சத்யம் வத (உண்மையே பேசு)
சத்தியமேவ ஜயதே (உண்மை மட்டுமே வெல்லும்)
அசத்தோமா சத்கமய ( பொய்மையில் இருந்து என்னை உண்மைக்கு அழைத்துச்செல்வாய்)
வேத உபநிடதங்கள் உண்மைக்காக ஒயாது ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. உண்மையே ஒவ்வொருவரும் வேண்டுவதாகவும் இருக்கிறது. பொய்யின்றி உண்மையால் இருந்துவிட முடியும், உண்மையின்றி பொய்யால் இருக்கமுடியாது.
உண்மை எளிதான ஒன்று. உண்மை எவரிடமிருந்தும் தொலைவில் இல்லை ஆனால் உண்மையிடமிருந்து மனிதன் தொலைவில் இருக்கிறான்.
மகதத்தின் அணிகளை அணிந்துக்கொண்டு மகத அரண்மனைக்கு வந்த ஜராசந்தனை பிருஹத்ரன், அவன் மனைவி அணிகை, அன்னதை இவன் தன் மகன் என்பதை கண்டுக்கொண்டுவிடுகிறார்கள். உண்மை அவர்கள் அருகில் இருக்கிறது. ஆனால் அவர்கள் அப்போது உண்மையிடம் இருந்து வெகுதொலைவில் இருக்கிறார்கள்.
இவன் எவர் மைந்தன்? என்ற பத்தமரின் கேள்விக்கு அன்னதை அணிகை இருவரும் பொய்தான் சொல்கிறார்கள். ஆனால் அவனைக்கண்டதும் அந்த கேள்விக்கு அன்னதை அணிகையின் தோளைப்பற்றிக்கொள்கிறாள். உண்மையிடம் இருந்து வெகுதூரம் சென்றதில் அவள் கால்கள் சோர்கின்றன்.
தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தப்பின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்- என்கிறது திருக்குறள்.
பிருஹத்ரதன் ஜராசந்தன் கண்களை தோள்களை கண்டே தன் மைந்தன் என்று கண்டுக்கொள்கிறார் ஆனால் அவரும் பொய்யுரைக்கிறார். பொய்யாக இருக்கவேண்டும் என்று நம்புகின்றார். ஒவ்வொரு தந்தையும் சொல்லும் அந்த சொல்லையே சொல்கின்றார்.
//“என் குருதியிலிருந்து இப்படி ஓர் இழிமகன் உருவாக முடியாது. என் எதிரே வந்து தருக்கி நின்று பேசிய அக்காட்டாளனை நான் அறியேன்.”//
அணிந்துக்கொண்ட உடையையே உடலென தந்தையர் உள்ளம் நினைக்கிறது.அதையே தான் என கட்டமைத்து கொள்கிறது. அதற்கு தகுந்தபடியே நடக்கிறது. இந்த கட்டமைப்பிற்கு உடைக்கு அப்பால் நிலைநிற்கிறது உடலும் உள்ளமும் அங்கிருந்து வருகின்றன வாரிசுகள்.
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தார் காணப் படும்-என்கிறது குறள்.
பிருஹத்ரதன், அணிகை, அன்னதை வாழ்க்கையில் ஏன் இந்த பொய்மை, முரண்?
ஒரு பொய்யால் பல பொய்கள் உண்மையாகிவிடும் என்று மனித மனம் காலம்காலமாக நம்புகிறது. அந்த ஒரு பொய்யை உண்மைக்கு எதிராக வைக்கும்போது உண்மை தன் கூர்மையால் இன்னும் இன்னும் பொய்களை தோலுரித்துக்கொண்டே செல்கிறது. ஜராசந்தன் வரவில்லை என்றால் தனது இன்றைய பிள்ளைகள் அகம் எப்படி அறிவார் பிருஹத்ரதன் இ்பபோதும் அவர் இதைத்தான் சொல்லவேண்டும்.
//“என் குருதியிலிருந்து இப்படி ஓர் இழிமகன் உருவாக முடியாது. என் எதிரே வந்து தருக்கி நின்று பேசிய அக்காட்டாளனை நான் அறியே ன்.”//
மானிட அகம் அடியாழத்தில் கும்பிகளையும் மேலே தெளிநீரையும் கொண்டு உள்ளது. ஒரு அசைவு ஏற்படும்போது கலங்கி ஒம்பி மேலே வந்துவிடுகிறது. மனிதன் அதை கண்டு திகைக்கிறான். மானிட வாழ்க்கை எதிர்காலத்தின் மீது கொண்ட பயத்தால் பொய்களை துணைக்கு அழைக்கிறது. பொய் அவர்களை மீள மீள கைவிட்டுக்கொண்டே இருக்கிறது.
பிருஹத்ரதன் மனைவி குழந்தைகள் என்று இன்று நிற்கும் இடம் //கண்ணீரும் வசைச்சொற்களுமாக அவர்கள் இருண்ட பாதையில் நடந்தனர்//
பிருஹத்ரதனோ அவனது மனைவியோ உண்மை பேசி இருந்தால் கண்ணீரும் வசைச்சொற்களும் கிடைத்திருக்காது என்று சொல்லமுடியாது ஆனால் வெளிச்சத்தில் நின்று இருக்கமுடியும்.
உண்மையின் முகம் வெளிச்சத்தால் ஆனது.
ராமராஜன் மாணிக்கவேல்.