Sunday, November 25, 2018

பீஷ்மர்



இனிய ஜெயம் 

இன்றைய அத்யாயம் உள்ளுக்குள் கிளர்த்தும் பெருந்துயரை விவரிக்க வகையே இல்லை . அனைத்து நெறிகளையும் கைவிட்டு ஒரு கிராதனாக மாறி போர் புரிகிறேன் என்று சொன்ன தேவவிரதரால் அது இயலவில்லை .கிராதன் என்றான பிறகு அருகே கர்ணன் நின்றால் என்ன எந்த கீழ்மகன்தான் நின்றால் என்ன ? ஏன் அவர கர்ணனை இணைத்துக் கொள்ள வில்லை ?  கிராதன் என்றான பிறகு எதிரில் நிற்பது சிகண்டியாக இருந்தால் என்ன ? பார்த்தனாக இருந்தால் என்ன ?  கொன்று உடல்களை சிதைத்து ,தலைகளை பந்தாடி முன் செல்ல என்ன தயக்கம் ? 

ஆம் அவரால் ஒரு கிராதனாக மாற இயலவில்லை என்பதே நிதர்சனம் .  அனைத்து நெறிகளும் ஒரு கணம் வழுவட்டும் என நீலன் கையுயர்த்தி அனுமதி தந்து விட்டான் . மைந்தனும் மைந்தனுக்கு ஒப்பானவனும் இணைந்து ,வெல்ல இயலா ஆளுமையை கொன்று வீழ்த்தி விட்டனர் . பீஷ்மரை வெல்ல இயலவில்லை .கொல்ல மட்டுமே முடிந்தது . பீஷ்மரை நோக்கி காண்டீபம் உயர வேண்டிய அக் கணம் நீலனின் முகம் கொள்ளும் சீற்றம் யார் மீது ? நெறிகளை மீற இயலா அர்ஜுனன் மீதா ? அல்லது அன்று சபையில் நெறிகளை கைவிட்டு மௌனம் காத்த பீஷ்மர் மீதா ? 

அவரவர் ஆயிரம் நியாயம் சொல்லி நீலனை ஏசலாம் .  அது அவ்வாறுதான் நிகழும் .  அனால் நீலன் மட்டுமே அறிவான் .அவன் பீஷ்மருக்கு பெற்றுத் தந்தது விடுதலை . அன்று உப்பரிகையில் சிலைத்து நின்றுவிட்ட வாழ்வில் சிக்கிக் கிடந்த சம்படைக்கு ,எந்த விடுதலையை அளிதானோ அதே விடுதலையை . கூடிப் பேசும் ஆயிரம் ஆயிரம் தர்ம நியாயங்கள் கடந்து நீலன் மட்டுமே அறிவான் ,எந்த நெறிகளையும் கடந்து ,உடைத்து வீசி முன்சென்று , பீஷ்மருக்கு அளிக்கப்படும் மரணம் என்பதின் பின்னுள்ள பெரும் கருணையை .  கருணைக் கொலை . நீலனால் மட்டுமே புரிந்து கொண்டு ,அளிக்கப்படக் கூடியது .   யாராலும் புரிந்து கொள்ள இயலாத மாயக் கண்ணனின் நீலச்சேவடிகளை இக் கணம் கோடி முத்தங்கள் இட்டு வணங்கத் தோன்றுகிறது 

கடலூர் சீனு