பன்னிரு படைக்களம் 21 ன் முக்கியமான பகுதி கணிகரின் மாற்றங்கள். முதலின் அவரின் வலி மறைவது. இரண்டாவது அவர் காணும் கனவு. இரண்டுமே முக்கியமான உளவியல் நிகழ்வுகள்.
வலி மறைதல்:
முதலில் கணிகர் ஏன் தூய தீமையின் வடிவாக இருக்கிறார்? எனென்றால் அவர் துயில்வதே இல்லை. அவரின் துயிலும், விழிப்பும், வாழ்வும் வலியிலேயே கழிகின்றன. இரு கால்களில் நடக்க வேண்டிய மனிதன் நான்கு கால்களில் நடந்தால் அவன் எதிர்கொள்ளும் உலகு தான் எப்படியிருக்கும்? அவன் பார்வைக்கு எப்போதுமே கீழே இருப்பவை மட்டுமே தானே தெரியும். மற்றொரு வகையில் ஆழங்கள் மட்டுமே தான் தென்படும். ஆழம் என்றால் இருள் தானே. அவன் தன்னை ஒரு தரப்பிலும், இந்த ஒட்டுமொத்த சமூகத்தை, மானுடத் திரளை எதிர்த் தரப்பாகவும் தானே நினைக்க இயலும். இந்த சமூகமும் அவனை அப்படியொரு நிலைக்குத் தானே தள்ளியிருக்கும். அப்படிப்பட்டவனுக்கு இந்த சமூகத்தின் மீதும், உலகின் மீதும் இருப்பது தூய வஞ்சம் மட்டுமே. அவன் விழைவது அதன் அழிவை மட்டுமே.
மேலும் துயில் நீத்த ஒருவனுக்கு கனவுள்ளத்திற்கும், நனவுள்ளத்திற்குமான கோடு மெல்ல மெல்ல அழியத்துவங்கும். ஆழமே மேலோங்கி வரும். எனவே அவர்கள் இருள் நோக்கிகளாக இருப்பார்கள். நான்கு கால்களில் நடக்க வேண்டிய ஒருவர் தன் மேல் பிறரின் இளிவரல் பார்வை விழக்கூடாது என்பதற்காகவே இருளில் இருக்க விழைவார். மேலும் மேலும் இருளைச் சேர்க்கவே விழைவார். கணிகர் அப்படிப்பட்டவரே. இன்று வந்த ஒரு வரி “நினைவுக்கு அப்பாலிருந்த இளமையில்தான் துன்பம் தராத காலையொளியை அவர் கண்டிருந்தார்” அவரின் நிலையத் தெள்ளென விளக்குகிறது. வெகு நாட்களுக்குப் பிறகு துயிலும் கணிகர் மீண்டும் கனவுள்ளத்தை ஆழ அனுப்புகிறார். எனவே நலம் பெறுகிறார்.
இது எவ்வாறு சாத்தியம்? இதுவும் மனம் செய்யும் மாயமே. உண்மையில் மொத்த அஸ்தினபுரியே நோயுற்றிருக்கிறது. தன்னைப் போலவே பிறரும் அவஸ்தைப் படுகிறார்கள், பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதே கணிகரை நிறைவு கொள்ளச் செய்கிறது. மொத்த அஸ்தினபுரி என்பதை விடவும் சகுனி நோயுற்றிருக்கிறார் என்பது அவரை இன்னும் கொஞ்சம் நிறைவு கொள்ளச் செய்கிறது. மெள்ள அவர் மனம் கொண்ட வலி மறைகிறது. வலி என்ற உணர்வு உடலில் தோன்றி மனத்தால் உணரப்பட்டாலும், தொடர்ந்த வலி என்பது மெதுவாக மனதில் சென்று தங்கி விடும். அதன் பிறகு உடலில் அசைவு ஏற்பட்டாலும் ஏற்படாவிட்டாலும் வலி இருந்து கொண்டே தான் இருக்கும். இன்று சகுனி உணர்வதும் அப்படிப்பட்ட ஒரு வலியே. மிகச் சரியாக வெண்முரசு “அதைப்பற்றிய எண்ணமே அதனுள் அசைவாக ஆகி சாட்டையென வலியை சொடுக்கியது. ”, என்கிறது.
சகுனியை வெறுத்தல்:
ஆம். சகுனியின் நோயே கணிகரின் நிறைவுக்கு மூகாந்திரம். அவர் சகுனி மீது கொள்ளும் வஞ்சம் சற்றே நுட்பமானது. கணிகர் தன் வாழ்வுக்கு சகுனியைச் சார்ந்தே இருக்கிறார். அவரிடமே அமைச்சராகவும் இருக்கிறார். உண்மையில் சகுனியின் உள்ளத்திற்கு உவப்பானவற்றையே அவர் செய்கிறார். இருந்தும் சகுனி அழிய வேண்டும் என்றும் விரும்புகிறார். ஏன்?
ஏனென்றால் சகுனி கணிகரை விரும்பவில்லை. தன் அஸ்தினபுரி மீதான பகையை தீர்க்க உதவும் ஒரு கருவியாகவே பார்க்கிறார். உள்ளூர கணிகர் பால் இளக்காரமும் இருக்கிறது அவருக்கு. மேலும் கணிகர் கொண்டு வரும் இருளை அவரின் ஒரு பகுதி ஏற்கவும் மறுக்கிறது. இவையெல்லாம் சேர்ந்து அவருக்கு கணிகர் மீது ஒரு வெறுப்பை, அருவருப்பை அவருள் எங்கோ தோற்றுவித்து இருக்கிறது. அவரையும் அறியாமல் இன்று நலமடைந்த கணிகரைக் கண்டதும் சுளித்த முகத்தைப் போல் ஏதேனும் உடல்மொழிகளை அவர் கணிகருக்கு முன்பும் அளித்திருக்கலாம். கணிகரின் உள்ளம் தான் இருளை உடனே கவ்வும் உள்ளமாச்சே. அங்கேயே இந்த வஞ்சம் நிலைபெற்றிருக்கலாம்.
கணிகரின் கனவு:
கணிகர் சகுனி மீது கொண்ட வஞ்சமே அவரின் வீழ்ச்சியைக் கனவாகக் காட்டுகிறது. மிகச் சரியாக சகுனியின் மரணத்தைக் காண்கிறார். அது மட்டுமல்ல அதைச் செய்வதும் வெண்ணிற சகதேவன் என்பதையும் காண்கிறார். அவர் சகதேவனுடன் வானின் மீன் குறித்தும் கேட்கிறார். இக்கனவில் இருந்து விழிக்கையில் உடலெங்கும் உவகையோடு எழுகிறார். மிக மிக கூர்மையான ஒரு அத்தியாயம்.
அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்