Saturday, April 16, 2016

ஆயிரம் கவசங்கள்:


பன்னிரு படைக்களம் புராணங்களை நாம் அணுக வேண்டிய முறைக்கு ஒரு புது வெளிச்சம் பாய்ச்சியிருக்கிறது. இன்று வந்த சஹஸ்ரகவசனின் கதையை எடுத்துக் கொள்வோம். உண்மையில் அந்த ஆயிரம் கவசங்கள் என்பது என்ன? நாம் நம்மைச் சுற்றி நாம் அணிந்திருக்கும் வேடங்கள் தானே (ஜெ வின் பத்து சட்டைகள் என்ற கட்டுரை இதற்கு மிகச் சிறந்த உதாரணம்). 


உண்மையான நாம் என்பது இவ்வேடங்களால் நமக்கே தெரியாமல் போயிருக்கிறது. வெண்முரசின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு துர்வாசர். மழைப்பாடலில் குந்தி, துர்வாசர் அவர் மீது பிறர் ஏற்றி வைத்திருந்த வேடங்களையே நடித்தார் என்று சொல்கிறாள். இங்கே சஹஸ்ரகவசனும் இந்த ஆயிரம் கவசங்களை அணிந்தவனாக, தன் உண்மையானவனை தானே உணராதவனாக வாழ்ந்துவருகிறான். 

அப்படி தன்னை மறைத்து நடிக்கும் ஒருவன் தன் வேடங்களில் ஒன்றையேனும் உணர்ந்து துறக்க வேண்டும் என்று முடிவெடுத்தால் அது வரை அத்தனை வேடங்களை நடித்து வந்த அவன் மனம் அந்த துறக்கும் எண்ணத்தை உடனடியாக அழித்து விடும். அதைத்தான் அந்த ஒரு கவசத்தை உடைப்பவன் தலை உடனடியாக வெடித்து விடும் என்ற வரம் உணர்த்துகிறது. அப்படியென்றால் எப்படித் தான் உண்மையான நாம் என்பதை அறிவது? 

அந்த கவசங்களை, வேடங்களை எப்படித் துறப்பது? முதலில் உண்மையான நாம் இந்த ஆயிரம் கவசங்களுக்கு அடியில் இருக்கிறோம் என்பதை அறியும் அறிதலே முதன்மையானது. அதற்குத் தான் ஊழகம் தேவைப்படுகிறது. அந்த வேடங்கள் எதையும் தரிக்காத சுயத்தின் ஒரு துளியாவது எஞ்ச வேண்டும். அதனுடன் இணைந்து இந்த வேடங்களைத் துறக்க வேண்டும் என்ற எண்ணமும் உள்ளே தோன்ற வேண்டும். துறக்கும் எண்ணம் அழிய அழிய நம்முள் எஞ்சிய சுயத்தின் துளி அந்த எண்ணத்தை மீண்டும் மீண்டும் உருவாக்க வேண்டும்

. இந்த போரின் மிக சுவாரசியமான திருப்பமே அத்தகைய எண்ணத்தை அழிக்க நினைக்கும் மேல் மனம் கொள்ளும் மா
ற்றம் தான். வேடங்கள் களையக் களைய மனமும் இணைந்து அவற்றை இழக்க விரும்பத் துவங்கும். இறுதியில் இருக்கும் கவசமும் அழிந்து உண்மையான நாம், நம்முள் எஞ்சிய துளியுடன் ஒன்றாக இணைந்து விடுவோம். மிக அருமையாக இதை நர நாராயணர்களாகவும், ஆயிரம் கவசம் கொண்ட தம்போத்பவனாகவும் புராணமாக்கியிருக்கிரார் ஜெ. ஏன் ஜெ என்கிறேன் என்றால் இக்கதைக்கு இப்படி ஒரு பொருளைத் தரும்படிக்கு அமைத்தது அவரென்பதால் தான். 

அருணாச்சலம் மகராஜன்