\எதை செய்யவேண்டும்?, எதை செய்யக்கூடாது?, செய்வதை எப்படி செய்யவேண்டும்?, எப்படி செய்யக்கூடாது? என்பதை அறிந்து இருப்பவன்தான் தலைவன். தலைவர்களின் தலைவன்.
உடல் வல்லமையோ, படை வல்லமையோ, வஞ்சமோ சூதோ கற்றவர்கள் எல்லாம் தலைவர்கள் அல்ல ஆனால் அவர்கள் தலைவராக இருக்கும் மனிதர்கள் மட்டும்.
தனது மருமகன் கம்சனைக்கொன்றவிதத்தில் கண்ணன்மீது ஜராசந்தனுக்கு பெரும் கொலைவெறி வஞ்சம் உள்ளது. தப்பியோடி வெல்லாதப்போர் செய்த காரணத்திற்காகவே தம்பியை கழுவேற்றியவன் ஜராசந்தன். அவனோடு நட்புக்கொள்ள விழைவோம் என்று கண்ணன் சொல்வது அவன் என்றும் தலைவன் என்பதற்கு அடையாளம். நாளை ஜராசந்தனை கொன்றால் கொலை என்று காட்டாமல் ஊரை நம்பவைக்கும் தந்திரம் இதில் உள்ளது.
”ராஜசுயவேள்வி ” நான் என்ற அகங்காரத்தைக்காட்ட செய்யப்படுவது. அதையும் தனது தலைமைப்பண்மை நிலைநிறுத்த , எந்தவித அகங்காரமும் இல்லாமல் தன்னை அண்டியவர்களின் நலம் தழைக்க,குடித்தழைக்க, குலம் தழைக்க முன்னெடுத்தது. இந்த ஒற்றைச்சொல்லை சொன்னதன் மூலம் விதுரர், கௌரவர், கர்ணன், சகுனி, கணிகன் அனைவரையும் ஒரே அழுத்தில் கீழே வைத்து அழுத்திவிடுகிறான் கண்ணன். இப்படி ஒரு சொல் கண்ணன் வாயில் இருந்து வெளி வரும் என்று யார் அறிந்து இருக்கமுடியும்.
வெண்முரசு வாழ்வின் இக்கட்டுக்கள் அனைத்திலும் ஒளியேற்றி அதன் உண்மையை தரிசிக்க செய்துவிடுகிறது. கண்ணன் இன்று அறிவிக்கும் ராஜசுயவேள்வி என்பதும் பாண்டவர்வாழ்வில் மலரும் ஒரு கனியின் மென்மொட்டு. அதை நற்தருணம் என்னும் கணத்தில் கண்ணன் பொருத்துகிறான்.
ஞானம் என்பதை அனைவரும் ஒரு கருவியாகக் கையாளும்போது கண்ணன் மட்டும் அதை தனது அங்கமாகவே கொண்டு உள்ளான். அவன் பாணியில் சொல்வதென்றால்.
//அவ்வாறு ஆனபின் அது படைக்கருவியே அல்ல. பேசும்போது நாவு வளைவதையெல்லாம் நாம் அறிவதேயில்லை” என்றபடி இளைய யாதவர் அமர்ந்தார்.//
கண்ணன் சக்கரப்படைத்தலைவன் மட்டும் அல்ல ஞானப்படைத்தலைவன்.
தனது இலக்குகளை வீழ்த்த முடியாமல் வருந்தும் அர்ஜுனனை வீழ்த்த தூண்டியது கண்ணனின் சக்கரப்படை அல்ல கண்ணனின் சொல்தான். கண்ணன் மட்டும்போதும் என்று அர்ஜுனன் அறியும் தருணம் இங்கு உதிக்கின்றது.
உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்போது மலர்க்கமலை
துதிக்கின்ற மனி்கொடி மென்கடிக் குங்குமத் தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே.
ராமராஜன் மாணிக்கவேல்.