Saturday, April 16, 2016

புனைவின் விதிகள்



ஜெ,

எங்கிருந்தோ ஒரு இணைப்பின் வழி வெண்முரசின் ஏதோ ஒரு தத்துவமும் குறியீடும் மட்டுமேயான ஒரு அத்தியாயத்தைப் படித்து, அப்போது எனக்கு இருந்த இலக்கிய வாசிப்பின்மையால் வெண்முரசே மிகத் தட்டையானது என நினைத்துக் கொண்டு இருந்தேன். பின் மீண்டும் ஒரு சுட்டியின் வழி வெண்முரசிற்கு வந்து , படிக்கவும் வேண்டுமா எனத் தயங்கி, திருதாவுடன் பாண்டவர்கள் "வெண்முகில் நகரத்"தில் நிகழ்த்தும் சந்திப்பை வாசித்து உளம் கரைந்தேன். ஐயையோ,இத்தனை நாள் இதையா படிக்காமல் இருந்து விட்டோமென பதறி அடித்து முதற்கனலுக்கு ஓடினேன். அதன் முதல் அத்தியாயத்தைப் படிக்கும் போதே வாழ்நாள் முழுதும் உடன் வரும் படைப்பு என வெண்முரசை உணர்ந்தேன். அன்றிலிருந்து இன்று வரை வெண்முரசின்றி ஒரு நாளும் கழிந்ததில்லை. அன்று இருபத்துமூன்று மறுநாள் இருபத்தேழு என முதற் கனலை முடித்தேன். இவ்வளவு வேகத்தால் பலவற்றை கவனிக்காது விடுகிறேன் என்று மழைப் பாடலின் முதலிரு அத்தியாயங்களை நாளுக்கொன்றென இரு நாட்களில் படித்தேன். பின் இதைல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என எனது வேகத்தில் படிக்க ஆரம்பித்து நீலம் நீங்கலாக வெண்முகில் நகரம் வரை அதன் கடைசி நாள் அன்று படித்து முடித்தேன். அன்றிலிருந்து நள்ளிரவில் அன்றைக்கான அத்தியாயத்தையும், மாலையில் ரேண்டமாக ஏதோ ஓர் அத்தியாயத்தையும் படித்து வருகிறேன். இரு நூல்களுக்கு இடையில் ஒரு நூல் மறுவாசிப்பு மற்றும் ரேண்டம் அத்தியங்கள்.


நிற்க,

இரு நாட்களுக்கு முன்பாக ஜராசந்தன் தன் தம்பியரைக் கழுவேற்றியது தொடர்பான எனது கடிதத்தைப் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அது வெண்முரசு க்காக நான் எழுதிய நான்காவது கடிதம். முதற் கடிதத்தைத் தவிர்த்து மற்ற மூன்றும் ஏதோ பிழைகளைச் சுட்டும் தொனியுடனே அமைந்து இருந்தது வருத்தத்திற்கு உரியது. அதற்கான எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் குறை சொல்லும் மனநிலை எவ்வாறு வந்தது எனத் தெரியவில்லை. அதைத் தங்களிடம் சுட்டிக் காட்டியது எனது அறிவைத் தம்பட்டம் அடிக்கும் நோக்கில் இல்லை. வெண்முரசில் தகவல் பிழை என்பதை என் உள்ளம் ஏற்க  மறுக்கிறது. ஏனெனில் அது என்னுடைய இலட்சிய படைப்பு. அதன் முதல் அத்தியாயத்தைக் கடந்த ஏப்ரலில் படித்ததில் இருந்து அப்படித்தான்.

வெய்யோனில் அங்கத நாடகத்தில் இருந்து அந்த பிணைப்பு இன்னும் அதிகம் ஆகியது. முழு நிலவு நாளில் சூரிய கிரகணம் வருமா? எனக் கேட்டது கூட அதனால் தான். அதற்கு நீங்கள் சரியான விளக்கம் அளித்தும் கூட என்னால் அதை ஏற்க முடியவில்லை. முழு நிலவு நாள் என ஒரு இடத்தில் தான் வருகிறது ( பீமன் துரியனை அ ழைக்குமிடம்) .அதை மட்டும் "கருநிலவு" என மாற்றினால் என்னவாம் என யோசித்துக் கொண்டு இருந்திருக்கிறேன்

வெய்யோனில் ஆள் நுழைய முடியாத நச்சுக் காடாக வரும் காண்டவம், வெண்முகில் நகரத்தில் திரெளபதி கிருஷ்ணனிடம் இந்திரப் பிரஸ் தத்தைப் பற்றி விவரிக்கும் இடத்தில் யாதவர் சென்று இந்திரனை வழிபடும் மலை உள்ள இடமாக வருவதை நினைத்து மனம் பதைத்திருக்கிறேன். வெய்யோனுக்குப் பின்னான மறுவாசிப்பில் தான் அதைக் கண்டறிந்தேன் என்பதால் அப்பொழுது கடிதம் எழுதவில்லை.

நான் தங்களிடம் கேட்க வருவது இரண்டு தான்.

1. இரு நூல்களுக்கு இடையே இருக்கும் தகவல் முரண்களைப் பிழையென கொள்ளலாமா? அல்லது "தகவல் பிழைகள் புனைவின் அடிப்படை " எனும் பேயோனின் பகடி வாக்கியம் உண்மையா?

2. அதைத் தங்களுக்கு நச்சரிப்புக் கடிதமென எழுதலாமா?
அன்புடன்,
செந்தில்நாதன்.

அன்புள்ள செந்தில்நாதன்

நீங்கள் சுட்டிக்காட்டிய பிழைகளை நான் திருத்திக்கொள்கிறேன்

வெண்முரசு ‘எழுதிமுடித்த’ நாவல் அல்ல. எழுதபப்ட்டுக்கொண்டிருப்பது. அதன் வாசகர்கள் ஒருவகை இணை ஆசிரியர்கள். ஆகவே அதன் ஆக்கத்தில் அவர்களுக்கும் பங்குண்டு. ஆகவே பிழைகள் சுட்டிக்காட்டப்படுவது நல்லதே.

உலகில் எழுதப்பட்ட அத்தனைபடைப்புகளும் பிழைநீக்கம் செய்யப்பட்டுள்ளன. அடுத்தடுத்த பதிப்புகளில்கூட. பிரசுரமாகி 30 ஆண்டுகளுக்குப்பின்னர்கூட பிழைநீக்கம் செய்யப்பட்ட போரும் அமைதியும் வெளிவந்தது. தல்ஸ்தியின் மாணவரான செர்க்கோவ் அதைச்செய்தார்

பிழைகள் பலவகை. ஒருகதாபாத்திரம் அல்லது நிகழ்வு ஆசிரியன்முன் தோன்றும்போது அது எவ்வளவு முக்கியமென்று அவனுக்கே தெரியாமலிருக்கும். அது வளர்கையில் அதன் தொடக்கம் பொருத்தமில்லாமலிருக்கலாம்

ஆசிரியன் மனதில் சிலதகவல்கள் இடம்மாறி கிடக்கும். உருமாறி வெளிப்படும். அது ஏன் என அவனால் சொல்லமுடியாது. அது அவன் உளவியல்பதிவு. அந்த உளவியல்பதிவு புனைவெழுத்துக்கு முக்கியமானது. 

உதாரணமாக நரசிம்மம் இரணியனைக் கொன்றபோது அருகே அவன் மனைவியும் இருந்தாள் என ஒர் ஆசிரியன் உள்ளத்தில் தோன்றுவது என்பது ஆசிரியனின் உளவியலுக்குள் செல்லும் முக்கியமான வழி. அது பிழை என விமர்சகர் கொள்ளமாட்டார்கள். அதை புனைவின் விரிசல்கள் என்றே சொல்வார்கள். புனைவின் உள்ளே செல்லும் ரகசியப்பாதை அது


ஒரே விஷயம் பலரால் பலகோணங்களில் சொல்லப்படலாம். பல வகை சித்திரங்கள் இருக்கலாம். பலவகை கதைகூறல்களில் பலவகையான மனப்பதிவுகள் நாவலில் வரலாம். அந்த வேறுபாடேகூட ஒருவகை யதார்த்தம்தான்.

புனைவெழுத்து என்பதே நுணுக்கமாக தகவல்களை உருமாற்றுவதுதான். அது ஏன் என்பதைத்தான் பெரும்பாலும் வாசகன் கவனிப்பான்.

தகவல்கள் அல்ல கலை. தகவல்கள் குறியீடுகளாக ஆகி சென்றடையும் அகஆழம்தான். அதை அறிந்தவர்கள் தகவல்களில் சிக்கிக்கொள்வதில்லை.

ஜெ