப்படி ஒரு கனவு இல்லை. ஆனால் குந்தி அந்தக் கனவை நிறைவேற்ற இடைவிடாமல் செயலாற்றுகிறாள். அவளுக்கு எத்தனை தடங்கல்கள் இயற்கையாலும் மனிதர்களாலும் ஏற்படுத்தப்படுகிறது. அவள் ஒரு  எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் விதி ஒரு தடையை ஏற்படுத்துகிறது. அவள் அரசன் குந்திபோஜனுக்கு தத்துப்பேண்ணாக போகிறாள். குந்திபோஜனின் மனைவி அவளை முழுமையாக ஏற்கவில்லை. தன் கனவுக்கு சரிவரமாட்டார் என்ற ஒரே காரணத்திற்காக அறிவாளியான விதுரனைத்தவிர்த்து நலம் குன்றிய பாண்டுவை மணம்கொள்கிறாள். ஆனால்  பாண்டு ஆண்மையற்றவனாக இருக்கிறான். ஒருவழியாக அஸ்தினாபுர பேரரசி ஆகிறாள். ஆனால் பாண்டுவுடன் வனம் செல்ல வேண்டியதாகிறது.  ஆனாலும் பாண்டு ஐந்து பிள்ளைகளுக்கு தந்தையென ஆக்குகிறாள். பாண்டுவுக்கு மீண்டும் வாழ்வில் பிடிப்பு ஏற்படுகிறது. ஆனால் அவன் இறந்துவிடுகிறான். கௌரவர்களின் வெறுப்புகளுக்கிடையே அவள் பிள்ளைகளை வல்லவர்களாக  வளர்க்கிறாள்.  ஆனால் அவளுக்கு முழு எதிரியாக சூழ்ச்சித்திறன் வாய்ந்த சகுனி  நிற்கிறான். சாமர்த்தியமாக திருதராஷ்டிரரின் அற உணர்வைத் தூண்டி தருமனுக்கு இளவரசுப் பட்டம் வாங்கித்தருகிறாள்.  ஆனால் வாரணாவத எரிப்பு என்ற பேராபத்து அவர்களுக்கு ஏற்படுகிறது. தப்பிப்பிழைக்கும் அவர்கள் பிள்ளைகளுக்கு அவள் தன் கனவை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறாள்.   தருமனுக்கு தகுந்த  மண உறவின் மூலம் தங்கள் அரசியல் ரீதியான பலத்தை ஏற்படுத்திக்கொள்ள நினைக்கிறாள். அதற்கேற்ப பாஞ்சால அரசனின் மகள் சுயவரத்தில் வெல்லப்படுகிறாள். ஆனால் அவளை பார்த்தன் வெல்கிறான. அவள் பாஞ்சாலியை ஐவருக்கும் மணமுடிப்பதன் மூலம தருமனுக்கும்  மனைவியாக்குகிறாள்.  அதனால் பாஞ்சாலி என்ற உள்ளங்கையில் ஐந்து  விரல்களாக இணைக்கப்பட்டு  ஆற்றல் வாய்ந்த கையாக பாண்டவர்களை ஒருங்கிணைகிறாள். ஆனால் பாண்டவர்கள் அவள் கட்டுப்பாட்டிலிருந்து பாஞ்சாலியின் ஆளுமைக்குள் சென்று விடுகிறார்கள்,  ஆனால் பாஞ்சாலியோ குந்தியின் எண்ணத்தை  முன்னெடுத்துச் செல்பவளாக இருப்பதால். குந்தி அவளிடம் தன் பெருங்கனவாகிய தேரின் கடிவாளத்தைக் கொடுத்துவிட்டு  அமர்ந்திருக்கிறாள். தருமனுக்கு ராஜ சூய வேள்வி செய்வதன்மூலம அவள் கனவு மெய்ப்படப்போகிறது. அவள் எதிர்பார்ப்பின் உச்சம் அது.
 
 
   “ஆம், இன்று அவையில் அச்செய்தியை யுதிஷ்டிரன் அறிவித்தபோது என் வாழ்வின் நிறைவு அணுகுகிறது என்றே உணர்ந்தேன்” என்றாள். “அதன்பின் என்னுள் எண்ணங்களே ஓடவில்லை. பொருளற்ற சொற்களாக பெருகிக்கொண்டிருக்கிறது என் உள்ளம். இளையவளே, என் வாழ்க்கையின்  முதன்மைத்தருணங்களில் ஒன்று இது. நான் மீண்டும் மீண்டும் நாடும் ஒன்று” என்றாள். 
 
 
   ஆனால் இன்றறிந்தேன், இதுவே அது. அன்று தொடங்கிய அப்பயணம் இதோ கனிகிறது.” அவள் பெருமூச்சுவிட்டு “அதன்பொருட்டு எனக்கு இனியவை என நான் எண்ணிய பலவற்றை இழந்திருக்கிறேன். காதலுள்ள துணைவியென்றோ கனிந்த அன்னையென்றோ நான் என்னை உணர்ந்ததில்லை. இக்களத்தில் ஒவ்வொரு கணமும் என் கருக்களை நகர்த்திக்கொண்டே இருந்தேன்” என்றாள்.
 
 
  எந்த ஒரு பேரரசும் ஒரு பெண்ணின்  கனவாக இருந்து உருப்பெற்றிருக்கும்  என்று எனக்குத்தோன்றுகிறது. தன் அன்னையின் கனவையல்லவா ஷத்ரபதி சிவாஜி  நிறைவேற்றுகிறார்.  மற்ற பேரரசுகளின் பின் இருந்துகொண்டு உருவாக்க வித்திட்டல் பெண்களின  பெருங்கனவை நாம் அறியாதிருக்கிறோம்.  இயற்கையிலேயே  பெண் தேனியே ஒருபெரீய பேரரசை நிறுவுகிறது.  பெண்குருவியின் விருப்பத்திற்காகவே கூடுகள் கட்டப்படுகின்றன. பெண்யானைதான் தனக்கென ஒரு கூட்டத்தை கொண்டு அரசாள்கிறது.  
 ஏதோ ஒரு பெண்தான் பேரரசை ஆளும் கனவோடு  பிறக்கிறாள் என்பதில்லை. ஒவ்வொரு பெண்ணும் பிறக்கும்போதே அரசாளும் நோக்கத்தோடு தான் பிறக்கிறார்கள்.  ஆண் பெண் இருவரும் உடலளவில் மட்டும் வேறுபடவில்லை என நாம் அனைவரும் ஒருவாறு அறிந்திருக்கிறோம் ஆண் பெண் இருவர் மனமும் ஏதோ ஒரு புள்ளியில் வேறுபடுகிறது.  ஆணுக்கான தேவைகள் பெண்ணுக்கான தேவைகளைவிட குறைவு.  ஆண் தனக்கென விழையும்  விஷயங்கள் பெண் தனக்கென விழையும் விஷயங்களுடன்  ஒப்பிட்டுப்பார்த்தால் மிக மிகக் குறைவானதாக இருக்கும்.  ஆணின் விழைவுகள் அற்பமானவைகள் எனத் தோன்றும். மற்றவர்களை வெற்றிகொள்ளுதல், தன்னைக் கவரும் பொருளை முடிந்த மட்டும் தனதாக்கிக்கொள்ள விரும்புதல், தம் தேவைக்கான பொருட்களை வேண்டுதல், தன் புலன்களை மகிழ்விக்கும் செயல்களில் ஈடுபடுதல் போன்றவை அவனுக்கு போதுமானது. அவன் அதற்கான செல்வம் ஈட்டினால் போதும் என இருந்துவிடுவான்.  

    ஆனால் ஒரு பெண் வேறுபட்டவள் அவளின் விழைவுகள் ஒரு ஆணை எப்போதும் அச்சப்படுத்துபவை.   சிறு குழந்தையாக இருக்கும் போதே அவள் தமக்கென பொம்மைத் தொகுதியை வைத்துக்கொண்டு அதை பரிபாலிக்கிறாள்.  அப்புறம் தன் வீட்டின் ஒரு பகுதியை தனக்கென கொள்கிறாள். அவளுக்கு தன் முக்கியத்துவத்தை பிறருக்கு உணர்த்தும் வண்ணம் நடந்துகொள்கிறாள்.  தன்னை   அலங்கரித்துக்கொள்வதில் ஆர்வம் காட்டுகிறாள்.  தான் புகழப்படவேண்டும் என எப்போதும் எதிர் பார்க்கிறாள். தன் உள்ளத்தை முழுமையாக அவள் வெளிப்படுத்துவதில்லை. மற்றவர் தன் குறிப்பறிந்து நடந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறாள்.  தன்னை மதிப்பவர்களை மட்டுமே தன் அருகாமையில் வர வரவிடுகிறாள்.  தனக்கு பிடிக்காதவர்களை தன் சொற்களில், உடல்மொழியில், நடவடிக்கைகளின் மூலமாக அவமதிக்கிறாள். தான்கொள்ளும் சீற்றத்தை தயங்காமல் வெளிப்படுத்துகிறாள். இவையெல்லாம் ஒரு அரசியின் குணங்கள் அல்லவா? 

   அவள் தன்னால் முடிந்தவரையில் தன் அரசின் எல்லையை விரிவாக்கிக்கொள்கிறாள்.   கணவன் மற்றும் பிள்ளைகளை காவலாளிகளாகவும் ஏவலாளிகளாகவும் கொண்டு தன் தன் பேரரசை நிர்வகிக்கிறாள். பெற்றோரின் வீடு எப்போதும் தனதகாது என்பதால் அதிலிருந்து வெளியேறி தனக்கென ஒரு அரசைக்கொள்ள காத்திருக்கிறாள். அரசைக் கைப்பற்றும் போர் ஒரு மாமியாருக்கும் மருமகளுக்கும்  பிறர் அறியும்படியும் அறியாமல் மறைமுகமாகவும் நடந்துகொண்டே இருக்கிறது. பின்னர் சமையலறையில் ஆரம்பிக்கும் அவள் அரசாங்கத்தை வாய்ப்புகளுக்கும் சூழலுக்கும் ஏற்ப அதை வீடு முழுமைக்கும் என சீக்கிரம் விரிவாக்கிக்கொள்கிறாள். அந்த அரசை சிறப்பாக்க தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.  கணவனோ பிள்ளைகளோ சோம்பி இருப்பதை அவள் ஏற்பதில்லை. அவர்களை உந்திக்கொண்டே இருக்கிறாள்.  ஒரு குடும்பம் வளர்ந்து ஓங்குவதில் பெண்ணின் ஆளுமையே பெரும்பங்கு வகிக்கிறது.    அரசியலில் தலலைமைக்கு வரும் பெண்கள் சற்றும் எவ்வித கூச்சமுமின்றி ஒரு அரசியென கருதி நடந்துகொள்வதையும் மற்றவர்களை நடத்துவதையும் காணலாம்.  பெண்களின் கட்டுப்படுத்தப்படாத  பிறவிக்குணம் அப்போது வெளிப்படுகிறது. 
 
 
     ஆகவே பெண் எந்நிலையில் இருக்கும் குடும்பத்திலும் அவள் அரசியெனவே பிறக்கிறாள். அவள் இருக்கும் குடும்பத்தில் அவள் அரசியெனவே இருக்கிறாள். தன் வாழ்வை அரசியெனவே வாழ்கிறாள்.  வெளியில் எப்படிச் சொல்லிக்கொண்டாலும், ஆண்கள் தன் வீரம் திறமை சம்பாதிக்கும் பொருள் என அனைத்தையும்   அந்த ராணித்தேனிக்கு சமர்ப்பித்து  அவள் சொன்னதை செய்து, அவள் எண்ணத்தை முடிந்தவரை  நிறைவேற்றி வேலைக்காரத்தேனீகளாகத்தான் வாழ்ந்துவருகிறார்கள்.
 
தண்டபாணி துரைவேல்