அன்புள்ள ஜெ
வெய்யோன் படித்துக் கொண்டிருக்கையிலேயே எழுத வேண்டுமென்று எண்ணி, இப்போதுதான் (பன்னிரு படைக்களம்) எழுதுகிறேன்.
ஒளி
வரைவதன் மூலம் இருத்தலுக்கு ஒரு பொருள் கொடுத்து அதற்கான நிழலையும்
கொடுக்கும் பெருங்கொடையொன் ஒரு நீண்ட கனவுலகினுள் இழுத்துச் செல்லப்
படுகிறான். துரியோதனன், மற்றும் ஜராசந்தன் வரைவுகள் புதிய புரிதல்
அளித்தது. துரியோதனனிடம் அன்பு பிறந்தது. 'மயனீர் மாளிகையில்' விழுந்து
விடப் போகிறானே என்கிற அச்சம் ஒரு ஆறு தினம் தொடர்ந்தது. சென்னையில் பெரு
மழை பொழிந்த பொது - சிறு பாம்புகளும் பூச்சிகளும் மேலேழுந்தன. மீண்டும்
மீண்டும் பொழியும் பெரு மழைகளும், சமூக கூட்டங்களை காக்க வேண்டிய
பெரு விழைவும் - பூ லோக, பாதாள லோக, தேவ லோக எல்லைகளை வரையறுத்து இருக்குமோ
என தோன்றியது. நாகர்களும் அவர்கள் கண்ணில் நுழைந்து காட்சி பெருக்குவதும்
படிக்க மிக புதிய அனுபவமாக விரிந்தது. அவர்கள் வஞ்ச சூழலை வளர்ப்பது
நாடகத்தின் உச்ச அனுபவமாக மேலிருந்து கீழே திடீரென விழும் ரோலர் கோஸ்டர்
பிராயண அனுபவம்.
பன்னிருகளத்தின் ஜராசந்தன்
காட்சிகளில் செங்கிஸ்கான் ஞாபகமே வருகிறது. நுண்ணிய அறிவு, பேராற்றல்,
அச்சமூட்டும் நிகழ்வுகளை நேரடியாக நடத்துவது என்று பல அடுக்குகள். அதே
சமயம் தன் வீரத்தைப் பற்றிய செருக்கும் பின்னொரு சமயம் வந்து, அந்த அரசனை
மேலும் உயர்த்தத்தான் போகிறது. இரண்டு பாகத்திலும் பல ஆழ் சிந்தனை இடங்கள்.
நேற்று ஒரு - பௌண்டரீக வாசுதேவனை கொன்றுவிட்டு
இளைய யாதவர் கூறுவது - "இன்று ஒருமுறை இறந்தேன் பார்த்தா”. சிந்திக்க
காலமும் இடமும் தருபவை. ஆண் முன் பெண் விழப்போகிறாள் என்ற முன்னுரை பற்றி
யோசித்தேன். பெண் விழுந்தால் அதைப் பற்றி கவலைப் படவேண்டியது அவள் அல்லவே
எனத் தோன்றியது. அந்த புள்ளிக்கு திரௌபதி நகருவாளோ ?
சற்றே
வேறொரு தலைப்பு - தினமும் தின மலர் கட்டுரை படிக்கிறேன். உங்கள் வேகமும்
வீச்சும் மனதில் பொறாமை எழுப்புகிறது . பூமணியின் அஞ்ஞாடி படிக்கிறேன்
தினம் 50 பக்கங்களாக - மனதில் மெதுவாக உட்கலக்கிறது. அந்த நடையும்,
மொழியும் மொழி மாற்றமும் மிக கவர்ச்சியாக உள்ளது. பின்னொரு சமயம் விரிவாக
பகிர ஆசை.
கடைசியாக எங்கள் கம்ப ராமாயணத்தில்
ராமன் அனுமனுக்கு சீதையின் அங்க அடையாளங்களை மிக விரிவாக விவரிக்கிறார்.
வால்மீகி ராமயணத்தில், ராமர் சீதையை பிரிந்த விரகத்தில் லக்ஷ்மணனிடம்
விரிவாக புலம்புகிறார். கூட்டத்தில் படிக்கும் போது சில பாடல்களின்
அர்த்தத்தை 'ஹோம் வொர்க்' ஆக கொடுத்து விட்டோம். அந்தக் காலத்தில், இதை
படிப்பது சாதரணமாக இருக்கலாம். இப்போது ஒரு தரும சங்கடம். எனினும் விஷயம்
அது இல்லை. சுந்தர காண்டத்தில், அனுமன் சீதையை பார்க்கும் போது (வால்மீகி)
சீதையின் அங்க அடையாளங்கள் சரியாக இருப்பதை குறித்து கொள்கிறார். ஆனால்
ராமன் சீதையின் அடையாளங்கள் கூறியதாக ஒரு பகுதியும் வால்மீகி
ராமாயணத்தில் இல்லை. அதைத் தான் கம்பர் தன் ராமாயணத்தில் விவரித்து
கூறியுள்ளார் எனத் தோன்றுவதாக ரஞ்சனி கூறினாள். சரி என்று தோன்றியது.
தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
அன்புடன்
முரளி
அன்புள்ள முரளி
இந்தவகையான வாசிப்பும் இதன் விளைவான ஐயங்களும் நவீன இலக்கியம், யதார்த்தவாத இலக்கியம் உருவானபின்னர் வருபவை. யதார்த்தவாத இலக்கியத்தின் அடிபப்டை என்பது காமன்சென்ஸ். ஆனால் பொதுப்புத்தி அடிப்படையில் காவியத்துக்கு எதிரானது. ஏனென்றால் அது கனவுக்கும் எதிரானது
காவியம் நடைமுறை உலகில் நிகழ்வதல்ல. அது வாழ்க்கையை அள்ளி வேறு ஒரு மேடையில் வைத்து அதன் நுட்பங்களை, உள்ளடுக்குகளை மட்டுமே ஆராய்கிறது. பொதுப்புத்தியை ரத்துசெய்துவிட்டு மேலே செல்லமுயல்கிறது. நளசரிதம் கதகளியில் நளன் அன்னப்பறவையிடம் அந்தரங்கங்களை முழுக்கச் சொல்லிக்கொண்டிருப்பான். இப்படி ஒருவன் சொல்வானா என எண்ணுபவனுக்குரியது அல்ல காவியம்.
கம்பராமாயணம் வருவது சந்தேச காவியங்கள் [ தூது வகை காவியங்கள்] உருவான பின்னர். ஆகவே தூது காவியங்களின் அழகியலை அந்த இடத்தில் கம்பராமாயணம் கைகொள்கிறது. அதை உணர்ந்தபின் அக்கூற்றிலுள்ள கவித்துவங்களை மட்டுமே கருத்தில்கொள்பவனுக்குரியது காவியம்
ஜெ