அதிக மக்கள் தொகைக்கொண்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. வீட்டில் ரோட்டில் கோவில் குளத்தில் திருமணத்தில் அரங்குகளில் அரசியல்கூட்டத்தில் என்று மக்கள் தொகையைப்பார்த்தால் கடலே மக்கள் தொகைதான் கடல் என்று அகராதி எழுதிவிடும்.
இந்த ஆண்டு மேல்மலையனூர் அங்காளம்மன் தேர் திருவிழாக்கூட்டத்தை நாளிதழில் பார்த்து பரவசப்பட்டேன். மேல்மலையனூர் அன்னைக்கு தெப்போற்சவம் தேவை இல்லை, அன்னையவள் தேரில் வரும் காட்சியே மக்கள் வெள்ளத்தில் தேரே தெப்பமாகத்தான் மிதந்து வருகிறது. .
இவ்வளவு மக்கள் தொகைக்கொண்ட திருநாட்டில் இன்னும் மக்கள் தேவையா? என்று ஒரு கேள்வியை எழுப்ப தேவை இல்லை. காரணம் தமிழ் திருநாட்டில் மட்டும் எடுத்துக்கொண்டால் கோயில் குளம் தர்கா சர்ச் என்று மக்கள் பக்தியோடு கூடும் எந்த இடத்திலும் குழந்தைவேண்டும் என்ற வரத்தோடும் கண்ணீரோடும் மடிப்பிச்சைக்கேட்காத ஒருவரைக்காணாமல் நகர்ந்து சென்றுவிடமுடியாது என்பது நூற்றுக்கு நூறு உண்மை. மற்ற மாநிலத்தில் அந்த அந்த புனிதத்தலங்கள் அறியும்.
குழந்தைவரம்வேண்டி ஒவ்வொருவரும் நோற்கும் நோன்புகள் கோயிலுக்கு கோயில் இடத்திற்கு இடம் மாறி மாறி இருந்தாலும் அன்னையரின் கண்ணீர் ஒன்றே என்பதை எங்கும் நிறைந்த மதம் கடந்த இறைவன் அறிகின்றான்.
அன்னை ஜராவின் குழந்தை ஏக்கம் என்பது உலகின் ஒட்டு மொத்த தாய்மார்களின் குழந்தை ஏக்கம். அவளால்தான் குழந்தை வரம் தருமுடியும் என்பது எத்தனை பெரிய உண்மை. அவளால்தான் வரமாதாவாகமுடியும். வரமாதா என்ற சொல் தரும் அதிர்வும் அழுத்தமும் உலக கனத்தை மேல் ஏற்றி வைக்கிறது.
அன்புள்ள ஜெ ஜரா அன்னையின் கதை, குழந்தை வரம் வேண்டும் உலக அன்னையரின் கண்ணீர்கதை. குழந்தை இல்லாதவர்கள் ஏக்கத்தை மலடி என்ற ஒற்றச்சொல்லால் சொல்லி நகர்ந்துவிட முடியாத அனல் எல்லையில் கொண்டு வந்து நிறுத்தி உள்ளீர்கள்.
நான் வாழ்வதற்காக எல்லா தெய்வத்தையும் வேண்டிய என் அன்னை, தானே தெய்வமாகி என்னை வாழ வைத்தார் என்றார் கவிஞர் வாலி.
ஏதோ ஒரு எல்லையில் படுதுயர் படுபவனே, படுதுயர் படுபவர்களின் தெய்வமாகிறான். ஒரு குழந்தைக்காக ஏங்கி ஏங்கி தவமாய் தவமிருந்து மரணம் வரைச்சென்று ஒரு குழந்தையின் தாயாகி அந்த குழந்தையையும் சிம்மத்திற்கு பாதி பலிக்கொடுத்து இறந்த குழந்தையின் எலும்புக்கூடோடு வாழும் அன்னை அல்லவா அன்னைகளின் அன்னை.
துயரம் சிறுமைகள் ஏக்கங்கள் நினைவெச்சங்கள் கொண்ட எளிய மனிதர்கள் தங்கள் விழைவு ஒன்றாலேயே பெரும் தியாக சீலர்கள் ஆகி தெய்வங்கள் ஆகிவிடுகின்றார்கள். அவர்கள் முன் கசக்கும் எட்டிக்கூட தன் கசப்புகளை தள்ளிவைத்து தாய்மை அடைந்து மண்ணிறங்கி வந்துவிடுகின்றது.
துயரம் சிறுமைகள் ஏக்கங்கள் நினைவெச்சங்கள் என்று உழுன்று தவமாய் தவமிருந்து ஒரு குழந்தைக்கு தாய் என்றாகி களிகொள்ளும் அன்னை ஆனந்த கண்ணீரா விடுகின்றாள்? இல்லை அந்த குழந்தையின் காரணமாக துயரம் சிறுமை ஏக்கம் நினைவெச்சங்கள் கொண்டு வாழ்வில் உழன்று கண்ணில் சுடுநீர் வடிக்கின்றாள். தாய்மை அத்தனை மகத்துவமானது. அதுதான் இங்கு எளிமை என்றும் மண்ணில் கிடைக்கிறது.
ஜரா அன்னை தன் மைந்தனை சிம்மதிற்கு பலிக்கொடுக்கும் நிமிடத்தில் நினைக்காமல் இருக்கமுடியவில்லை. விதியின் முன் வாழ்க்கை எத்தனை எளிமையானது.
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.