Thursday, November 2, 2017

திருவடி தொழுதல் (எழுதழல் 31)



    என் வீட்டில் நிறைய கண்ணனின் சிறு சிறு சிலைகள் இருக்கின்றன. அவற்றில் பெரிதாக இருப்பது ஒரு சுடுமண்ணாலான  வண்ணச்சிலை.   கண்ணன் அச்சிலைமூலம் என்னைப்பார்த்து புன்னகைத்தவண்ணம் இருப்பான். அவனை தொட்டணைத்துக்கொள்ள மனம் விரும்பினாலும்  அதற்கான தகுதி எனக்கிருக்கிறதா என்ற தயக்கத்தின் காரணமாக அவ்வாறு செய்வதில்லை. ஆனால் அவன் திருவடிகளை கைகளால் பற்றிக்கொள்வேன். அது மனதிற்கு மகிழ்வளிப்பதாகநிறைவளிப்பதாக இருக்கும்.     அவனின் திருவுருவச் சிலையின் பாதங்களைத்  தொடவே நம் உள்ளம் பூரிக்கின்றதென்றால்  உண்மையுருவில் இருக்கும் கண்ணனின் பாதத்தை பார்ப்பதற்கும் அதை திருமுழுக்காட்டு செய்வதற்கும் பிரலம்பன் எவ்வளவு உள்ளம் பூரித்திருப்பான் என்பதை நம்மால் உணர முடிகிறது
   

ஆனால் ஏன் அவன் பாதங்கள் நமக்கு அவ்வளவு நிறைவளிக்கின்றன?   ஒரு நாயகனின்  அங்கத்தில் கால்கள் அவ்வளவு சிறப்பு மிக்கதா என்ன?   பெரிய விஷயங்களைத் தாங்கி நிற்கும் கால்கள்  எப்போதும் நாம் அணுகுவதற்கு எளிதானவைஇப்பிரபஞ்சம் என்ற  தேவனின் பாதங்களாக இந்தப் பூமியைக் கொள்ளலாம். ஏனென்றால் நமக்கான பிரபஞ்சம் நம் பூமியிலிருந்துதான் ஆரம்பிக்கிறதுஇந்தப் பூமியே நமக்கு உகந்தது. பிரபஞ்சத்தில் இருக்கும் மற்ற கோள்கள் விண்மீன்கள் எல்லாம்  நாம் வாழும் பூமியைவிட பெரிதாக இருக்கலாம்ஆனால் அவையெல்லாம நமக்கெட்டாத தொலைவில் இருப்பவை.   அப்படியே பரமாத்மாவின் திருவடிகளாக நம்முடைய ஆன்மாவைக் கொள்ளலாம். ஏனென்றால் அந்தப் பரமாத்மாவை நம் ஆன்மாவின் வழியாகவே அறிகிறோம். ஆன்மாவை மறைத்திருக்கும் மாயை அகலும்போது அதிலிருந்தே  பேரான்மா பேருருக்கொண்டு எழுகிறது.   தன் ஆன்மாவை அறிவதன் மூலமாகவே அந்தப் பேரான்மாவை அறிய முடிகிறதுகுழந்தை தந்தையின் கால்களை இறுக்கி அணைத்துப் பிடித்து அடம் செய்து பின்னர் அவர் தோள்களில் ஏறிக்கொள்வதைப்போல  பக்தர்கள் சகுண பிரம்மமாக ஒன்றை கொண்டு போற்றி வழிபட்டு அந்த   நிர்க்குண பிரம்மத்தை அடைகிறார்கள்.
    

கண்ணனின்   கனிவு காட்டும் இதழ்கள், அருள் புரியும் கரங்கள், அறத்தைத் தாங்கும் தோள்கள், திரு வாழும் மார்பகம், உலகம் சிருஷ்டிப்பவனை சிருஷ்டிக்கும் உந்திச்சுழி  போன்ற   மற்ற அங்கங்களெல்லாம்  வானத்து மின்மீன்கள் போல அழகு  மிக்கவை. ஆனால் அவை நாம் தொடமுடியாத உயரத்தில் இருப்பவை. அவன்  பாதங்களோ  நாம் வாழும் அதே மண்ணில் நின்றிருப்பவை.    அவையே நாம் அணுக எளிதானவைஅவன் நம் உளம் விட்டு  எழுந்தோடமுடியாமல்  சிக்கெனப் பிடித்துக்கொள்ள வாகானவை அவையே. அப்படி நாம் பிடித்துக்கொள்கையில் அவன் நம்மை விட்டகன்று எங்கெழுந்தருளுவதினி?   இப்படி  அவன் பாதங்களைப் போற்றி வணங்கிநின்றால் போதாதாஅதுவே அவன் கரங்கள் நீண்டெழுந்து நம் தலைதொட்டு ஆசியளிக்க வைக்காதாஎன்ன?
 
பிரலம்பன் அவர் கால்களை நோக்கி கண்களை தாழ்த்திக்கொண்டான். ஆம், இதுவே உகந்தது. இதுவே எனக்குப் போதுமானது. கால்கள் இத்தனை அழகுகொள்ளுமா? இவை மண்ணை மிதிக்கவும்கூடுமா? ஆனால் இவை மண்ணை அறிந்தவை. ஆகவே எனக்கு அணுக்கமானவை. இவைகொண்ட எழில் நான் வாழும் மண்ணால் அளிக்கப்பட்டது.
 
  
அவன் உள்ளம் நெகிழ்ந்து கண்களில் நீர் நிறைந்திருந்தது. உடல் நடுங்கிக்கொண்டிருக்க அண்ணாந்து அவர் முகத்தை பார்க்க வேண்டுமென்ற விருப்பை தவிர்த்தான். அக்கால்களைத் தொட்டு விழியொற்ற வேண்டுமென்று எடுத்த கைகளை பிறிதொன்று தடுத்தது. அதைவிடப் பெரிதொன்று வந்து அதை அறைந்து வீழ்த்தியது. இனியொரு தருணம் இல்லை உனக்கு என்றது. தன் இரு கைகளையும் அக்கால்களில் வைத்து தொட்டு கண்களில் ஒற்றினான். இளைய யாதவரின் கைகள் அவன் தலைமேல் பட்டன. அவன் விழிநீர் அக்கால்களின்மேல் உதிர்ந்தது.


 பக்தியென்பது பூஜை புனஸ்காரங்களா? இறைப் பாடல்களைப் படிப்பதும் புனைவதும் பஜனைசெய்வதுமாக இருப்பதா? அல்லபெரிதினும் பெரிதான ஒன்றின் மேல்  நம்முள் பொங்கி எழும் பேரன்புஅந்த அன்புகொண்டு  அர்ச்சிப்பதற்கான  உயரிய  மலர்கள் நம் விழிநீர்த்துளிகள் மட்டுமே அல்லவா? அவன் பாதங்களை  நாம் வணங்கி நிற்பது பேறென எதையும் பெறுவதற்கு  இல்லை. மாறாக அப்படி வணங்கி நிற்பதுவே நமக்கு பெரும்பேறு.    அந்தப் பேறை வெண்முரசின்  எளிய பாத்திரமான பிரலம்பன் அடைவதை வெண்முரசு இன்று நமக்கு காட்சிப்படுத்துகிறதுஅவனுடன் நாமும் அந்தப் பாதங்களை தொட்டு மகிழும் பேறைப் பெற்றதாகவே கருதுகிறேன்.


தண்ட்பாணி துரைவேல்