Tuesday, April 26, 2016

பாவனைகள்




அருணகிரிநாத சுவாமிகள் எம்பெருமான் முருகனிடம் நீயே என்னைக்கைவி்ட்டால் யாரை நத்துவேன். நான் வீணே சாகவேண்டுமா? நான் தவிக்கவேண்டுமா? உலகத்தவர் ஏசலில் துன்பப்படவேண்டுமா? உன்பாதம் தரவேண்டும் அதுவம் என்னைப்பார்த்து சிரித்தவர்கள் கண்கள் பார்க்கும்படி என்னை உன்பாதத்தில் வைத்து ஆதரிக்கவேண்டும் என்று வேண்டுகின்றார். பக்தனுக்கு மட்டும் இல்லை சும்மா கேளிப்பேசும் அறிவிலிகளுக்கும் காட்சிக்கொடு என்று வேண்டுகிறார். 


ஏது புத்தி ஐயா எனக்கினி
     யாரை நத்திடுவேன் அவத்தினிலே
          இறத்தல்கொலோ எனக்குனி ...... தந்தைதாயென்று
இருக்கவும்  நானுமிப்படியே
     தவித்திடவோ சகத்தவர்
          ஏசலிற்படவோ நகைத்தவர் ...... கண்கள்காணப்

பாதம்வைத்து இடை யாதே ரித்து எனை
     தாளில் வைக்க நியே மறுத்திடில்
          பார் நகைக்கும் ஐயா தகப்பன் முன் ...... மைந்தனோடிப்
பால்மொ ழிக்குரல் ஓலமிட்டிடில்
     யாரெடுப்பது எனா வெறுத்தழ
          பார் விடுப்பர்களோ எனக்கிது ...... சிந்தியாதோ

ஓத முற்றெழு பால்கொதித்தது
     போல எட்டிகை நீசமுட்டரை
          ஓட வெட்டிய பாநு சத்திகை ...... எங்கள்கோவே
ஓத மொய்ச்சடை யாட வுற்றமர்
     மான்மழுக்கர மாட பொற்கழல்
          ஓசை பெற்றிடவே நடித்தவர் ...... தந்தவாழ்வே

மாதி னைப்புன மீதி ருக்குமை
     வாள்விழிக் குறமாதினைத் திரு
          மார்பணைத்த மயூர அற்புத ...... கந்தவேளே
மாரன் வெற்றிகொள் பூமுடிக்குழலார்
     வியப்புற நீடு மெய்த்தவர்
          வாழ் திருத்தணி மாமலைப்பதி ...... தம்பிரானே.- திருப்புகழ்.

கலிங்கம் தனது அண்ணனை வீழ்த்தி தனது மக்களைக்கொன்று நாட்டை எரித்து பெண்களைச்சிறைப்பிடித்து சென்றபோது அஞ்சி சிறுநீர் கழித்தும் வலிப்புக்கொண்டும் வாழும் பௌண்டரீக கிருஷ்ணன். கால ஓட்டத்தின் திசைதிரும்புதலில் மன்னனாகி கலிங்கத்தை வென்று வங்கத்தை அஞ்சவைத்து மகதத்தின் நண்பனாகி புகழின் மாயையில் துவாரகை கிருஷ்ணன்போல் பெயரில் புனைவில் நடை உடைபாவனையில் கிருஷ்ண வாசுதேவனாக வந்து நிற்கிறான்.

பலகீனமும் பயமும் நோயும் அறியாமையும் கொண்ட மனிதக்கு தேவை மருந்து ஆனால் புகழ் ஒரு மருந்தென்று மாயை மனிதனை நம்பவைக்கிறது. பௌண்டரீகக்கிருஷ்ணனை புகழ் மாயை மயக்கியது என்பதை அவன் மகதத்தில் இருப்பதன் மகிழ்வைக்கொண்டே உணராலாம்.

//ஜராசந்தன் மட்டுமே விழிகளுக்குள் எங்கும் ஒருதுளி விலக்கமோ நகைப்போ இல்லாமல்கிருஷ்ணவாசுதேவரேஎன்று பௌண்டரீகனை அழைத்தான். அதனால் பிற எங்குமிருப்பதைவிட மகதத்தின் அவையிலமர்ந்திருப்பதையே பௌண்டரீகன் விரும்பினான்//

அச்சம் நோய் பலகீனம் அறியாமைக்கொண்டு வாசுதேவ கிருஷ்ணனாக நடிக்கும் பௌண்டரீக கிருஷ்ணனுக்கு என்னதான் புத்திமதி? யார் சொல்வது? துவாரகைக்கே தூது அனுப்பி பெயர் மாற்றிக்கொள்ள சொல்லும் இந்த அறிவிலியை யார்த்தான் கறையேற்றுவது? பால்மொழி குரலில் ஓலமிடும் குழந்தையை யாராவது தூக்கட்டும் என்று தந்தையால் இருக்கமுடியுமா? வாசுதேவகிருஷ்ணனின் ஆடிப்பிம்பம் அல்லவா அவன். அவனை கரையேற்ற அவன்தான் வரவேண்டும்.

பாஞ்சாலி திருமணத்தில் எதிரே வந்த கண்ணனைக்கண்டு இருந்தால் இந்த நடிப்பு தேவை இருந்து இருக்காது. புகழ்மாயைில் உருவான ஆணவமாயை கண்களை மறைக்கின்றது. உங்களைப்போலவே இருக்கிறான் என்று அமைச்சர் சொன்னபோதும் திரும்பிப்பார்க்காமல் செல்கிறான். அன்று கண்களை மூடிவன் பின்பு எப்போதும் ஆடியைப்பார்ப்பதையோ வாசுதேவன் புகழைக்கேட்பதையோ நிறுத்திவிடுகின்றான். மீண்டும்  இன்று கண்ணனுடன் போருக்கு செல்கையில் அவன் கண்கள் திறப்பதும் செவிகள் கூர் கொள்வதும் அற்புதம் அழகு.

//தன் விழிகள் அத்தனை ஒளியுடன் முன்பிருக்கவில்லை என்றும் செவிகள் அத்தனை கூர்கொண்டிருந்ததே இல்லை என்றும் தோன்றியது. ஒவ்வொரு இலைநுனியையும் கண்டான். ஒவ்வொரு பறவையோசையையும் அறிந்தான்//

அறியாமை புகழ் மாயையில் நிற்கும் ஒருவனுக்கு போரே ஒரு தவமாகி ஒளிஉண்டாக்கி நிறைநிலைக்கு கொண்டுச்செல்கிறது. ஒவ்வொரு போரும் ஒரு மாயையின் பிடியில் இருந்து விளக்க வழிசெய்கிறது. படையாழிக்கு தனது தலையை கொடுக்கும் சமயத்தில் அவனுக்கு அறியாமையும் புகழ்மாயையும் கலைந்து உண்மை ஒளி உண்டாகிறது. அங்கு பௌண்டரீக கிருஷ்ணவாசுதேவன் கைக்கூப்பவது முக்தி. கண்ணனும் அவன் முன் கைக்கூப்பி செல்வது அற்புதம்.

தகப்பனும் மகனும் வேறா? வாசுதேவ கிருஷணனும் கிருஷ்ணவாசுதேவனும் வேறா? பக்தனும் இறைவனும் வேறா? ஒன்றுதான். ஆடிப்பாவைகள். ஒருவரை ஒருவர் பொருதிக்கொண்டே இருக்கிறார்கள். உண்மை ஒளிவீசும்போது இருவரும் ஒன்றென ஆகிவிடுகிறார்கள்.

இன்று ஒருமுறை இறந்தேன் பார்த்தாஎன்றார் இளைய யாதவர் மொழிதான் இரண்டென நடிப்பவை எல்லாம் இரண்டல்ல ஒன்றே என்று மையம்கொள்வதை காடடுகின்றது. 

ராமராஜன் மாணிக்கவேல்