தாசார்கன் உடன்பிறந்தார் நூற்றுவரையும் கொல்கிறான். அல்லது கொல்வதற்குக் காரணமாக இருக்கிறான். அதனால் அவன்மீது மூதாதையர் நிழல் படர்கிறது. கலாவதியின் வருகைக்குப்பிறகு அவன் உடல் கருமை கொள்கிறது. மூதன்னையர் சொல்படி "உள்ளம் கொண்ட தொழுநோயை உடல் அறிகிறது". காகதீர்த்தத்தில் நீராடும்போது மூதாதையர் நிழல் அனைத்தும் நீங்குகிறது. காகவடிவில் வெளியேறுகிறது. கலாவதியின் உதவியால் அவன் கரையேறுகிறான். ஆனால் அக்காகங்கள் கலாவதியின் மனதிற்குள் தீராத கேள்வியை விதைத்துவிட்டுச் செல்கின்றன.
இன்று துரியோதனனும் தன் நகரம் மூதாதையர் நிழலிலிருந்து வெளியேற அதே காகதீர்த்தத்தில் நுழைகிறான். ஆழத்தைத் தாளமுடியாமல் தத்தளிக்கிறான். அப்போது கர்ணன் கலாவதிபோல் கரையேற உதவுகிறான். ஆனால் கர்ணன் இனி நிம்மதியாக இருக்கவியலாது. அதையே தீப்தரின் அந்தக்கேள்வி உணர்த்துகிறது. "அரசே, தாங்கள்..." என்று நிறுத்துமிடம் கர்ணனுக்கு நாமறியாத ஏதோவொன்று நிகழ்ந்ததைக் காட்டிநிற்கிறது.
துரியோதனனைப் பின்தொடர்ந்து காகதீர்த்தத்தில் காகங்கள் இறங்கிவிட்டன. நாடு நலம்பெற்றுவிடும். ஆனால் என்ன விதைக்கப்படவேண்டுமோ அது விதைக்கப்பட்டுவிட்டது. மற்றுமொரு சிறப்பான அத்தியாயம்.
திருமூலநாதன்