வாழ்க்கை புதுப்புது மனிதர்கள் மீதேறி புதுப்புது ஆடலை நிகழ்த்தி மீண்டும் மீண்டும் ஒரே நிலைப்புள்ளியில் வந்தே நின்று அமைதிக்கொள்கிறது.
காசி மன்னனுக்கு மகளாகப்பிறந்து ஒன்றென வளர்ந்து விசித்திரவீரியனுக்கு மனைவியாகி திருதராஷ்டிரனையும், பாண்டுவையும் பெற்ற அன்னைகள் அம்பிகை அம்பாலிகைகள் குழந்தைகள் பொருட்டு நெஞ்சம் பிரிந்து உள்ளம் கறுத்து நொந்து இறுதியில் பாண்டுவின் இறப்பில் ஒருவரை ஒருவர் தழுவி ஒருவராகி காடேகுவார்கள்.
அதே காசி மன்னனுக்கு மகளாகப்பிறந்து அன்னதை அணிகை இருவரும் ஒருவரென வளர்ந்து பிருஹத்ரதனை மணந்து ஒருவரென வாழ்ந்து குழந்தையின் காரணமாக இருவரென பிரிந்து, ஒருவரை ஒருவர் விளக்கி வாழ்ந்து, பெற்றக்குழந்தை பாதிப்பாதி என்று கண்டுக்கொண்டு மீண்டும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்துக்கொண்டு கண்ணீர்விடுகிறார்கள்.
அவர்கள் அணைத்துக்கொள்வதும் இவர்கள் அணைத்துக்கொள்வதும் ஒரு கணத்தின் சிறு நிகழ்வுதான் அதற்குள் வாழ்க்கையின் எத்தனை பெரிய நாடகம் நடந்து முடிந்துவிடுகிறது. அந்த நாடக்தின் இறுதியில் வந்து நிற்கும் தருணத்தில் மானிட உணர்வுகள் அன்றென்றும் இன்றென்றும் வேறு பட்டு நிற்பதில்லை.
உறவாக, நட்பாக, சுற்றமாக கூடி வாழும் மானிடர் ஏதே ஒரு கணத்தில் பிரிந்து ஏதோ ஒரு கணத்தில் வரும் பெரும் துயரத்தை ஆழத்தில் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறது. அந்த துயரும் அவர்களை வந்து அடைகிறது. அந்த துயரின் வழியாக அவர்கள் அனைத்து குற்றங்களையும் மறந்து இணைகிறார்கள்.
ராமராஜன் மாணிக்கவேல்