Wednesday, April 27, 2016

நகலெடுத்தல் (பன்னிரு படைக்களம் 31)



    ஒரு குழந்தை பிறரைப்போல நடிக்க முற்படுவதன் மூலமே கற்றுக்கொள்கிறது. பெரியவர்கள் பேசுவதைப்பார்த்து  அதைப்போல் பேசக் கற்றுக்கொள்கிறது அவர்கள் நடப்பதைப் பார்த்து தானும் தன் சிறு பாதங்களை தரையில் ஊன்றி நடக்க முயல்கிறது.   வளர்கையில் நடனம் இசை அனைத்தும் மற்றவர்களின் செயல்களை திரும்பச்செய்வதின் மூலமே கற்றுக்கொள்கிறது. அதுவரை சரி. ஆனால் யாரோ ஒருவரால் கவரப்பட்டு அவரைப்போலவே தன்னை ஆக்கிக்கொள்ள நினைத்து அவரைப்போல் நடை உடை பாவனைகளை கைகொண்டு நாம் நம்முடைய வாழ்வை வாழாமல் பிறரை நடிப்பது எப்படி சரியாகும்?   
 
  உருவங்களை நகலெடுத்தல்: இளைஞர்கள் ஆடைகள், பாவனைகளில் பிரபல நடிகர்களை நகலெடுக்க முயல்கிறார்கள். பெண்கள் ஏதோ ஒரு பெண்ணுருவை கற்பனை செய்து தன் புருவங்களை திருத்தி, உடலின் வண்ணங்களை மாற்றி, தன் சுருண்ட முடியை நேராக்கி, நேரான முடியை சுருள் முடியாக்கி, உடலை பெருக்க வைத்து, இளைக்க வைத்து என கடவுள் தனக்கு கொடுத்திருக்கும் உடல் வடிவை மறுதலித்து வேறு உடலாக்குகிறார்கள். வர வர பெண்கலின் முக அமைப்பு ஒன்றுபோல ஆகிவருகிறது.  எலும்புகளை மாற்றி வடிவமைக்க இதுவரை எளிய வழியில்லாத ஒரே காரணத்தால் நாம் ஒவ்வொருவரையும் தனித்தனியே அடையாளம் காண முடிகிறது. இல்லையென்றால் ஒரு பொம்மைத் தொழிற்சாலையிலிருந்து வெளிவந்த பதுமைகளைப்போல்  அனைவரின் தோற்றமும் ஒன்றே என ஆகியிருக்கும்.
   ஆளுமையை நகலெடுத்தல்:   நாம் நமக்கென இருக்கும் இயல்பை மாற்றிக்கொண்டு ஏதோ ஒரு  ஆளுமையை நகலெடுப்பதிலும் ஈடுபடுகிறோம்.  பல நல்ல நடிகர்கள் மக்களால் போற்றப்பட்ட அவர்கள் நடித்த கதாபாத்திரத்தின்படி அவர்களுக்கென ஒரு ஆளுமை  உருவாகியபிறகு அந்த ஆளுமையை நகலெடுப்பவர்களாகவே அந்நடிகர்கள் மாறி தன் திறனையெல்லாம் வீணடித்துக்கொண்டதைப் பார்த்திருக்கிறோம்.  நடிப்புத் துறையில் மட்டும்தான் என்றில்லை.  அரசாங்க அதிகாரிகள் விரும்பியும் விரும்பாமலும்  முகத்தை கடுகடுவென்று வைத்துக்கொண்டு யாரோ எப்போதோ கற்பித்து வைத்திருக்கும் ஒரு ஆளுமையை நடித்துக்கொண்டிருக்கிறார்கள்.  ஆசிரியர்கள், மருத்துவர்கள், காவலதிகாரிகள்  எல்லோரும் ஒரு ஆளுமையை நகலெடுப்பவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலானோருக்கு அந்த ஆளுமைக்கேற்ற இயல்பு  இருப்பதில்லை.  ஒரு ஆளுமை என்பது அவர்கள் இயல்பாகக் கொண்டிருக்கும் குணத்தின் காரணமாக, அவர்கள் வளர்ப்பு மற்றும் பண்பாட்டின் காரணமாக ஏற்படுவது.   ஆனால் பெரும்பாலானோர் தம் இயல்புகளுக்கேற்காத ஒரு ஆளுமையை நகலெடுக்க முயல்கிறார்கள்.   அந்த ஆளுமையை ஒரு கவசம்போல் அணிந்துகொண்டிருக்கிறார்கள்.  அந்த பொருத்தமற்ற கவசத்திற்குள்ளே தன்னை அடைத்து வைத்துக்கொள்கிறார்கள். அது தன் இயல்பான குணத்தை அழித்து ஆன்மாவை நசுக்கிவருவதை அவர்கள் உணர்வதேயில்லை. அதன் காரணமாக  பின்னர் பலவித உளவியல் சிக்கலுக்கு அவர்கள் ஆளாகவேண்டி வருகிறது. மேலும் அவர்கள் இப்படி நகலெடுப்பதில் சிலசமயம்  போலித்தனம் வெளிப்பட்டு மற்றவர்களின் நகைப்புக்கு ஆளாகிறார்கள். 
 
 
       பௌண்டரீகன்  இதைப்போல் இளையயாதவரின் ஆளுமையை  நகலெடுக்க முயல்கிறான்.  கிருஷ்ணனின் ஆளுமையை விரும்புவதும் அந்த ஆளுமையே உருவாய் நிற்கும் கிருஷ்ணனை வெறுப்பதுவுமான ஒரு உளவியல் சிக்கலுக்கு ஆளாகிறான்.  தான் அணிய வேண்டிய அங்கியை இன்னொருவன் அணிந்திருப்பதைப்பார்ப்பதில் வரும் பொறாமையிலும் கோபத்திலும் கிருஷ்ணனை பழித்துரைக்கிறான்,  பகைகொள்கிறான். தனக்கு பொருத்தமற்ற  கிருஷ்ணனின் ஆளுமையை சுமந்துகொண்டு தடுமாறி மற்றவரின் ஏளனத்திற்கு ஆளாகிறான்.  கிருஷ்ணனுக்கு இப்படி தன்னைப்போன்ற வடிவமுடைய ஒரு   உலோக கவசத்திற்குள் சிக்கி புழுங்கி  வெளிவரமுடியாமல்  தத்தளித்துக் கொண்டிருக்கும்   பௌண்டரீகன் மேல் இரக்கம் வருகிறது.  அவனுக்கு தன் ஆழியின் மூலம் விடுதலை அளிக்கிறான். 
 
   தன்னை நினைத்து நினைத்து தன்னைப்போலாக  முயன்றவனை தானாகவே காண்கிறானோ கிருஷ்ணன்? அதனால்தான் என்னவோ  பௌண்டரீகன் இறப்பின் நிகழ்வில்  தன் இறப்பைக் கண்டதாக அறிகிறான் போலும். 

தண்டபாணி துரைவேல்